Advertisements

எல்லோருக்கும் ஏற்ற 2 மணி டயட்

வெஜிட்டேரியன், நான் வெஜிட்டேரியன், வீகன், பேலியோ, டீடாக்ஸ் என எத்தனையோ உணவுமுறை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘2 மணி டயட்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அது வேறொன்றும் இல்லை. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை உணவு உண்ணும் முறைதான் ‘2 மணி டயட்’. எடையைக் குறைக்க நினைப்பவர்கள், எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்ற உணவுமுறை இது என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்களும்,

மருத்துவர்களும். உணவியல் நிபுணர் கோமதி கௌதமனிடம் இது பற்றிக் கேட்டோம்…
‘‘இந்தியாவில் ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் சிறியவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எந்த பாரபட்சமும் இல்லை. இதற்கு முக்கிய காரணம் சரியான உணவுகளை, சரியான நேரத்தில் உட்கொள்வதில்லை என்பதே.
அதிலும் 3 வேளை உண்பதால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக உள்ளோம் என்று நினைத்துவிடக் கூடாது. உணவை ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டால்தான் இது போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான உடல் நிலையைப் பெற முடியும்’’ என விவரிக்கிறார் கோமதி கௌதமன்.
2 மணி நேரத்துக்கு ஒருமுறை ஏன் சாப்பிட வேண்டும்?
‘‘நமது உடலில் பெரும்பாலும் பல பிரச்னைகள் எழுவதற்கு காரணம் சீரற்ற உணவு பழக்க வழக்கங்கள்தான். 3 வேளை உணவுகள் மட்டும் உடலுக்கு
ஆரோக்கியத்தை வழங்காது. நாம் சாப்பிடும் உணவானது 5 அல்லது 7 முறைகளாக பிரித்துச் சாப்பிட வேண்டும். அவ்வாறு பிரித்து சாப்பிடும்போது நமது உடலில் இருக்கும் செரிமான மண்டலம் நன்கு செயல்படும். இதனால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வராது. உடல்
ஆரோக்கியமாக இருக்கும்.’’
பசி இல்லாமல் இருக்கும் நிலைகளில் கூட இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டுமா?
‘‘நிச்சயம் இல்லை. பசியே இல்லாமல் சாப்பிடக் கூடாது, அதேபோல் பசி அதிகரிக்கும் வரை சாப்பிடாமல் இருக்கக் கூடாது. உணவுகளை சிறிது சிறிதாக எடுத்துக் கொள்வதால் நமது ஜீரண மண்டலம் ஒழுங்காக வேலை செய்யும்.
உதாரணமாக, எளிதில் ஜீரணமாகக் கூடிய பொருட்கள், ஆவியான உணவுப் பொருட்களை காலையில் சீக்கிரம் சாப்பிட்டால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தானாகவே பசி எடுத்துவிடும். இதுபோன்ற கால அளவைக் கொண்டு கணக்கிட்டு சாப்பிட வேண்டும். இதனால் நோய் வராமல் தடுக்கலாம் மற்றும் தேவையற்ற உடல் எடை கூடுவது மற்றும் குறைவது போன்ற பிற பிரச்னைகள் வராமலும் தடுக்க முடியும்.’’
இந்த அவசர காலத்தில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடுவது சாத்தியமானதா?
‘‘இது ஆரம்ப காலக்கட்டத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் 3 அல்லது 5 நாட்களுக்குள் பழகிவிடும். அதன் பிறகு ஒரே வேளையில் அதிகமான அளவு உணவை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். குமட்டல் வந்துவிடும். பிறகு தானாகவே பசிக்கும். ஆதலால், உணவு கட்டுப்பாடு இயல்பாக நமக்கு வந்துவிடும். உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்காது, சீரான உடல் வலிமையுடன் இருக்கலாம்.’’
சிறியவர்களுக்கும் இதுபோன்ற உணவு கட்டுப்பாடுகள் அவசியமா?
‘‘இன்றைய நிலையில் சிறியவர்களும் மிகுந்த எடையுடனும், எடை குறைவாகவும் காணப்படுகிறார்கள். சீரற்ற உணவு பழக்கம் மற்றும் துரித உணவுகளாலும் அவர்களின் உடல் எடை பிரச்னையால் பாதிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர் என்பதால் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கொடுக்கின்றனர்.
இது மிகவும் தவறானதாகும். எனவே, எடை அதிகமாக இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு காலையில் ஆவியால் வேகவைக்கப்பட்ட சிறிய அளவு உணவை சாப்பிட கொடுத்துவிட்டு. 2 மணி நேரம் கழித்து மினரல்ஸ், வைட்டமின் மற்றும் கொழுப்பற்ற புரதம் இருக்கும் உணவுப் பொருட்களை தர வேண்டும்.
அதேபோல் எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் காலை உணவுக்குப் பிறகு கொழுப்பு அதிகம் கொண்ட தயிர், சீஸ், நெய் போன்ற பொருட்களைக் கொடுக்கலாம். இவ்வாறு அவர்களுக்கு குழந்தை பருவத்திலிருந்து பழகி வந்தால் உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வார்கள்.’’
வயதானவர்களுக்கும் இந்த உணவு முறை ஏற்றதா?
‘‘வயதானவர்களும் இந்த முறையை கடைப்பிடிக்கலாம். காலையில் சீக்கிரம் சாப்பிட்ட பிறகு 11 மணி அளவில் மோர், எனர்ஜி பானங்கள் போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம். உணவுக்குப் பிறகு மாலையில் புரதம் உள்ள சுண்டல், தானிய வகைகளைச் சாப்பிட வேண்டும். இரவு உணவுக்கு முன்பு பழங்கள் சாப்பிடுவது நல்லது.’’
எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் இந்த உணவு முறை சிறந்ததா?
‘‘பொதுவாக உணவு குறைவாக சாப்பிட்டால் உடல் குறைந்து விடுமென்று பல பேர் சாப்பிடாமல் இருக்கிறார்கள், அது மிகவும் தவறானதாகும். சாப்பிடாமல் இருந்தால் எடையைக் குறைக்க முடியாது. எடை குறைக்க சரியான உணவு முறைப்பழக்கமே முக்கியமாகும். காலை உணவில் எளிதில் ஜீரணமாகக் கூடிய பொருட்களை சாப்பிட்டு 2 மணி நேரத்துக்குப் பிறகு பப்பாளி, கொய்யா, மாதுளை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பழச்சாறை விட பழங்களாக சாப்பிடுவது நல்லது. இதனால் நார்ச்சத்து கிடைக்கும். மதிய உணவில் கொழுப்பு இல்லாத புரதச்சத்து பொருட்கள் எடுத்துக் கொண்டு மாலையில் கிரீன் டீ, கொழுப்பு இல்லாத பானங்களைச் சாப்பிடலாம். இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எளிதில் எடையைக் குறைக்கலாம், அத்துடன் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கலாம்.’’
எடையை அதிகரிக்க விரும்புவோர்கள் எந்த முறைகளில் எடுத்துக் கொள்ளலாம்?
‘‘உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று சிலர் 3 வேளையும் அதிகமான அளவு உணவை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்களின் உடலுக்குத் தேவையான முழுச்சத்தும் அவை சென்றடையாது. பாதி சத்து மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும். எனவே, உணவில் அளவு கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானதாகும். அது எடை அதிகரிக்க விரும்புவோர்களும் கடைப்பிடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகு ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், மாம்பழச் சாறுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கலாம். மாலையில் தேநீருடன் கேக் போன்ற பொருட்களை சாப்பிடலாம்.’’
கர்ப்பிணிகளும் இந்த முறையில் உணவை எடுத்துக் கொள்ளலாமா?
‘‘கர்ப்பிணிக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்றால் ஒரே நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தவறாக நினைக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை. இதுபோல சாப்பிடும்போது கர்ப்பிணிக்குதான் உடல் எடை அதிகரிக்குமே தவிர குழந்தையின் எடை அதிகரிக்காது. உதாரணமாக, காலை உணவையே இரண்டு அல்லது மூன்று முறைகளாக கூட பிரித்து சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும்போதுதான் குழந்தைகளுக்கு உணவின் சத்துக்கள் சென்றடையும். இதுதான் சரியான உணவியல் முறை. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்குத் தேவையற்ற உடல் எடையும் கூடாது.’’
ஒரு நாளுக்குத் தேவையான கலோரி அளவை இந்த உணவுமுறை நிறைவேற்றிவிடுமா?
‘‘ஒருவரின் எடை மற்றும் அவரின் உயரம் இரண்டையும் கணக்கிட்டே அவர்களுக்கு எவ்வளவு கலோரி கிடைக்க வேண்டும் என முடிவு செய்ய முடியும். உயரத்தை விட எடை அதிகமாக இருந்தால் இந்த 2 மணி நேர உணவுமுறையைக் கடைப்பிடிக்கலாம். எடை அதிகமாகாமல் எடையை அப்படியே வைக்க இது உதவும். அதேபோல யார் ஒருவர் 20 கிலோவுக்கு மேல் இருக்கிறாரோ, அவர் நாள் ஒன்றுக்கு 1,200 கலோரி எடுத்துக் கொண்டால்தான் அவர்களால் எடையை சரியாகப் பராமரிக்க முடியும்.’’
வீட்டில் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற உணவுப்பழக்கம் அவசியமா?
‘‘கண்டிப்பாக… எல்லா தரப்பு மக்களும் இந்த உணவு முறையை கடைப்பிடிக்கலாம். பொதுவாக வீட்டிலிருப்பவர்கள் தான் நேரத்துக்கு சாப்பிடாமல் இருக்கின்றனர். இதனால் பலவித நோய்கள் அவர்களை வந்தடைகிறது. எனவே, அவரவர் தேவைக்கேற்றார் போல சிறிய மாற்றங்களுடன் உணவுகளை பிரித்து சாப்பிட்டால் மட்டுமே அதில் இருக்கும் முழுச்சத்தையும் பெற முடியும்.’’
என்னென்ன நோய்கள் வராமல் இதன்மூலம் தடுக்க முடியும்?
‘‘மூன்று வேளை உணவு சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறுவதைக் காட்டிலும், இதுபோல் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் தேவையற்ற கொழுப்புகளையும் உடலிலிருந்து நீக்குகிறது. செரிமான மண்டலத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் சர்க்கரை நோய், அல்சர், தைராய்டு, ஹார்மோன் சம்பந்தமான பிரச்னைகளையும் தவிர்க்க முடியும்.
பெரும்பாலும் நமக்கு உடல் சம்பந்தமான பிரச்னைகள் அடிக்கடி வருவதன் காரணம், உணவை சரியாக உட்கொள்ளாமல் இருப்பதுதான். எனவே, உணவில் அக்கறை என்பது மிகவும் முக்கியமானதாகும். உணவின் அளவை விட அதன் தரத்தைப் பார்த்து உண்பதுதான் எப்போதும் சாலச் சிறந்தது. குறைந்த அளவு உணவிலும் அதிகச்சத்து நிறைந்து இருந்தால் அது நமது உடலுக்கு  வலுசேர்க்கும் மற்றும் எளிதில் ஜீரணமாகும்.’’

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisements
%d bloggers like this: