Advertisements

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பானி பூரி உங்களுக்குப் பிடித்த உணவா? இதை முதலில் படித்துவிடுங்கள்!

பானி பூரியின் பூர்வீகம் வட இந்தியா, குறிப்பாக தெற்கு பீஹார் என்கிறார்கள். வாரணாசி, வங்கதேசம் என்கிறனர் சிலர். பானி பூரியின் பின்புலம் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அதன் அசாத்திய சுவையை நம் நாக்கறியும். தற்போது தெருவோரக் கடைகளில் அதிகம் விற்பனை செய்யப்படுவது பானி பூரிதான். சிறுவர்கள் முதல் முதியோர் வரை ஆங்காங்கே விற்கப்படும் பானி பூரியை உண்டு மகிழ்கிறார்கள். ஆனால் இது எந்த அளவுக்கு உடல் நலத்துக்கு நல்லது?

அடிக்கடி பானி பூரி குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வலைத்தளங்களில் வளைய வந்தாலும், நம்மால் அச்சமயம் நாக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிட்டுவிடுவோம். தென்னிந்திய ஸ்னாக்ஸ்களான போண்டா, வடை, பஜ்ஜி, மிக்ஸர், காராசேவு, பக்கோடா இவையெல்லாம் வாங்க ஆளற்று விற்பனை நிலையங்களில் தேங்கி வரும் நிலை அதிகரித்துள்ளது. அண்மை காலமாக அனைவருக்கும் விருப்ப உணவாக விளங்குவது பாவ் பாஜி, பேல் பூரி, பானி பூரி, தய் பூரி, சமோஸா சென்னா, கட்லெட் போன்ற உணவுகள் தான். 

வட மாநிலத்தவரின் வரத்தால் நமக்கு பானி பூரி, பேல் பூரி எல்லாம் கிடைத்தாலும், நம்ம ஊர் திண்பண்டங்களின் மவுசு குறைந்து வருவது கண்கூடு. அதிக நேரம் வேலை செய்தல், சொன்ன வேலையை செய்தல், வார இறுதி நாளில் விடுப்பு எடுக்காமை போன்ற பல காரணங்களால் வட மாநில மக்களுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் இரு கரம் நீட்டி வரவேற்பு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, அது நாளடைவில் அனைத்துத் துறைகளிலும் பரவி தற்போது தமிழர்களின் உணவியலிலும் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. வட இந்திய உணவுகளை நாம் மாற்று உணவாக சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பானிபூரி போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவரும் நிலை உருவாகி வருவதும் நல்லதல்ல. 

சூப்பர் மார்கெட் உள்ளிட்ட பல டிபார்ட்மென்ட் கடைகளின் வாசல்களிலும் சூப் மற்றும் பானி பூரி கடைகளைப் போட்டிருப்பார்கள். தெருவோரங்கள் முதல் அலுவலக வாசல்கள் வரை சின்ன தள்ளு வண்டிகளில் திரும்பும் திசைகளில் எல்லாம் ஒரு பானி பூரிக் கடைக்காரர் பான் பராக் போட்டுக் கொண்டே வியாபாரம் செய்து கொண்டிருப்பார்.

நான்கைந்து பேர் சூழ்ந்திருக்க பரபரப்பாக அவர் இயங்குவார். ஒவ்வொருவரின் கையிலும் ஒரு சின்ன தட்டு தரப்படும். அதில் முதலில் பூரியை வைத்து, அதில் ஒரு ஓட்டையைப் போட்டு, அதற்குள் அவர் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த வேக வைத்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கி வைத்திருந்த பச்சை வெங்காயம் ஆகிய மசாலாக் கலவையைத் திணிப்பார், அதன் பின் தான் க்ளைமேக்ஸ்.

பூரியில் பானி (ரசம் போன்ற ஒரு கலவை நீர்) ஊற்றித் தர, அதை ஒரே வாயில் சாப்பிட்டு முடிப்பார் வாடிக்கையாளர். ஒவ்வொருவருக்கும் பம்பரமாக இந்த கலவையை செய்து தர, வியாபாரம் அமோகமாக நடக்கும். 

இப்படி வாயில் திணித்து சுவையில் ஊரிய இந்த பானி பூரி ஆரோக்கியமாகத்தான் தயாரிக்கப்படுகிறதா என்றெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. இருபது ரூபாய்க்கு இவ்வளவு ருசியா என்று வாங்கி சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் பானி பூரிக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருள்கள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மைதா மற்றும் பேக்கிங் சோடா போன்றவைதான் அதிகம் என்பதெல்லாம் யாரும் யோசிக்காத விஷயம்.

பானியில் உள்ள தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால், அது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஹெபடைடிஸ் ஏ தொற்று டைஃபாட், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல பிரச்னைகளின் மூல காரணம் சுகாதாரமற்ற இடங்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் இத்தகைய உணவுகளினாலும்தான்.

பானி பூரியை சிலர் தினமும் ஒரு முறை சாப்பிடும் வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். இது தவறு. மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிடலாம். அதற்கு மேல் என்றால் உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு யாரும் உத்திரவாதம் தர முடியாது.

பானி பூரியில் பான் மசாலா மற்றும் சோடியம் கலந்திருப்பதால் அதை தனி உணவாக அடிக்கடி சாப்பிடும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள். நாம் இவற்றைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துவந்தால் உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பூரி செய்யப் பயன்படுத்தும் எண்ணெயை பல முறை மறு சுழற்சி செய்திருந்தால் அது புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை வரவழைத்துவிடும்.

அடுத்த முறை பானி பூரியை சுகாதாரமற்றக் கடைகளில் வாங்கி சாப்பிடும் முன் ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்துச் செயல்படுங்கள். வீட்டிலேயே சுத்தமான முறையில் தயாரிக்கக் கூடிய எளிமையான ரெஸிபிதான் அது. 

Advertisements
%d bloggers like this: