Advertisements

அக்கா… அக்கா…” – ஜெ. காதில் சத்தமாகக் கூப்பிட்ட சசி! – ஜெ. மரண விசாரணை!

காரின் முன்சீட்டில் அமர்ந்து கையசைத்தபடி வீட்டுக்குத் திரும்புவேன் என்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, என்னிடம் தன்னம்பிக்கையுடன் சொன்னார்”  என்று தனது பிரமாணப் பத்திரத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் சசிகலா. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், பலரையும் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தில் முக்கியமான சாட்சியாகக் கருதப்படும் சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. சசிகலா , சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பதால், அவர் தனது வாக்குமூலத்தை ஆவணமாக சமர்ப்பிக்க நீதிபதி ஆறுமுகசாமி அனுமதியளித்தார். அதன்படி, வாக்குமூலத்தை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல சந்தேகங்க ளுக்கு சசிகலா இதில் பதில் அளித்துள்ளார். 55 பக்கங்களுக்கு நீளும் இந்தப் பிரமாணப் பத்திரம் மற்றும் ஆணையத்தில் சில சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் போன்றவற்றின் மூலம் ஜெயலலிதா மரணம் குறித்த சில தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அவை இங்கே…

கடைசி நிகழ்ச்சியும்… காய்ச்சலும்!
2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவுதான், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். ஆனால், அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே அவருக்குக் காய்ச்சல். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மருமகனும் ஜெயலலிதாவின் மருத்துவருமான டாக்டர் சிவக்குமார் சபரிமலை சென்றிருந்ததால், அவரிடம் போனில் கேட்டு ஜெயலலிதாவுக்கு மருந்து கொடுத்தனர். 21-ம் தேதி மெட்ரோ ரயில் துவக்கவிழா நிகழ்ச்சிக்கு, காய்ச்சலுடன்தான் கிளம்பியுள்ளார் ஜெயலலிதா. அந்த நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும், சோர்வுடன் தனது அறைக்குச் சென்று படுத்து விட்டார். ‘ஓய்வெடுக்க வேண்டும்’ என்று டாக்டர்கள் சொன்னதால், மறுநாள் வீட்டிலேயே இருந்துள்ளார். தலைமைச் செயலகத்திலிருந்து வந்த சில ஃபைல்களைச் செயலாளர் ராமலிங்கத்தின் உதவியுடன் பார்த்துள்ளார். அன்று காய்ச்சல் கொஞ்சம் குறைந்ததும் இயல்பாக இருந்துள்ளார்.
அந்த இரவில் நடந்தது என்ன?
சபரிமலையிலிருந்து திரும்பிய சிவக்குமார், போயஸ் கார்டன் வீட்டுக்கு 22-ம் தேதி காலையும், மாலையும் வந்து ஜெயலலிதாவின் உடல் நிலையைப் பரிசோதனை செய்துள்ளார். அன்று இரவு உணவை முடித்துவிட்டு, பல் துலக்க பாத்ரூம் சென்றார் ஜெயலலிதா. அப்போது, பாத்ரூமிலிருந்து, ‘‘சசி, சீக்கிரம் வா… எனக்கு மயக்கம் வருது’’ என்று சத்தமிட்டார். அதைக் கேட்டு சசிகலா வேகமாக ஜெயலலிதாவின் அறைக்குள் சென்று அவரைத் தாங்கிப்பிடித்து கட்டிலில் அமர்த்தியுள்ளார். அதற்குள் ஜெயலலிதா மயக்கமாகிவிட்டார். அப்போலோ மருத்துவமனைக்கு உடனே போனில் தகவல் பறந்தது. இந்தப் பரபரப்புக்கிடையே டேபிளில் இருந்த பெல்லை சசிகலா அடித்ததும், வீட்டின் கீழ்தளத்தில் இருந்த ஜெயலலிதாவின் தனி பாதுகாவலர்கள் கந்தசாமி, வீரபெருமாள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் அறைக்குள் வந்தனர். அப்போலோ மருத்துவமனை ஆம்புலன்ஸும் கார்டனுக்கு வந்தது. முதல் மாடியில் மயங்கிய நிலையில் இருந்த ஜெயலலிதாவை ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தூக்கிவந்து ஆம்புலன்ஸில் ஏற்றினர். அதில், சசிகலாவும் சிவக்குமாரும் அமர்ந்தனர். அப்போலோவுக்கு ஜெயலலிதா கொண்டு வரப்படும் தகவல் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரீம்ஸ் சாலை பிள்ளையார் கோயில் அருகே ஆம்புலன்ஸ் போனபோது, ஜெயலலிதாவுக்குத் திடீரென நினைவு திரும்பியது. சசிகலாவிடம் ‘‘எங்கே கொண்டு செல்கிறீர்கள்?’’ என்று கேட்டுள்ளார். ‘‘ஹாஸ்பிடல் போகிறோம்’’ என்று பதில் சொல்லியிருக்கிறார் சசிகலா. 
அப்போலோவில் நடந்த மீட்டிங்!
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதற்கு மறுநாள், நார்மலாக ஜெயலலிதா இருந்துள்ளார் என்று சாட்சிகள் பலரும் சொல்லியுள்ளனர். குறிப்பாக, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், ‘‘22-ம் தேதி, தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் வரமுடியாது எனத் தகவல் கிடைத்ததால், அவருடைய பார்வைக்குச் செல்ல வேண்டிய நான்கைந்து ஃபைல்களை ராமலிங்கம் மூலம் முதல்வரிடம் கொண்டுசென்றேன். 27-ம் தேதி, காவேரி விவகாரம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். நான், தமிழக அரசின் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் அலுவலகச் செயலாளர்களான வெங்கட்ரமணன், ராமலிங்கம், அரசுத் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசுவாமி ஆகியோர் இருந்தோம்’’ என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதே தகவலை வேறு சிலரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சொன்னதாகத் தெரிகிறது. 27-ம் தேதி இரவுதான், மீண்டும் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை மோசமானது. உடனடியாக, எம்.டி.சி.சி.யு அறைக்கு அவரை மாற்றியுள்ளனர். அதன்பிறகு, எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தனர். 

‘‘நான்தான் பாஸ்!’’
ஜெயலலிதாவுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள்  அளிக்கப்பட்டு வந்த நேரத்தில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் லண்டனிலிருந்து சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பியெலை வரவழைத்தது. அவர், மருத்துவர்கள் குழுவுடன் சென்று ஜெயலலிதா உடல்நிலையைச் சோதித்துள்ளார். அப்போது கட்டிலில் படுத்திருந்த ஜெயலலிதா, பியெலைப் பார்த்து சைகையால், “நீங்கள் யார்?” என்று கேட்டுள்ளார். அதற்கு பியெல் சுற்றி நின்ற மருத்துவர்களைக் காட்டி ‘‘இவர்களுக்கு நான் பாஸ்’’ என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்ட, படுத்துக்கொண்டே ஜெயலலிதா, “நோ, நோ, நான்தான் எல்லோருக்கும் பாஸ்” என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டியுள்ளார். இதைப் பார்த்த பியெல் சிரித்துள்ளார்.
யாரெல்லாம் பார்த்தார்கள்?
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாருமே பார்க்க வில்லை என்ற குற்றச்சாட்டு பெரிதாக எழுந்தது. ஆனால், பலர் ஜெய லலிதாவை நேரில் பார்த்ததை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக ராமமோகன ராவ், வெங்கட்ரமணன், ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் பெருமாள்சாமி, வீரபெருமாள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவைப் பார்த்ததாக கமிஷனில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதேபோல், அப்போது கவர்னராக இருந்த வித்யா சாகர் ராவ், கண்ணாடி வழியாக ஜெயலலிதாவைப் பார்த்ததைத் தன் புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இவற்றையெல்லாம் சசிகலாவின் பிரமாணப்பத்திரத்தில் குறிப் பிட்டுள்ளார்கள். ஜெயலலிதாவைச் சாதாரண அறைக்கு மாற்றியபோது அமைச்சர்கள் நிலோபர் கபில், ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் பார்த்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஜெயலலிதாவின் வைராக்கியம்!
ஜெயலலிதாவின் வைராக்கிய குணம்தான் அவரின் எந்தப் புகைப்படமும் வெளியே வராமல் போனதற்குக் காரணம் என்கிறார்கள். அதற்கு சசிகலா ஒரு சம்பவத்தைத் தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘‘27-9-14 அன்று, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கியது. 22 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு பிணையில் விடுக்கப்பட்டு மீண்டும் போயஸ் கார்டன் திரும்பினார் ஜெயலலிதா. அந்த வழக்கிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் 11-2-2015 அன்று விடுதலை செய்து தீர்ப்பு தரும்வரை போயஸ் கார்டனை விட்டு வெளியே எங்கும் வரவில்லை ஜெயலலிதா. ஒரு புகைப்படம்கூட வெளியே வராதபடி பார்த்துக்கொண்டார். அதனால்தான், அப்போலோ மருத்துவமனைப் படங்களை வெளியில் வரவிடாமல் சசிகலா தடுத்தார்.

20 மருத்துவர்கள் பட்டியல்!
மருத்துவமனையில் 24 மணி நேரமும் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் ஜெயலலிதாவின் அருகில் இருந்துள்ளனர். பக்கத்து அறையில் இருந்தபடி, இரண்டு ஆண் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றியுள்ளார்கள். பெங்களூரு சிறையிலிருந்து ஜாமீனில் வந்தது முதலே ஜெயலலிதாவுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற தொந்தரவுகள் அதிகரித்துள்ளன. இதனால், பல்வேறு கட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிக்சை அளித்துள்ளார்கள். அதில் பெரும்பாலா னவர்கள் அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள். சர்க்கரை நோய், பல்வலி. காய்ச்சல் எனப் பல நோய்களுக்காக இந்தச் சிகிச்சைகள் தரப்பட்டுள்ளன. அந்தக் கால கட்டத்தில், ஜெயலலிதா தனது உடலில் உள்ள சர்க்கரை அளவைத் தினமும் தானே சோதித்து வந்துள்ளார். அடிக்கடி சர்க்கரை அளவைச் சோதித்து, அதை நேரம்வாரியாக ஒரு நோட்டில் தினமும் எழுதிவைத்துள்ளார். ஜெயலலிதாவின் உணவும் அளவாகவே இருந்துள்ளது. காலையில் பால் மற்றும் பிரட், மதியம் தயிர்சாதம் என்று சாப்பிட்ட உணவின் பட்டியலையும் அந்த நோட்டில் எழுதிவைத்துள்ளார். இந்த ஆவணங்களையும் ஆறுமுகசாமி கமிஷனில் தாக்கல் செய்துள்ளார்கள்.
சிவக்குமாரும் ஸ்டீராய்டும்!
ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு கொடுக்கப் பட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் கூறியிருந்தார். எதற்காக ஸ்டீராய்டு கொடுக்கப்பட்டது என்பதை சசிகலா, தனது பிரமாணப்பத்திரத்தில் விளக்கியுள்ளார். ஜெயலலிதாவுக்குச் சர்க்கரை அளவு அதிகரித்து கை, கால்களில் கொப்புளங்கள் உருவாகியுள்ளன. இதனால் ஜெயலலிதாவுக்குத் தொந்தரவு அதிகரித்ததும், ஓர் ஆண் மருத்துவரும் ஒரு பெண் மருத்துவரும் போயஸ் கார்டன் வீ்ட்டுக்குவந்து சிகிச்சை அளித்துள்ளார்கள். அவர்கள்தான், ‘சிறிய அளவில் ஸ்டீராய்டு கொடுத்தால் மட்டுமே தொந்தரவிலிருந்து மீளமுடியும்’ என்று அட்வைஸ் செய்தனர். அதன்படி, ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு கொடுக்கப்பட்டு, பின்னர் அதன் அளவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் சிவக்குமார் தனது வாக்குமூலத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவுக்காகத் தயாரான சேர்!
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, சில நாள்களில் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அதனால், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கத் தொடங்கினார்கள். ‘அவர் நடக்கிறார், நன்றாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது அப்போது தான்’ என்கிறார்கள். எழுந்து நடக்கமுடிகிற அளவுக்கு உடல்நிலை முன்னேற்றம் அடைந்தாக மருத்துவர்கள் சிலரே குறிப்பிட்டுள்ளார்கள். சசிகலாவும் அதை உறுதிப்படுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரி அசோகன் என்பவர், ஜெயலலிதாவின் உடல்வாகுக்கு ஏற்றவாறு ஒரு சேர் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார். அதில் அமர்ந்து ஜெயலலிதா உடற்பயிற்சி செய்யவேண்டும் எனத் திட்டம் இருந்தது.

தீபா முதல் கண்ணன் வரை!
ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தீபா முதல் ஜெயலலிதாவின் டிரைவர் கண்ணன் வரை பலரும் சாட்சியம் கூறியுள்ளனர். தீபா, ‘‘என் அத்தையைக் கட்டையால் அடித்து மயக்கமடையச் செய்தார்கள் என்று ஊடக நண்பர்கள் வாயிலாக அறிந்துகொண்டேன். பலமுறை அத்தையைப் பார்க்கப் போனபோது, என்னைப் பார்க்க அனுமதிக்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் டிரைவர் கண்ணன், ‘‘2016 செப்டம்பர் 21-ம் தேதி மெட்ரோ ரயில் தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறிய ஜெயலலிதா, ‘சீக்கிரம் வீட்டுக்கு வண்டியை ஓட்டு. எனக்கு உடம்பு சரியில்லை’ என்றார். கண்ணாடியில் சாய்ந்து கொண்டே வந்தார். அதுபோல அவர் ஒருபோதும் சோர்வாக காரில் வந்த தில்லை’’ என்று சொல்லி யிருக்கிறார். ஜெயலலிதாவை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்ற நேரத்தில், தான் தூங்கிக்கொண்டி ருந்தாக ஜெயலலிதாவின் சமையல் காரர் ராஜம்மாள் தெரிவித்துள்ளார்.
இவர்களையும் விசாரிக்க வேண்டும்!
சசிகலா சார்பில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வந்தது முதலே ஜெயலலிதாவின் உடல் நலிவடைந்துள்ளது. அதற்காக, 2014 இறுதி முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் வரை 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளனர். அதற்கான ஆவணங்களும் உள்ளன. அதை ஆணையம் முறைப்படி விசாரித்தாலே அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் செய்யப்பட்டதற்கான காரணம் தெரிந்துவிடும். அதேபோல், அப்போலோவில் அவருக்குச் சிகிச்சை அளித்த  அனைவரிடமும் விசாரித்தால், ஜெயலலிதா மரண சர்ச்சை முடிவுக்கு வந்துவிடும். ஜெயலலிதா மரணம் குறித்துத் தவறான தகவல் தெரிவித்தவர்கள், பொய் சாட்சியம் சொன்னவர் கள், பொய்யான மனுதாரர் களிடம் குறுக்கு விசாரணை செய்ய உள்ளோம். ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பில் ஆணையத்திடம் முறையிட உள்ளோம்” என்றார்.


இறுதி நிமிடங்கள்!
டி
சம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதா, பெட்டில் படுத்தபடி டி.வி-யில் ஜெய் ஹனுமான் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு காபி கொடுக்கப்பட்டுள்ளது. ‘சீரியல் முடிந்தபிறகு குடிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, சீரியல் முடிந்தவுடன் காபியைக் கையில் வாங்கியுள்ளார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டது போல் உடலில் நடுக்கம் ஏற்பட்டு, நாக்கை வெளியே நீட்டியுள்ளார். அருகிலிருந்த சசிகலா பதற்றத்துடன் ஜெயலலிதாவைத் தாங்கிப் பிடித்து, ‘‘அக்கா… அக்கா…’’ என்று கூப்பிட்டார். அருகிலிருந்த மருத்துவர்கள் உடனடியாக முதலுதவியை ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதாவின் காதில் சத்தமாகக் கூப்பிடும்படி சசிகலாவிடம் அவர்கள் சொன்னதும், சசிகலா ‘‘அக்கா… அக்கா…” என்று கத்தியுள்ளார். ஒரு முறை கண்ணைத் திறந்து பார்த்த ஜெயலலிதாவின் கண்கள் திரும்பவும் மூடிக்கொண்டன. அதைப் பார்த்து சசிகலாவும் மயக்கம் அடைந்துள்ளார். இது, சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்கள் பற்றிக் கூறிய தகவல்கள்.

Advertisements
%d bloggers like this: