Advertisements

உணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை – பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்!

மூன்று இட்லிகளும், சூடாகச் சாம்பாரும் வாங்கக் கடைக்குச் செல்கிறோம். எப்படி? வெறும் கைகளை வீசிக்கொண்டு! ஒரு கூடை அல்லது மஞ்சள் பை? வேண்டாம். சாம்பாருக்கு பிளாஸ்டிக் கவர் இருக்கிறது, இட்லிப் பொட்டலத்துடன் அதைத் தூக்கிக்கொண்டு வர, பிளாஸ்டிக் கேரி பேக் கடையிலேயே கொடுப்பார்கள். அது மட்டுமா? இட்லிப் பொட்டலத்தின் உள்ளே, இலைக்குப் பதிலாக பிளாஸ்டிக்

காகிதம் புகுந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது, ஏதாவது உணவுப் பொருள் என்றாலே, அது சூடாக இருந்தால்கூட, அதைச் சுற்றி எடுத்துக்கொள்ள நமக்கு பிளாஸ்டிக் தேவைப்படுகிறது. உணவு மட்டுமல்ல, எந்த நுகர்வோர் பொருளுக்கும், பிளாஸ்டிக்தான் பொன்னாடையாகப் போர்த்தப்படுகிறது. இவ்வளவு ஏன்… நம் குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பும் மதிய உணவுக்குக்கூட, ஏதேனும் ஒன்றை பேக் செய்ய பிளாஸ்டிக் கவர்தான் நமக்குத் தேவைப்படுகிறது.

இன்றுவரை, ஏதோ ஒரு வடிவில் பிளாஸ்டிக் நம் உணவோடு உறவாடிக்கொண்டுதான் இருக்கிறது. உணவு உற்பத்தி, விற்பனை மற்றும் உட்கொள்ளுதல் என அனைத்துச் செயல்களிலும் பிளாஸ்டிக் அழுத்தமாக இடம்பிடித்துவிட்டது. உணவை பேக் செய்ய எண்ணற்ற மாற்று வழிகள் இருந்தாலும், நாம் பிளாஸ்டிக்கின் பின்னால் ஓடுவது ஏன்..?

பிளாஸ்டிக் வேண்டாம்… ஏன்?

பிளாஸ்டிக்கில் இருக்கும் பாலிமர் (Polymer) மூலக்கூறுகள் அளவில் பெரியவை. எனவே, அது தாங்கிக்கொண்டிருக்கும் உணவுப் பொருள்களுடன் அது கலக்க பல காலம் தேவைப்படும். பிரச்னை என்னவென்றால், தரமில்லாத பிளாஸ்டிக் எனும்போது, அதில் ஒருசில சிறிய, சுதந்திரமாக நகரக்கூடிய மூலக்கூறுகள் இருக்க வாய்ப்புண்டு. இவை உணவுப் பொருள்களுடன் கலக்கக்கூடும். இதை ஆங்கிலத்தில் `Leaching’ (ஊடுருவல்) அல்லது `Migration’ (இடம்பெயர்தல்) என்கிறார்கள். இது மிகவும் குறைவான சதவிகிதம் மட்டுமே நடப்பதால், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், பிளாஸ்டிக், சூடான உணவுப் பொருளைத் தொடும்போது இந்த இடம்பெயர்தல் பெரிய அளவில் நடந்துவிடுகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான், இப்போதெல்லாம் டீயைப் பரிமாறப் பயன்படும் பிளாஸ்டிக் கப்கள், பேப்பர் கப்களாக மாறியிருக்கின்றன. இதனால்தான், சூடான சாம்பார் மற்றும் இதர உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் கவர்களில் வாங்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. நாம் உபயோகப் படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் பெரும்பாலும் இரண்டே வகை பிளாஸ்டிக் தான் இருக்கின்றன. ஒன்று பாலிகார்பனேட் (Polycarbonate). மற்றொன்று, பிவிசி (Polyvinyl Chloride – PVC). இவை இரண்டாலும் என்னென்ன பிரச்னைகள் வருகின்றன?

பாலிகார்பனேட்

உணவுப் பொருள்களை அடைத்துவைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள் இதில்தான் செய்யப்படுகின்றன. இது பிஸ்பினால் ஏ (Bisphenol A) என்னும் ரசாயனத்தை வெளிப்படுத்தும். இது உணவில் கலக்கும்போது பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உண்டாகின்றன.

பிவிசி

தண்ணீர்க் குழாய்கள், விதவிதமான டப்பாக்கள், மூடிகள்… எனப் பல்வேறு வகைகளில் பிவிசி பயன்படுகிறது. இது சற்று கடினமான பிளாஸ்டிக் வகை. இதை அப்படியே பயன்படுத்துவதால் தீமைகள் எதுவும் வரப்போவதில்லை. ஆனால், வேண்டிய வடிவில் வளைக்கவும் அலங்கரிக் கவும் இதை லகுவாக்க `பிளாஸ்டிசைசர்கள்’ (Plasticisers) என்ற வஸ்துவைச் சேர்க்கிறார்கள். ஒரு பிவிசி பொருளில், இது கிட்டத்தட்ட 40 சதவிகிதம் இருக்கிறது. இது ஆரோக்கியமானதா என்று பலமுறை சந்தேகங்கள் எழுப்பப் பட்டுள்ளன.

நச்சுத்தன்மை கொண்டது என்றவுடன் ஈயத்தை இன்முகத்துடன் ஒதுக்கிவைத்த நாம், இப்போது பிளாஸ்டிக்கை ஒதுக்க ஏனோ மறுக்கிறோம். `பிளாஸ்டிக்கை அதிகம் உபயோகிக்க வேண்டாம்’ என்று விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் அரசாங்கமே, அதைத் தயாரிக்கவும், இறக்குமதி, ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கவில்லை. காரணம், பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் விற்பனை என்பது இன்று ஒரு மாபெரும் வர்த்தகம். அதாவது இதுவும் புகையிலைப் பொருள்களைப்போலத்தான்… ஒரு மாபெரும் வியாபாரம்! பிளாஸ்டிக் என்ற ஒன்றை நாம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு என்றாலும், அதன் உபயோகம் முடிந்தவுடன் அதனால் நம் சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் தீமைகள் ஏராளம். மக்காத குணம் கொண்ட அவை, பூமியில் நிரந்தரமாகத் தங்கிப் பல்வேறு சுகாதாரக் கேடுகளை நமக்கு வாரி வழங்குகின்றன. அதைக் கருத்தில் கொண்டாவது பிளாஸ்டிக் என்னும் அசுரனுக்கு அதிக இடம் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்வோம்.

பிளாஸ்டிக் பொருள்களால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

பொதுநல மருத்துவர் புகழேந்தி

“ பிளாஸ்டிக்கை `எண்டோக்ரைன் டிஸ்ரப்டர்’ (Endocrine disruptor) என்று சொல்வதுண்டு. பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள பிஸ்பினால் ஏ, ஹார்மோன் சம்பந்தமான பிரச்னைகளை உண்டாக்கும். குறிப்பாக சிறார்களுக்கு, ஹார்மோன் வளர்ச்சித் தடைபடும். நரம்பு வளர்ச்சி தாமதமாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி உடல்நலக் கோளாறுகள் உண்டாகும். இந்த வகைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டால் மலேரியா, புற்றுநோய், இதய நோய் மற்றும் சர்க்கரைநோய் போன்றவை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. பிளாஸ்டிக் ‘நான்-பயோடீகிரேடபுள்’ (Non-biodegradable). அதாவது எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்காது. நிலத்தின் வளத்தை முற்றிலுமாக பாதிக்கும். இதனால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல உயிரினங்களும் பாதிக்கப்படும்” என்கிறார் புகழேந்தி.

வாழ்வியல் மேலாண்மை நிபுணர் கௌசல்யா நாதன்

‘‘பொதுவாக பிளாஸ்டிக் பொருள்களில் `ஃபுட் கிரேடு’, `நான்ஃபுட் கிரேடு’ என இரண்டு வகைகள் உள்ளன. பொருள்களைச் சேமித்து வைத்துக்கொள்ள ஃபுட் கிரேடு பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கிக் கொள்ளலாம். இவற்றில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய காய்கறிகள், பழங்கள், கீரைகள், முளைகட்டிய தானியங்கள் போன்ற உணவுப் பொருள்களைச் சேமித்துவைத்துக் கொள்ளலாம். அதேசமயம் டப்பாவை ஸ்கிரப் கொண்டு அதிகமாகத் தேய்த்து கழுவக் கூடாது. அப்படித் தேய்த்தால், டப்பாவில் உள்ள கெமிக்கல்கள் வெளியேறி, உணவுப் பொருள்களோடு கலந்துவிடும். அதைச் சமைத்து உண்ணும்போது பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். இதனால் கேன்சர் வரக்கூட வாய்ப்புண்டு. எனவே, டப்பாவை அதிகமாகத் தேய்த்துக் கழுவாமல், லேசாகத் தண்ணீரில் அலசித் துணியால் துடைத்து வைத்தாலே போதும்.

பிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் சூடான திரவ உணவுப் பொருள்கள் வைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எவர்சில்வர் (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) பாத்திரங்களிலேயே உணவுகளை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல, இப்போது கடைகளிலும் இலைகளில் உணவுகள் பரிமாறப்படுவதில்லை. பார்சல் செய்து தரப்படுவதுமில்லை. பிளேட்டுகளுக்கு மேல் பிளாஸ்டிக் பேப்பரையே விரிக்கிறார்கள். அதன் மீதே சூடான உணவுகளையும் வைக்கிறார்கள். சிறிய ஹோட்டல்களில், டீக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்களிலேயே டீ, சாம்பார், குருமா போன்றவற்றைக் கட்டித் தருகிறார்கள். பிளாஸ்டிக்குடன் சூடான உணவுகள் கலக்கும்போது அதிலுள்ள கெமிக்கல்கள் வெளியேறி, அதிகமான உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும். எனவே, கடைகளில் என்ன வாங்கினாலும் பிளாஸ்டிக் பொருள்களில் வாங்கக் கூடாது.

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில், கேன்களில் ரீயூசபிள் கிரேடிங் (Reusable Grading) இருக்கும். இவற்றை அதிகபட்சம் மூன்று மாதங்கள்தான் பயன்படுத்த வேண்டும். உடையும்வரைப் பயன்படுத்தக் கூடாது. இப்போது வாட்டர் பாட்டில்களும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்களில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

பாத்திரங்களோ, பாட்டில்களோ… பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது மிகவும் நல்லது’’ என்கிறார் கௌசல்யா நாதன்.

புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சரவணன்

`‘பிளாஸ்டிக்கில் உள்ள ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), பிஸ்பினால் ஆகிய கெமிக்கல்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் தன்மை இருக்கிறது. இதை அமெரிக்காவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு `எஃப்.டி.ஏ’ (US Food and Drug Administration) உறுதிசெய்திருக்கிறது. சூடான உணவுகளை பிளாஸ்டிக் டப்பாக்களில், கவர்களில் வைக்கும்போது மேற்கண்ட கெமிக்கல்கள் வெளியேறி உணவோடு கலந்துவிடும். இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தப் புற்றுநோயிலிருந்து அனைத்து வகைப் புற்றுநோய்களும் வருவதற்கு வாய்ப்புண்டு.

அதேபோல, நாம் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களால் உணவுச்சங்கிலி பாதிக்கப்படும். நிலத்தில் மக்காமல் இருக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் செடி, கொடிகளுக்குப் போடப்படும் உரங்களோடு மண்ணில் கலந்துவிடும். அந்தச் செடியில் முளைக்கும் காய்கறிகளை நாம் சாப்பிடும்போது உடல்நல பாதிப்புகள் உண்டாகும். பிளாஸ்டிக்கை அதிகமாகத் தின்ற உயிரினங்களின் கறியைச் சாப்பிட்டாலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புண்டு.’


இவற்றைச் செய்யாதீர்கள்!

உங்கள் உணவுத் தயாரிப்பில் பிளாஸ்டிக் இடம்பெறுகிறதா? இந்த விஷயங்களை எல்லாம் கருத்தில் கொள்ளுங்கள்.

* பேக் (Pack) செய்யப்பட்ட உணவுகளை முடிந்தவரைத் தவிர்க்கப் பாருங்கள். உறைந்த உணவு (Frozen Food) அல்லது ஃபிரெஷ் உணவுகளை மட்டுமே உண்ணுங்கள். குழந்தைகளுக்குச் சூடாக பால் கொடுக்கும்போது புட்டிகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

சமையலறையில் சேர்த்துவைக்கப்படும் உணவுப் பொருள்களை, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைக்க வேண்டாம். நீண்டகாலம் அவை பிளாஸ்டிக்குடன் உறவாடியவுடன், அதைக்கொண்டு செய்யப்படும் உணவை நாம் உண்டால், சிக்கல் நம் உடலுக்குத்தான்.

பிளாஸ்டிக் டப்பாக்களை ஓவன்களில் வைத்துச் சூடுபடுத்தாதீர்கள்.

முடிந்தவரை கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருள்களையே தேர்ந்தெடுங்கள்.

மினரல் வாட்டர் விற்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை, கட்டாயமாக ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.

கீறல்கள் விழுந்த மற்றும் சேதமடைந்த பிளாஸ்டிக் டப்பாக்களைப் பயன்படுத்த வேண்டாம்.

Advertisements
%d bloggers like this: