Advertisements

அரசாங்க வேலையும் அரியாசன யோகமும் தரும் அதிகார நந்தி!

இன்று சனிக்கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான அதிகார நந்திவாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார். இன்று காலை 6.00மணிக்கு புறப்பாடாகி நான்கு மாட வீதிகளிலும் திருவீதி உலா வந்து 10.30 மணியளவில் திருக்கோயிலை வந்தடைவார் என கோயிலை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

அதிகாரமும் பதவியும்:

இன்று பலரும் பதவி மீது தனக்கு எந்த ஆசையும் இல்லை என உதட்டளவில் கூறினாலும் தனக்கு விரும்பிய பதவி கிடைக்க எதை வேண்டுமானாலும் செய்யும் நிலையில் தான் இருக்கிறார்கள். இன்றைய உலகில் தலைமை பதவியை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த வகையில் ஒரு சிலர் ஒரு சமூக அமைப்பின் தலைவராக வர வேண்டும் என்று ஆசை படுவார்கள். இன்னும் சிலர் ஒரு ஊரின் தலைவராக வர வேண்டும் என்று ஆசை படுவார்கள். இன்னும் சிலர் ஒரு பிராந்தியத்தின் தலைவராக வர வேண்டும் என்று ஆசை படுவார்கள். ஒருவர் ஒரு தலைமைப் பதவியை அடைவதற்காகத் தன்னிடம் உள்ள அனைத்துச் சொத்துக்களையும், உறவுகளையும் இழக்கவும் தயாராகிறார்.

நந்தி தேவர் வரலாறு:

பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது.

அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது.

சிவன் இவர் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

ஜோதிட ரீதியாக அரசியல் மற்றும் அரசாங்க உயர்பதவி வகிக்கும் அமைப்பை தரும் கிரக நிலைகள்:

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர்.

அரசு வேலை தரும் ஜாதக அமைப்பு:

ஜோதிடத்தைப் பொருத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துரை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். .

அரசியலில் பிரகாசிக்கும் ஜாதக அமைப்பு:

ஒருவர் அரசியலில் உயர்பதவி மற்றும் தலைமை பதவிகள் வகிக்க வேண்டும் என்றால் முதலில் அவருடைய லக்னம் பலமாக இருக்க வேண்டும். அரசியல் பதவிகளுக்கென்றே சில ராசிகள் இருக்கின்றது. அவற்றில் ஒன்றை லக்னமாக கொண்டிருக்க வேண்டும். கால புருஷ ராசியில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு சர ராசிகளில் ஒன்றை லக்னமாக கொண்டிருக்க வேண்டும். மேலும் இந்த ராசியை லக்னமாக கொண்டிருக்கும்போது இந்த நான்கு ராசிகளில் ஒன்றே பத்தாம் வீடாகவும் அமையும். எனவே இந்த நான்கு ராசிகளையும் அரசியல் தொடர்புள்ள ராசிகளாக கூறப்படுகிறது. இவற்றோடு அரசியல் மற்றும் அரசாங்க பதவிகளுக்கு ராஜ கிரகம் எனப்படும் சூரியனின் வீடும் லக்னமாக இருப்பது அரசியல் பதவியை தரும்.

மேலும் அரசியலில் மக்கள் தொடர்பு என்பது முக்கியமானதாகும். ஜோதிடத்தில் பொது மக்களை குறிக்கும் கிரகம் சனைச்சர பகவான் ஆவார். அவர் ஜாதகத்தில் ஜென ரஞ்சக ராசிகள் மற்றும் சுக்கிரனின் வீடுகளில் இருப்பது சிறப்பு. மக்கள் தொடர்பை குறிக்கும் பாவம் ஏழாம் வீடு ஆகும். கால புருஷ ராசியின் ஏழாம் வீடு மற்றும் ஜெனன ஜாதக ஏழாம் வீடு இரண்டும் அசுப தொடர்புகள் இன்றி இருக்க வேண்டும்.

அரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய வேண்டுமென்றால் பின்வரும் அமைப்புகள் இருப்பது நல்லது.

ராஜ கிரகங்களான சூரியன் சந்திரன் மற்றும் அரசாங்க அதிகார பதவிகளை தரும் செவ்வாய் ஆட்சி உச்ச பலம் பெற்று நிற்க வேண்டும். மேலும் 6/8/12 மற்றும் பாதகாதிபதி தொடர்புகள் பெறாமல் இருக்கவேண்டும்.

அனைத்து பதவிகளையும் தீர்மானிக்கும் சனிஸ்வரபகவான் ஆட்சி உச்சம் பெற்று சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

சந்திரனும் குருவும் பரிவர்த்தனை யோகம் அல்லது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் போன்ற யோகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்களை பெற்று விளங்க வேண்டும்.

தர்ம கர்மாதிபதி யோகம் மற்றும் பஞ்ச மகா புருஷ யோகம்

செவ்வாய் உச்சம் பெற்றோ அல்லது 3,6,11 போன்ற இடங்களிலோ இருக்க வேண்டும்.

1,5,10 போன்ற இடங்கள் பலம் பெற்று இருந்தாலும் அரசியல் யோகங்கள் உண்டு.

மூன்றாம் இடமாகிய தைரிய மற்றும் பராக்கிரம இடம் வலுத்து காணப்பட வேண்டும்.

6 மிடத்தில் சனி ,ராகு ,செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுத்து காணப்பட்டால் எதிரிகள் வெல்ல முடியாத நிலை உண்டாகும்.

6/8/12ம் அதிபதிகள் இந்த மூன்று வீடுகளுக்கள் மாறியோ பரிவர்தனை பெற்றோ அமர்ந்து விபரீத ராஜ யோகம் பெற்று நிற்பது.

லக்னம், ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகிய மூன்றும் சர்வாஷ்டக வர்கத்தில் 30 க்கு மேல் அதிக பரல் பெற்று நிற்க வேண்டும். இந்த அமைப்பு இருந்தும் இன்னும் அரசியலில் ஒன்றும் சாதிக்க முடியவில்லை என்ற வருத்தமா? கவலைய விடுங்க! உங்களுக்காகவே இன்று சனிக்கிழமை கர்ம காரகனின் நாளில் அதிகார நந்தி சேவையில் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் வலம் வர இருக்கிறார்கள். அவர்களை இன்று தரிசிப்பது உங்கள் குறையை தீர்த்து வைக்கும் என்பது நிதர்சனம்.

Advertisements
%d bloggers like this: