Advertisements

பஞ்சாப் நேஷனல் பேங்க் மோசடி… கற்றுத் தரும் 5 பாடங்கள்!

சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த நீரவ் மோடியின் பஞ்சாப் நேஷனல் வங்கி போலி உத்தரவாத மோசடி, பங்குச் சந்தையில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், பொதுத் துறை வங்கிகளின் மீதான மக்களின் நம்பிக்கை யையும் கொஞ்சம் புரட்டிப் போட்டிருக்கிறது. இதுவரை நிகழ்ந்த வங்கி முறைகேடுகளில் உச்சமான இந்த மோசடியினால், பஞ்சாப் நேஷனல் வங்கிக்குச் சுமார் ரூ.11,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்கிறார்கள்.

 
இவ்வளவு பெரிய ஊழல் வெளிவருவதற்கு முன்பே, இதில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு எளிதாகத் தப்பிவிட்டார். சரித்திரம் கண்டிராத இந்த வங்கி மோசடியிலிருந்து இந்திய வங்கிகளும் ஆளும் தரப்பும் கற்க வேண்டிய பாடங்களைப் பார்ப்போம்.

   நடைமுறை ரிஸ்க்
வங்கியில் இதுவரையில் நடைபெற்ற பெரிய ஊழல்களில் பல, கிரெடிட் ரிஸ்க் எனும் கடன் சம்பந்தப்பட்டவையாகும். விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் போனது இந்த வகை சிக்கல்தான்.  ஆனால், கிரெடிட் ரிஸ்க் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் போன்று இதுவரை அதிகக் கவனம் பெறாத ஆபரேஷனல் ரிஸ்க் மிகப் பெரிய இழப்பினை ஏற்படுத்தி விடும் என்பதற்கு இந்த மோசடி ஒரு சிறந்த உதாரணம்.
இது மாதிரியானதொரு முறைகேடு மீண்டும் நடக்காமல் தவிர்க்கப்பட வேண்டுமெனில், வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி நடைமுறைகளின்மீது, இனி மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஒரே பணியிடத்தில் அதிகக் காலம் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றுவதைத் தவிர்ப்பது, நிதிப் பரிவர்த்தனைகளில் தேவையான அளவு குறுக்கிட்டு, பணப் பரிவர்த்தனைகளின் உண்மைத்தன்மையைப் பரிசோதிப்பது, குறிப்பாக அந்நியச் செலாவணி தொடர்பான பரிமாற்றங்களைக் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்குவது போன்ற நடவடிக்கைகள் அவசியம்.
  தணிக்கை முறை
ஒரு பொதுத் துறை வங்கியானது, உடன் தணிக்கை (Concurrent Audit), உள்தணிக்கை (Internal Audit), மேலாண்மை தணிக்கை (Management Audit), மத்திய வங்கி தணிக்கை, அந்நியச் செலாவணி மேலாண்மைத் தணிக்கை (FEMA Audit), காலாண்டு சட்டபூர்வமான தணிக்கை (Statutuory Audit) என வெவ்வேறு நிலைகளில் பல தணிக்கைகளுக்கு உட்பட்டது. இதுபோன்ற ஒரு பெரிய நிதி மோசடி, பல ஆண்டுகளாக அத்தனை தணிக்கைகளையும் ஏமாற்றியது ஆச்சர்யமான நிகழ்வாகும். இனிமேலாவது, இந்தியத் தணிக்கையாளர் சங்கம், இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசு மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் அனைவரும் இணைந்து, கண்டிப்பான அதேசமயம், வெளிப்படையான தணிக்கை வழி முறைகளை உருவாக்கி  நடைமுறைப்படுத்த வேண்டும்.

உயர்மட்ட அதிகாரிகளின் பொறுப்புணர்ச்சி
ஒவ்வொரு பெரிய வங்கி ஊழலுக்குப் பின்னர் கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே தண்டிக்கப்படுவதும், மேல்மட்ட அளவில் யாரும் பொறுப்பெடுத்துக் கொள்ளாத நிலையும் தொடரும் வரை இதுபோன்ற பெரிய வங்கி ஊழல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதுபோன்ற பெரிய மோசடிகளுக்குக் காரணமான வங்கிச் செயல்முறைக் குறைபாடுகளுக்கு (Deficiency in processes) வங்கித் தலைமையைப் பொறுப்புக்குள்ளாக்குவது, வங்கியின் மத்திய போர்டில் அதிகச் சுதந்திரத்துடன் செயல்படும் பல்துறை வல்லுநர்களுக்கும், தொழிலாளர் மற்றும் அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்குநர்களுக்கும் அதிக வாய்ப்பளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த மோசடிகளைத் தடுக்க முடியும்.

   தொழில்நுட்ப நேர்த்தி

பஞ்சாப் நேஷனல் வங்கியில், ஸ்விப்ட் தகவல் பரிமாற்றங்கள், முக்கிய வங்கி மென்பொருளுடன் (Core Banking Solutions)  இணைக்கப் பெறாததே இந்தப் பெரும் மோசடி, வங்கியின் தணிக்கையில் வெளிப்படாமல் போனதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். தொழில்நுட்பம் நேர்த்தியாக உள்ள ஒரு வங்கியில், இதுபோன்ற மோசடிகள் ஆரம்பத்திலேயே கவனத்துக்கு வந்திருக்கும்.  வங்கியின் வெவ்வேறு மென்பொருள்களை ஒருங்கிணைப்பது, ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரின் மொத்தக் கடன் தொகையை வெளிப்படையாக அறிந்துகொள்ள உதவுவதுடன், தணிக்கைக்கும் எளிதாக உள்ளாக்க முடியும். எனவே, பொதுத் துறை வங்கிகள் இதுபோன்ற தொழில்நுட்பப் பாதுகாப்பு அம்சங்களில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், வங்கிகளைத் தனியார்மயமாக்கினால் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுத்துவிட முடியும் என்று சொல்வது தவறு.
   வணிக முடிவுகளில் அரசியல் தலையீடு
எல்லா ஆட்சியிலும் பொதுத் துறை வங்கிகளின் கடன் குறித்த வணிக முடிவுகளில் அரசியல் தலையீடு தொடர்வது வேதனையானது. விவசாயக் கடன் தள்ளுபடி தொடங்கி, பெரிய நிறுவனங்களின் கடன் மோசடி வரை பல்வேறு நிலைகளிலும் அரசியல் தலையீடு, வங்கிகளை ஆட்டிப் படைக்கிறது. நீரவ் மோடி மற்றும்  ரோட்டோமக் கடன் மோசடியில் தொடர்புடைய வர்கள், இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களின் குடும்பத்துக்கு மிகவும் வேண்டப் பட்டவர்கள்; ஆளும் தலைமையுடன் நெருக்க மான உறவு வைத்திருப்பவர்கள் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இனியாவது, வங்கியின் இயக்குநர்கள் குழு, சுயேச்சையான அதேசமயம், தொழில் வல்லுநர்கள் (Profesional Directors), சிறு பான்மை பங்குதாரர்களின் பிரதிநிதிகள் மற்றும் வங்கி ஊழியர்களின் பிரதிநிதிகள் ஆகியோரைப் பெரும்பான்மையாக உள்ளடக்கி இருப்பதுடன், அவர்களைச் சுதந்திரமாகவும் செயல்பட அனுமதிப்பதன் மூலம் மட்டுமே இதுபோன்ற அதிகாரப் பின்புலம் கொண்ட மோசடித் தொழிலதிபர்களிடமிருந்து பொதுத் துறை வங்கிகளைக் காப்பாற்ற முடியும்!

Advertisements

One response

  1. ையா நமது வளைதளத்தில் பதிவிடப்படும் கட்டுரைகள் அனைத்துமே தரமானதாக ுள்ளன. வாழ்த்துக்கள்.தொடரட்டும் ுங்களின் ிந்த பணி. ின்னும் சிரந்த கட்டுரைகளை ெதிர்ப்பார்க்கிறேன்.மிக்க நன்றி.

%d bloggers like this: