Advertisements

ஆளும்கட்சியின் ஊழல் பட்டியல்! – கவர்னரை சந்திக்கும் ஸ்டாலின்

ழுகார் உள்ளே நுழைந்ததும், தி.மு.க மாநாடு தொடர்பாக நம் நிருபர் அனுப்பிய கட்டுரையை வாங்கிப் படித்தார். திருப்பிக் கொடுத்தவர், ‘‘என்னிடமும் சொல்வதற்கு மாநாட்டு விஷயங்கள் சில உள்ளன. ஈரோடு தி.மு.க மாநாட்டை மத்திய, மாநில உளவுத்துறைகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. 24-ம் தேதி காலையிலிருந்தே,

மாநாட்டுக்குக் கூட்டம் கூடுவது சம்பந்தமான அறிக்கையை மேலிடத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்’’ என்றார்.
‘‘எவ்வளவு கூட்டம் இருக்குமாம்?’’
‘‘இந்தப் பிரமாண்டமான பந்தலை அமைத்தது பந்தல் சிவா. அவர் 60 ஆயிரம் நாற்காலிகளைக் கொண்டுவந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், ஈரோடு மாவட்டக் கழகம் சார்பில் 35 ஆயிரம் நாற்காலிகள் வரவைக்கப்பட்டதாம். வெளிக்கூட்டம், உள்ளே வர முடியாதவர்கள் எனச் சேர்த்தால் இரண்டு நாள்களும் வந்து சென்றவர்கள் ஒன்றரை லட்சத்தைத் தாண்டும். இந்தக் கணக்கு ஆட்சி மேலிடத்துக்குப் போனது. ஆட்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தது ஸ்டாலின் பேச்சில்தான்.’’

‘‘என்ன விஷயம் அது?”
‘‘எடப்பாடி அரசாங்கத்தை, கூஜா அரசாங்கம் என்று சொன்னார் ஸ்டாலின். அதன்பிறகு, இந்த அரசின் மீதான ஊழல் புகாரைப் பகிரங்கமாக வைத்தார். ‘இந்தக் குதிரை பேர அரசு, கோடி கோடியாக விளம்பரம் கொடுத்து சாதனை விழாக்களைக் கொண்டாடிவருகிறது. ஆனால், இவர்களின் சாதனையெல்லாம் ஊழல் செய்வதில்தான். பருப்பு கொள்முதலில் ஊழல், ஸ்மார்ட் கார்டு தயாரிப்பதில் ஊழல், தெர்மாகோல் ஊழல், தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த மோட்டார் நிறுவனத்திடம் இவர்கள் கேட்ட கமிஷனைக் கேட்டுவிட்டு அவர்கள் ஆந்திராவுக்குப் போன கொடுமை, முதலமைச்சரின் உறவினர் ஒருவர் நெடுஞ்சாலைத் துறையின் கான்ட்ராக்ட்டை முடிவுசெய்து கமிஷன் பெறுவது, குட்கா ஊழலில் டி.ஜி.பி ராஜேந்திரனும், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜும், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் சம்பந்தப்பட்டிருப்பது, உள்ளாட்சி களில் திட்டப்பணிகளுக்கு 30 சதவிகிதம் கமிஷன் கேட்பது, மணல் ஊழல், துணைவேந்தர்கள் செய்யும் ஊழல்… இப்படி வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்’ என்றார் ஸ்டாலின்.’’
‘‘ம்!’’
‘‘இந்த ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் முழுமையாத் திரட்டி கவர்னரிடம் சமர்ப்பிக்க ஸ்டாலின் தயாராகி வருவதாகவும் ஆட்சி மேலிடத்துக்குத் தகவல் எட்டியுள்ளது. இதைத்தான் தங்களுக்கான அச்சுறுத்தலாக அவர்கள் பார்க்கிறார்களாம்.’’

‘‘ஏன் இந்த பயம்?”
‘‘ஏற்கெனவே மத்திய பி.ஜே.பி அரசுக்கும் மாநில அரசுக்கும் அவ்வளவாக நல்ல உறவு இல்லை. இப்படிப்பட்டச் சூழலில், ‘எதுவரை இந்த நட்பு வேண்டுமோ, அதுவரைக்கும் இந்த நட்பை வைத்துக்கொள்வார்கள். நட்பு முறியும்போது, இதுபோன்ற ஊழல் புகார்ப் பட்டியலை அஸ்திரமாகப் பயன்படுத்துவார்கள்’ என்பதுதான் இந்த பயத்துக்குக் காரணம். ஏற்கெனவே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், ‘தமிழக ஆட்சி நிர்வாகம் ஊழல்மயமாகத்தான் இருக்கிறது’ என்று சொல்லியிருந்தார். அதற்கு, தி.மு.க-வின் இந்தப் பட்டியல் துணை செய்துவிடும் என்றும் பயப்படுகிறார்களாம். எப்போதோ சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த ஊழல் புகார்ப் பட்டியல்தான், ஜெயலலிதாவை இருபது ஆண்டுகளாக நிம்மதியில்லாமல் ஆக்கியது என்பதை இன்றைய அமைச்சர்கள் உணர்வார்கள் அல்லவா?’’

‘‘ஆமாம்.’’
‘‘திகிலை ஏற்படுத்திய இன்னொரு செய்தி… அரசின் செய்தித் துறையில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றியும் தி.மு.க மண்டல மாநாட்டில் பேசப்பட்டிருக்கிறது. ‘தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் அ.தி.மு.க சார்பில் யார் பேச வேண்டும் என்பதைத் தலைமைச் செயலகத்தில் இருக்கும் செய்தித் துறை கூடுதல் இயக்குநர் எழில்தான் முடிவு செய்கிறார்’ என வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா பேசியிருக்கிறார்.’’
‘‘அப்படியா?’’
‘‘இந்தச் செய்தியின் தொடர்ச்சியாக, தினகரனின் உண்ணாவிரதத்தில் ஒரு செய்தி இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தஞ்சாவூரில் தினகரன் உண்ணாவிரதம் இருந்தார். அதை ஜெயா ப்ளஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்தது. அந்த சேனலை அரசு கேபிள் டி.வி நிறுத்தியது. தினகரனைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு எடப்பாடி அரசு செய்த இந்தச் சித்து விளையாட்டு அரசுக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. அரசு கேபிள் டி.வி-க்கு டிஜிட்டல் அனுமதி கேட்டுத் தமிழக அரசு தொடர்ந்து போராடி வந்த நிலையில், தற்காலிகமாக அந்த அனுமதியை வழங்கியது மத்திய அரசு. ‘அரசே கேபிள் டி.வி-யை நடத்தினால், டிஜிட்டல் ஒளிபரப்பில் பாரபட்சம் காட்டப்படலாம்’ என்பது ட்ராயின்(தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) கருத்து. அதனால்தான், தற்காலிக அனுமதி தரப்பட்டது. இப்போது ஜெயா ப்ளஸ் சேனலை இருட்டடிப்பு செய்ததன் மூலம் ட்ராயின் கருத்து உறுதியாகியுள்ளது. இதை ட்ராயின் கவனத்துக்கு, தினகரன் ஆதரவாளர்கள் புகாராக எடுத்துச்செல்லப் போகிறார்கள். தி.மு.க மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள்தான் இந்த இருட்டடிப்புக்கும் காரணமாம். ‘செய்தித் துறை இயக்குநர் சங்கரும் எழிலும் வந்தாலும் இந்த ஆட்சியைக் காப்பாற்ற முடியாது’ எனக் காட்டமாக விமர்சனம் செய்தார், அ.ம.மு.க திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் கேபிள் சீனிவாசன்.’’
‘‘ஓஹோ!’’
‘‘இந்த உண்ணாவிரதத்தை, தஞ்சாவூர் வீட்டில் இருந்தபடி டி.வி-யில் பார்த்து மகிழ்ந்தி ருக்கிறார் சசிகலா. ‘நமக்கு இனிமேல் நல்ல காலம்தான். காட்சிகள் மாறுகின்றன என்பதற்கு இந்தக் கூட்டமே சாட்சி’ என அருகில் இருந்தவர்களிடம் சொல்லி யிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் ஜெயா ப்ளஸ் சேனல் இருட்டடிப்பு செய்யப்பட்டது. கோபமான சசிகலா, ‘நேரம் வரட்டும். இவர்களைப் பார்த்துக்கொள்கிறேன்’ என எடப்பாடிக்கும் பன்னீருக்கும் எதிராகக் கொந்தளித்தாராம். இன்னொரு விஷயம்… ‘தன் அமைப்பில் தன் குடும்பத்தாருக்கு முக்கியத்துவம் இருக்காது’ என்று தினகரன் சொல்லியிருந்தார். ஆனால், உண்ணாவிரதத்துக்காக வைக்கப்பட்டிருந்த பல ஃப்ளெக்ஸ்களில் விவேக்கின் புகைப்படமும் இருந்தது. அதாவது ‘தினகரனுக்கு அடுத்து விவேக்’ என்பது போல விளம்பரங்களை வைத்திருந்தனர். ஆனால், திவாகரனின் மகன் ஜெயானந்தின் ‘போஸ் மக்கள் பணியக’த்தினர் உண்ணா விரத்தில் பங்கெடுத்தாலும், தங்கள் அமைப்பின் கொடியையோ, ஃப்ளெக்ஸையோ அவர்கள் வைக்கவில்லை.’’

‘‘திவாகரன் வந்து சசிகலாவைப் பார்க்கிறாரா?’’
‘‘வந்தார். அப்போது, அவரின் மகன் ஜெயானந்த் ஆரம்பித்திருக்கும் போஸ் மக்கள் பணியகம் பற்றி சசிகலா கேட்டிருக்கிறார். ‘இதெல்லாம் தேவையா’ என்பது போல சசிகலா கேட்டதற்கு, ‘அவன் என்ன செய்வான்? நான் எப்போதும் போல் பின்னாடியே இருந்துடறேன். என் மகனுக்கும் மட்டும் வழி பண்ணுக்கா’ என்று திவாகரன் சொன்னார். ‘பொறுமையா இரு’ என்று சசிகலா சொல்ல, ‘இதற்கு மேல் என்ன பொறுமையா இருப்பது?’ எனக் கேட்டுவிட்டுக் கோபமாக வெளியே வந்தாராம் திவாகரன்.’’
‘‘ரஜினி மக்கள் மன்றத்தில் சலசலப்பு ஆரம்பித்துள்ளதே?’’
‘‘திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் தம்புராஜ் நீக்கப்பட்ட விவகாரத்தில், ரஜினி ரொம்பவும் டென்ஷனாகி சத்தம் போட்டுள்ளார். ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் ரஜினியின் மனைவி லதா, ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா என்று சிலருடன் குடும்பரீதியான நட்பில் இருந்தனர். அரசியல் அறிவிப்புக்கு முன்பு ரஜினி தன் குடும்பத்தினரை அழைத்து, ‘மன்றம் வேறு. அரசியல் வேறு. நீங்கள் யாரும் இனி அரசியலில் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று கறாராக எச்சரித்திருந்தார். மன்ற நிர்வாகிகளை அழைத்து, ‘என் குடும்பத்தினர் படங்களை போஸ்டரில் போடுவது மாதிரியான எந்தச் செயலையும் இனி யாரும் செய்யக்கூடாது’ என்று உத்தரவு போட்டிருந்தார்.’’
‘‘சரி, தம்புராஜ் என்ன செய்தார்?’’
‘‘லதா ரஜினியின் தயா பவுண்டேஷன் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் தம்புராஜ் கலந்துகொள்வார். சமூகப் பணிகளை முன்னின்று செய்வார். அதனால், தம்புராஜ் எப்போது ரஜினி வீட்டுக்குச் சென்றாலும், உடனே உள்ளே அனுமதிக்கப்படுவார். லதா ரஜினியின் குட்புக்கில் இருந்தார். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு மில் அதிபர் அரவிந்த் என்பவர் மாவட்டப் பொறுப்பாளராகவும், தம்புராஜ் மாவட்டச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். அங்குதான் பூசல் துவங்கியது. தம்புராஜுக்கு இந்த நியமனத்தில் உடன்பாடில்லை. தலைமை மன்ற நிர்வாகிகள் ராஜு மகாலிங்கம், சுதாகர், ராஜசேகர் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் தம்புராஜுக்கும் கருத்து வேறுபாடு அதிகமானது. மூவர் தரப்பில் ரஜினியிடம் புகார் சொல்லப்பட்டது. ரஜினி இதை விசாரித்தார். பிறகு தம்புராஜை நீக்கும்படி சொல்லியிருக்கிறார். ‘இதுபற்றி லதா தரப்பிலோ, அண்ணன் சத்யநாராயணா தரப்பிலோ உங்களிடம் பேசினால், இது என் உத்தரவு என்று சொல்லுங்கள்’ என ரஜினி கோபமாகச் சொன்னார்.’’
‘‘தம்புராஜுக்கு மாவட்ட அளவில் செல்வாக்கு இருப்பது போல் தெரிகிறதே?’’
‘‘ரஜினி மன்றத்தில் கால் நூற்றாண்டுக்கு மேல் இருந்துவிட்டார். மாவட்டம் முழுக்க அறிமுகமானவர். அரசியலுக்காக, அவர் பார்த்து வந்த அரசு வேலையை உதறியவர். ஆனால், ‘திண்டுக்கல் மாவட்ட அரசியல் வி.ஐ.பி-க்கள் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் சீனிவாசன் போன்றவர்களைச் சமாளிக்க, சகல பலமும் உள்ள அரவிந்த் போன்றவர்களால் தான் முடியும் என ரஜினி தலைமை மன்ற நிர்வாகிகள் நினைத்திருக்கிறார்கள். அதனால்தான், தம்புராஜைப் பற்றித் திரித்து ரஜினியிடம் சொல்லிவிட்டார்கள்’ என்று தம்புராஜ் தரப்பினர் உறுதியாகச் சொல்கிறார்கள்.’’
‘‘அப்படியானால், லதாவுக்கு ரஜினி ஷாக் கொடுத்துவிட்டார் என்று சொல்லலாமா?’’
‘‘ஆமாம். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் சிலர், ரஜினி குடும்பத்தினரின் பெயர்களைப் பயன்படுத்தி வருகிறார்களாம். விரைவில் அங்கும் ஷாக் பரவும்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: