Advertisements

பதற்றமா… கருக்குழாய் தசை சுருங்கும்!

குழந்தைகளற்ற தம்பதியரின் எண்ணிக்கை, 15 ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஐ.டி., துறையினரை, இப்பிரச்னை வெகுவாக பாதித்துள்ளது. இதற்கு அடிப்படை காரணம், மன அழுத்தம் எனப்படும், ‘ஸ்ட்ரெஸ்!’
குழந்தையின்மைக்கு, மன அழுத்தம் எப்படி காரணமாகிறது?

குழந்தையின்மை, குழந்தைப் பேறு, குழந்தைப் பேறின் போது எதிர்பாராமல் ஏற்படும் கருச்சிதைவு போன்றவை, மன அழுத்தத்துடன் தொடர்பு உடையவை. குழந்தையில்லை என்ற விஷயம், உடலளவில், மனதளவில், சமூக அளவில் மிகப் பெரிய பாதிப்பை தருகிறது. சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் மன அழுத்தமும், இதனுடன் சேர்ந்து விடுகிறது.
சிகிச்சையின் போது, நம்பிக்கைக்கு மாறாக, ‘ஸ்ட்ரெஸ்’ வருவதற்கு என்ன காரணம்?
குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தம்பதியரில், 20 சதவீதத்தினர், மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ‘குழந்தை இல்லை’ என்ற விஷயம், பல விதங்களில் மன அழுத்தத்தை தந்திருக்கும். அதற்கான சிகிச்சையின் போது, வேறு விதத்தில், ‘ஸ்ட்ரெஸ்’ வரும். குறிப்பாக, மருத்துவர்கள் அறிவுரையின்படி, ‘திட்டமிட்ட தாம்பத்திய உறவு, தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிடுகிறோம்’ போன்ற கவலைகளும் சேர்ந்து கொள்கின்றன.
பெரும்பாலான மகப்பேறு மருத்துவர்கள், ‘இந்த தேதியில் தான் கரு முட்டை உருவாகும்; அப்போது தான் தாம்பத்திய உறவு இருக்க வேண்டும்’ என, தேதி குறித்துக் கொடுப்பர். மனம் தொடர்பான விஷயத்தை, இயல்பான தாம்பத்யமாக இல்லாமல், மருத்துவர் குறித்துக் கொடுத்த தேதியில் திட்டமிடும் போது, இருவரும் மனதளவில் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால், சிறிய பிரச்னைகள் கூட, சிக்கலாகி, மன அழுத்தம் ஏற்பட காரணமாகிறது.
இப்படி இல்லாமல், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தாம்பத்திய உறவு இருக்கும் போது, எப்போது கரு முட்டை வந்தாலும், கரு தரிப்பதற்கான சாத்தியம் அதிகம் என்பதை பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. காரணம், தம்பதிகளுக்கு மனதளவில், ‘ஸ்ட்ரெஸ்’ மற்றும் பதற்றம் இல்லாமல் இருப்பது!
ஒரு பெண் பதற்றமாக இருந்தால், கருக்குழாயில் உள்ள தசைகள் இறுக்கமாகி விடும்; இது, கரு தரிப்பதில் பிரச்னையை ஏற்படுத்தும்.
சிகிச்சையின் போது, வேறு என்ன அம்சங்கள், மன அழுத்தத்தை ஏற்படுத்தும்?
கரு முட்டை வளர்ச்சி குறித்த பரிசோதனை, கரு முட்டை வெளியேறுவதற்கு தரும் ஊசி போன்றவையும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
குழந்தையின்மைக்கும், வாழ்க்கை முறை மாற்றத்திற்கும் தொடர்பு உள்ளதா?
நிச்சயமாக இருக்கிறது…
இந்தியாவில் இருந்தபடியே, வெளிநாட்டிற்கு அவர்களது நேரத்திற்கு வேலை செய்து தருவோரின் சாப்பிடும் நேரம், துாக்கம் இரண்டும் தலைகீழாக மாறி வருவதால், ‘பயோலாஜிக்கல் கிளாக்’ எனப்படும், உடலில் செயல்படும் உயிரி கடிகாரத்தின் சுழற்சியே மாறி விடுகிறது. பிறந்ததில் இருந்து, 25 ஆண்டுகள், நம் நேரப்படி காலை உணவு, வேலை, மதிய உணவு, இரவு துாக்கம் என, பழகியிருக்கிறோம். நம் உடல் பழகிய பழக்கத்திற்கு முற்றிலும் மாறாக, இரவில், காலை உணவை சாப்பிடுவது, வேலை செய்வது, பகலில் துாங்குவது என, உயிரி கடிகாரத்தை மாற்றியமைக்கும் போது, நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன.
இதனால், உடலின் உள் செயல்பாடுகளில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்?
உயிரி கடிகாரத்தின் இயக்கத்திற்கு, பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளே முக்கிய காரணங்கள். இவற்றிலிருந்து சுரக்கும் ஹார்மோன்கள், உடல் உள் செயல்பாட்டை சீராக வைக்கிறது. நம் மனதில் ஏற்படும் உணர்வுகள், எண்ணங்கள் அனைத்தும், இரண்டு சுரப்பிகளையும் பாதிக்கும்.
உதாரணமாக, ஒரு பெண், பள்ளி படிப்பை முடிக்கும் வரை வீட்டில் இருந்து, அதன்பின், கல்லுாரிக்கு, ஹாஸ்டலில் சேர்ந்தால், அதுவரையில் சீராக இருந்த மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படலாம்;
ஒழுங்கில்லாமல் போகலாம். அதேபோல, திருமணமாகி, கணவன் வீட்டிற்கு செல்லும் பெண்ணிற்கோ அல்லது புதிய இடத்திற்கு வேலைக்கு செல்லும் பெண்ணிற்கோ இது போல் ஏற்படலாம். இதற்கு காரணம், சூழ்நிலையில், மனதளவில் ஏற்படும் மாற்றங்கள்.
புதிய மனிதர்கள், உறவுகள் போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பிரச்னைகளால், இரண்டு சுரப்பிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றன; விளைவு, அதன் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
‘ஸ்ட்ரெஸ்’ அதிகமானால், ‘பீனியல்’ சுரப்பி சுரக்கும், ‘ஆல்பா அமிலேஸ்’ ஹார்மோன் அதிகமாகி, மாதவிடாய் சுழற்சியை, சீரற்றதாக மாற்றி விடும். அதேபோல், ‘பிட்யூட்டரி’ சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன் தான், கரு முட்டை வளர்ச்சிக்கு உதவுகிறது.
மன அழுத்தத்தால், ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டால், கரு முட்டை சரியாக வளர்ச்சி அடையாது; மாதவிடாயும் சீராக வராது.
உடல் பருமனுக்கும், குழந்தை இன்மைக்கும் தொடர்பு உண்டா?
உயிரி கடிகாரம் மாறுவதால், உடல் பருமன் ஏற்படுகிறது. இரவு கண் விழித்து, வேலை செய்யும் பலருக்கும் இப்பிரச்னை உள்ளது.
மாலை, 6:00 மணிக்கு அலுவலகம் சென்று, பசிக்கும் நேரத்தில், ‘ஜங்க் – புட்’ சாப்பிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு வீடு வந்து, அந்த நேரத்தில் இருப்பதை சாப்பிட்டு, துாங்கி, மாலை, 4:00 மணிக்கு எழுந்து, டிபன் அல்லது ஜூஸ் குடித்து, அலுவலகம் செல்வது என, இரவு வேலை செய்பவர்களின் அட்டவணை இவ்வாறு தான் உள்ளது.
உடலை சீராக வைத்துக் கொள்ளக்கூடிய கூடிய, ‘ஒர்க் – அவுட்’ கிடையாது; சமச்சீரான உணவும் இல்லை; முறையான துாக்கம் கிடையாது. விளைவு, உடல் பருமன்!
இரவில், இருட்டு அறையில் ஆழ்ந்து துாங்கும் போது மட்டுமே, ‘மெலடோனின்’ ஹார்மோன் சுரக்கும். ஆழ்ந்த துாக்கத்திற்கு காரணமான, ‘மெலடோனின்’ செல்களின் சீரமைப்பு உட்பட, பல முக்கிய வேலைகளை செய்கிறது.
இரவு துாங்கா விட்டால், இந்த ஹார்மோன் சுரக்காது;
செல்களில் நடக்கும் சீரமைப்பு வேலையும் சரி வர நடக்காது. இதனால், உடலின் உள் உறுப்புகள், ‘ஸ்ட்ரெஸ்’ ஆகும்.
சமச்சீரற்ற உணவு, துாக்கமின்மையால் உடல் பருமன் மற்றும் ஹார்மோன் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, கரு முட்டை வளர்ச்சியில் குறைபாடு, நீர்கட்டிகள் வருவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதற்கு என்ன தீர்வு?
முதலில் மாற்ற வேண்டியது, வேலை; அதன்பின், உணவு பழக்கம்; அடுத்தது, ஒர்க் – அவுட்; கடைசியில் தான் மருந்து. காரணத்தை கண்டுபிடித்து சரி செய்வது தான், இந்த சிகிச்சையின் அடிப்படை. உங்கள் பிரச்னைக்கு காரணமே, சூழ்நிலைகளும், வாழ்க்கை முறை மாற்றங்களும் தான். அதை சரி செய்வது தான் முக்கியம்.
இந்த உண்மையை, பல நேரங்களில் உணராமல், மறந்து விடுகிறோம்!
டாக்டர் ஜெயராணி காமராஜ்,
மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை.
jeyaranikamaraj@gmail.com

Advertisements
%d bloggers like this: