Advertisements

குழந்தைகளைப் பாதிக்குமா வெயில்

வெயில் ஆகாது… வெயிலில் விளையாடினால் கறுத்துவிடுவார்கள்’ என்றெல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்காதீர்கள். சிவப்பான சருமம்தான் அழகு என்கிற எண்ணத்தைப் பிஞ்சு மனங்களில் விதைக்காதீர்கள். அதற்குப் பதில் வெயிலில் விளையாடுவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் விஷயங்களைச் செய்யுங்கள். குழந்தைகளின் உடலில் வெயில்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வைட்டமின்-டி

பற்றாக்குறையின்றி வளர்வார்கள். எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் தேவையான வைட்டமின்-டி, சூரியஒளியில் இருந்தே கிடைக்கும். காலையிலும் மாலையிலும் இளம் வெயில் அவர்கள் உடலில் படும்படி விளையாட அனுமதியுங்கள். 

12 மணிக்கு மேல் 3 மணி வரையிலான வெயில்தான் ஆபத்தானது. குழந்தைகளுக்கான பிரத்யேக சன் ஸ்க்ரீன் கிடைக்கிறது. பெரியவர்கள் உபயோகிக்கும் சன் ஸ்க்ரீன் அவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். சரும மருத்துவரின் ஆலோசனையின்பேரில் குழந்தைகளின் சருமத்துக் குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
விளையாடுவதற்கு அரை மணி நேரம் முன்ன தாகக் குழந்தைகளுக்கு சன் ஸ்க்ரீன் உபயோகிக்க அறிவுறுத்துங்கள். விளையாட்டின்போது தொப்பி மற்றும் கை உறைகள் அணிய அறிவுறுத்தலாம்.
வெயிலில் விளையாடிவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு உடனே குளிப்பதை வழக்கப்படுத்த வேண்டும். வியர்வை மற்றும் மாசினால் படியும் அழுக்குகள் சருமத்தில் தொற்று களை ஏற்படுத்தலாம். வெயிலில் விளையாடச் செல்கிற குழந்தைகளுக்கு வைட்டமின்-சி சத்துள்ள எலுமிச்சை, சாத்துக்குடி, கொய்யா, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைக் கொடுக்கலாம். உணவில் பறங்கிக்காய், நெல்லிக் காய், கேரட், தக்காளி, புரோக்கோலி போன்றவை அடிக்கடி இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வெயிலினால் உண்டாகும் பாதிப்புகளை இந்த உணவுகள் விரட்டும்.
வெயில் காலத்தில் குழந்தைகளுக்குச் சருமத்தில் செதில்களாக உதிர்வது, தலையில் பொடுகு, அதீத சரும வறட்சி போன்ற பிரச்னைகள் தோன்றும். துத்தநாகக் குறைபாடும் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணமாகலாம். சரும வறட்சி ஏற்படாமலிருக்க, குழந்தைகளை நிறைய தண்ணீர் குடிக்க அறிவுறுத்தலாம். பீன்ஸ், நட்ஸ், சிக்கன் போன்ற உணவுகளைக் கொடுப்பதன் மூலம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கலாம்.

Advertisements
%d bloggers like this: