குறையொன்றும் இல்லை – லவ் யுவர் பாடி

னக்கு மூக்கு லேசா வளைஞ்சிருக்கு’ என்று யாராவது சொல்லிவிட்டால் அதை நினைத்து தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலர் உண்டு. ‘உன் முகத்துல ஏன் இவ்ளோ பிம்பிள்ஸ் இருக்கு?’ என்ற வார்த்தையைக் கேட்டதும் முகத்தில் க்ரீம், பவுடர், மஞ்சள் என விதவிதமாகத் தடவி கண்ணாடியே கதியெனக் கிடப்பார்கள் சிலர். தலைமுடி பிரச்னை இருப்பவர்கள், சதா சர்வகாலமும் அதுபற்றிய

தகவல்களைத் திரட்டிக்கொண்டே இருப்பார்கள். தம்மை நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என ஒருவிதத் தாழ்வுமனப்பான்மையும் இவர்களுக்கு இருக்கும். இவற்றையெல்லாம் ‘ஒருவகை மனநோய்’ என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
“சமூகம் சொல்லித்தரும் விஷயங்களில், மிகவும் மோசமானது உடல் சார்ந்த விமர்சனங்களே. உடலின் அமைப்பை வைத்து ஒருவரைக் கேலி செய்வதும் அவரது தோற்றத்தை வைத்து சம்பந்தப்பட்டவரின் குணத்தை முடிவுசெய்வதும் அவர்களுக்கு எவ்வளவு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. இதுபோன்ற சூழலில் தமது உடல் அமைப்பின்மீது திருப்தி இல்லாமல் அதுபற்றியே நினைத்துக்கொண்டிருப்பார்கள், சிலர். இத்தகைய நிலை, `பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர் (Body Dysmorphic Disorder)’ எனப்படுகிறது. இந்தப் பிரச்னை வயது வித்தியாசமின்றி பலரையும் பாதிக்கிறது” என்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. இதுபற்றி விரிவாகப் பேசினார் அவர்…

“உடலமைப்பு சார்ந்த இந்த உளவியல் சிக்கலைப் பெரும்பாலும் பெண்களுக்கான பிரச்னையாகவும், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரச்னையாகவுமே நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில், ஆண் பெண் இருவரையும் சமஅளவில் இது பாதிக்கிறது.  உடல் எடை குறைவாக உள்ளவர்கள், முடி வளர்ச்சி குறைவாக இருப்பவர்கள், சருமபாதிப்பு உள்ளவர்கள், வளரிளம் பருவத்தினர், கண் பிரச்னை உள்ளவர்கள் எனப் பாதிப்புக்குள்ளானவர்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். 
சமூகத்தைக் கண்டு பயப்படும் ‘சோஷியல் போபியா’ (Social phobia) வகையைச் சார்ந்த இப்பிரச்னை, சம்பந்தப்பட்ட நபரை வெளி உலகுக்கு வந்து, மக்களோடு மக்களாகப் பழகவிடாது. ஓர் இடத்துக்குச் சென்றால், ‘எப்படியெல்லாம் கிண்டலடிப்பார்கள்’ எனத் தமக்குத்தாமே கற்பனை செய்துகொண்டு, தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்ளும் மனோபாவம் இவர்களுக்கு நிறையவே இருக்கும்.

மூளையின் செயல்பாடுகளுக்கு உதவிசெய்யும் செரோடினின் (Serotonin) என்ற ஹார்மோனில் சில நேரங்களில் குறைபாடுகள் ஏற்படும்போது மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுப் பிரச்னையைத் தீவிரப்படுத்தும். தகுந்த மனநல ஆலோசனை பெறுவதன்மூலம் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.’’
வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்யலாம்?
* பாதிப்புக்கு ஆளானவர்கள் இருக்கும்போது பொதுவாக யாரைப் பற்றியாவது விமர்சனம் செய்தாலோ, குறை  கூறினாலோ தன்னைத் தான் சொல்கிறார்கள் என்று நினைப்பார்கள். அதையே நினைத்து தன்னைத்தானே வருத்திக்கொள்வார்கள். எனவே, இப்படிப்பட்டவர்கள் முன்னிலையில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது.

 

* உணவு, உடற்பயிற்சி பற்றி அறிவுரை கூறுங்கள்.
* பாதிக்கப்பட்டவரிடம், திறந்த மனதுடன் பேசிப்பழகுங்கள். அவர்களின் தனிமையையும், கண்ணாடி பார்க்கும் நேரத்தையும் குறைக்க முற்படுங்கள்.
* அவர்களுடைய எந்தச் செயலுக்காகவும், அவர்களின் உடலைக் குறைகூறாதீர்கள். எல்லா நேரத்திலும், அவர்களுக்குத் தைரியம் கொடுங்கள். எல்லோருடனும் பழகும் வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள்.
* அவர்களின் கருத்தைக் கேட்பது, அவர்களுக்கு முக்கியத்துவம் தருவது, அவர்களை நம்புவது போன்றவற்றைச் செய்யுங்கள்.

%d bloggers like this: