தமிழக கட்சிகளிடம் காவிரி படும் பாடு: நாடகம், நடுக்கம், நகைச்சுவை! அத்தனையும் அவலம்!

பல லட்சம் ஹெக்டேர் நிலங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் நீர்தான் காவிரி. இதை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளு

ம் வண்ணம் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது கர்நாடகா! மாநில சுயாட்சி விவகாரங்களில் செருக்குடன் தலைநீட்டும் மத்திய அரசோ, கர்நாடகாவின் மறுப்பை அடக்கிவிட்டு, மேலாண்மை வாரியத்தை அமைக்கலாம். ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் இதைச் செய்தால் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விடும் எனும் எண்ணத்தில் மெளனம் காக்கிறது மத்திய அரசு. 

இந்த வாரியம் அமைப்பதற்காக மைய அரசு கொடுத்த 6 வார கால கெடுவும் முடிந்து ஒரு வாரமாக போகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தபடி ருத்ரதாண்டவமாடி வருகிறார்கள். மத்திய அரசையும், தமிழக அரசையும் ஒரே சட்டியில் போட்டு வறுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். 
காவிரியை மையமாக  வைத்து இவர்கள் காட்டும் ரியாக்‌ஷன்களில் ஆத்திரம் மட்டுமில்லை நாடகம், நடுக்கம், நகைச்சுவை என்று பல வகையான உணர்வுகளும் வெளிப்பட்டு இந்த உரிமைப் போராட்டத்தை வெற்று அரசியல் காட்சிகளாக்கி இருக்கும் அவலம் கொடுமையானது. 

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசிய ‘தற்கொலை செய்து கொள்வோம்’ எனும் வார்த்தை பெரும் நகைப்புக்கு இலக்கானது. 

இன்று அதே கட்சியை சேர்ந்த முத்துக்கருப்பன் எனும் எம்.பி. காலையில் தன் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டுவிட்டு இப்போது ‘அதை நான் யாரிடமும் கொடுக்கவில்லை. ஆனால் தமிழக முதல்வர்கள் என்னை ராஜினாமா செய்ய வேண்டாம் என்கிறார்கள். குழப்பத்தில் இருக்கிறேன்!’ என்று மண்டை சுற்ற வைக்கிறார். 

எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினோ ‘மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து சித்துவிளையாட்டு விளையாடுகிறார்கள் இந்த விஷத்தில். காலக்கெடு முடிந்த பின் மீண்டும் 3 மாத காலம் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கும் மத்திய அரசு, ‘ஸ்கீம்’ எனும் வார்த்தை புரியவில்லை என்கிறது, இதெல்லாம் தமிழகத்தின் உரிமையை ஒழிக்கும் ஸ்கீமோ! என்று தோண்றுகிறது…என்று தன் அறிக்கையில் ரைமிங்காய் விளையாடி இருக்கிறார். 

கர்நாடகாவை காங்கிரஸ்தான் ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸும் தி.மு.க.வுடன் சேர்ந்து காவிரி விஷயத்தில் கர்நாடக அரசை கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது. சோனியா அல்லது ராகுலிடம் சொல்லி கர்நாடகாவின் முதல்வரையும், அமைச்சரவையையும் இன்ஃப்ளூயன்ஸ் செய்ய வழியில்லாத நிலையை மூடி மறைத்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் தேர்தல் அரசியலை நோக்கியதுதான். 

இதே விவகாரத்துக்காக மத்திய அரசை கண்டித்து திருச்சியில் இன்று ரயில் மறியல் நடந்தது. அப்போது தி.மு.க. தொண்டர்களில் ஒருவர் ரயில் இஞ்சினின் முன்புறத்தில் ஏறி அதன் தலைப்புற லைட்டில் ஏறி உட்கார்ந்து இரண்டு கைகளையும் உயர்த்தி ‘ஹேஹேஹே!’ என கூக்குரலிட்டார். அப்போது கீழிருந்த போலீஸ்காரர்கள் ‘யோவ், மேலே கரண்டு லைன் போகுது’ என்று சவுண்டு விட, அவர் அலறி இறங்கியதை பார்க்க வேண்டுமே. 

இவர்கள் நடத்தும் கூத்துக்கள் போதாதென்று, ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வே நடத்தும் உண்ணாவிரதம்! இவை எல்லாவற்றையும் தாண்டிய ஹைடெக் காமெடி. 
இவர்களிடம் காவிரி படும் பாடு கண்ணீர் வர வைக்கிறது!

%d bloggers like this: