காசியில் வசித்து வந்த மிருகண்ட முனிவர் மருத்துவதி தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. வேதனைப்பட்ட தம்பதியர் காசியில் இருந்து புறப்பட்டு வழியில் இருந்த சிவத் தலங்கள் அனைத்தையும் தரிசித்து விட்டு திருமணல்மேடு என்ற தலத்திற்கு வந்தனர். இங்கு ஒரு தவச்சாலை அமைத்து நிரந்தரமாக இங்கேயே தங்கினர். அருகேயிருந்த பரமசிவன் பார்வதியை ஆராதித்து கடுமையான தவம் இருந்தார் மகரிஷி. நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் என முனிவரின் தவக்காலம் நீடித்தது. மனமிறங்கிய சிவபெருமான் முனிவரின் முன் தோன்றினார். “என்ன வரம் வேண்டும்? கேள் மகரிஷியே” எனக் கேட்டார் இறைவன்.
தன் மனக் குறையை, குழந்தை இல்லாத துயரை இறைவனிடம் கூறிய முனிவர் தனக்கு குழந்தை வரம் வேண்டும் என வேண்டி நின்றார்.
“நீண்ட ஆயுளும் குறைந்த ஞானமும் உடைய குழந்தை வேண்டுமா? அல்லது நிறைந்த ஞானமும் பதினாறு வயது வரை மட்டுமே வாழும் குழந்தை வேண்டுமா?”எனக் கேட்டார் இறைவன். “ஞானமுள்ள குழந்தையே வேண்டும்” என முனிவர் கேட்க இறைவனும் “அப்படியே ஆகட்டும்” என வரம் தந்தருளினார். முனிவர் மிக மகிழ்ச்சியாக மனைவியோடு காசிக்குப் புறப்பட்டார். முனிவர் தவச்சாலையில் தவமிருந்து திருமணல் மேட்டிலிருக்கும் இறைவனையும் இறைவியையும் பூஜித்ததால் இத்தலத்து இறைவன் முனிவரின் பெயரால் மிருகண்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். முனிவரின் துணைவியின் பெயரால் இத்தல இறைவி மருத்துவதி என்று அழைக்கப்படுகிறாள்.
பிறகு, இறைவன் வரம் தந்தபடி மிருகண்ட முனிவரின் மகனாக மார்க்கண்டேயன் காசியில் பிறந்தார். வளர்ந்த பின் தனக்கு பதினைந்து வயதாகும்போது தான் இன்னும் ஒரு வருடம் மட்டுமே உயிர் வாழமுடியும் என்ற உண்மையை உணர்ந்தார் மார்க்கண்டேயன். காசியிலிருந்து புறப்பட்ட மார்க்கண்டேயன் ஒவ்வொரு சிவத் தலமாக தரிசனம் செய்து கொண்டே வந்தார். 107வது தலமாக தான் பிறக்க அருள் புரிந்த இறைவன் அருள் பாலிக்கும் திருமணல்மேடு வந்தார். அங்கேயே ஒரு ஆசிரமம் அமைத்தார். ஒரு புதிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். மார்க்கண்டேயன் பூஜித்த அந்த சிவலிங்கத்தின் பெயர் ஆத்மார்த்த சிவலிங்கம். இந்த மார்க்கண்டேயனுக்கு திருமணல்மேட்டில் ஒரு ஆலயம் உள்ளது.
இந்த ஆலயம் ஸ்ரீ மார்க்கண்டேயன் ஆலயம் என்ற பெயரிலேயே உள்ளது. முகப்பில் மூன்று நிலை அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் உள்ள நீண்ட பிராகாரத்தில் கொடிமரம் பிள்ளையார் பீடம் நந்தி காட்சிதர அடுத்துள்ளது மகாமண்டபம். மகாமண்டபத்தின் வலது புறம் இறைவி மருத்துவதியின் சந்நதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேலிருகரங்களில் பத்மத்தோடும் ஜபமாலையுடன் காட்சி தரும் அன்னை கீழிரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள் பாலிக்கிறாள். அன்னைக்கு எதிரே மகாமண்டத்தில் ஆலய நாயகனான மார்க்கண்டேயனின் சந்நதி உள்ளது. மார்க்கண்டேயனால் பூஜிக்கப்பட்ட ஆத்மார்த்த சிவலிங்கமும் அதே கருவறையில் உள்ளது. மார்க்கண்டேயன் சிவ பூஜை செய்யும் கோலத்திலேயே இங்கு உள்ளார்.
மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும் கருவறையும் உள்ளன. கருவறையில் இறைவன் மிருகண்டேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார். இறைவன் கீழ் திசை நோக்கி அருள் பாலிக்க ஆலயமும் கீழ்திசை நோக்கியே அமைந்துள்ளது. ஆலயத் திருச்சுற்றில் மேற்கில் விநாயகர், ஷண்முக சுப்ரமணியர் வடக்கில் சண்டீஸ்வரர், நடராஜர், பைரவர், வடகிழக்கில் நவகிரக நாயகர்கள் சந்நதிகள் உள்ளன. தேவகோட்டத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தியும் மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கில் பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தென் திசையில் இரட்டைப் பிள்ளையார் ஆலயம் உள்ளது.
காசியிலிருந்து வந்த மார்க்கண்டேயன் 108வது தலமாக திருக்கடையூர் வந்தார்.
காசியிலிருந்து கமண்டலத்தில் கங்கை நீரையும் தன்னுடன் கொண்டு வந்தார். திருக்கடையூருக்கு அருகே இருக்கும் திருக்கடவூர் மயானம் என்ற ஊரிலுள்ள ஒரு கிணற்றில் அந்த கமண்டல கங்கை நீரை ஊற்றினார். அங்கு கங்கா தேவியை எப்போதும் வாசம் செய்யும்படி வேண்டிக் கொண்டார். அந்தக் கிணற்று நீரே தற்போது அசுபதி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. திருக்கடவூர் மயானம் என்ற அந்த ஊர் தற்போது திருமெய் ஞானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிணற்று நீரை எடுத்து வந்து தினசரி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். பங்குனி சுக்கில பட்ச அசுவனியில் இங்கு தீர்த்தவாரி நடைபெறும். இந்த தீர்த்தவாரியில் குளித்தால் காசியிலுள்ள கங்கையில் குளித்த பலன் உண்டாகும்.
இங்கு பஞ்சாட்சர ஹோமம் நடத்தினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்றும் சங்காபிஷேகம் நடத்தினால் குடும்பம் நலம் பெறும் என்றும், தீராத வியாதிகள் தீரும் என்றும் கூறுகின்றனர். தனது 16 வயது முடியும் தருவாயில் தன் உயிரை பறிக்க வந்த எமனுக்கு பயந்து அமிர்தகடேஸ்வரரை தஞ்சமடைந்தார் மார்க்கண்டேயன். எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனை காப்பாற்றிய இறைவன் “என்றும் சிரஞ்சீவியாய் இரு” என்று அவருக்கு அருள் தந்த கதை அனைவருக்கும் தெரியும். மிருகண்ட முனிவருக்கு பிள்ளை வரம் தந்த மிருகண்டேஸ்வரரையும் மருத்துவ குணம் நிரம்பிய அன்னை மருத்துவதியையும் இறைவனால் சிரஞ்சீவியாய் வாழ அருள் பெற்ற மார்க்கண்டேயனையும் தரிசித்தால் எல்லா நன்மைகளையும் பெறலாம் என்பது திண்ணம்!
நாகை மாவட்டம் திருக்கடையூரிலிருந்து 2கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது