இறந்த பிறகும் வாழும் உடல்!

மீன் செத்தாக் கருவாடு! நீ செத்தா வெறுங்கூடு!’’ என்பது கண்ணதாசனின் வைரவரிகள். மீன்கள் இறந்தபிறகும் அவை கருவாடு என்ற உணவுப்பொருளாகி மனிதனுக்குப் பயன்படுகின்றன. ஆனால், மனிதன் இறந்தால் உடல் பயனற்றுப் போய்விடுகிறது. அதனால்தான் கண்ணதாசன், ‘வாழும்போதே சமூகத்துக்குப் பயன்படக்கூடிய

செயல்களைச் செய்யுங்கள்’ என்று அந்தப் பாடலின் வழியாக உணர்த்தினார். ஆனால், இன்று நிலை மாறிவிட்டது. மனிதனின் இறப்புக்குப் பிறகும் சமூகத்துக்குப் பயன்படலாம் என்பதை உறுதி செய்திருக்கிறது நவீன மருத்துவம். ரத்ததானம், கண்தானம், உறுப்பு தானம் வரிசையில் முழு உடல்தானமும் இணைந்திருக்கிறது.
ஒருவரது மரணத்துக்குப் பிறகு, அவரின் உடலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்குப் பயன்படும் வகையில் தானம் செய்யலாம். அதை `உடல்தானம்’ என்கிறோம். மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறதோ, இல்லையோ… ஆனால், அடுத்த தலைமுறை மருத்துவர்களுக்குப் பயன்படும்விதமாக உடல்தானம் செய்வது மகத்தானது. எனவே, பலருக்கு உடல்தானம் செய்வதில் தயக்கம் இருக்கிறது.

‘`இறந்தபிறகு உடலை எரிக்க வேண்டுமா, புதைக்க வேண்டுமா என்றெல்லாம் யோசிப்பவர்களுக்கு மத்தியில், ‘உயிரற்ற உடல் பயனற்றுப்போவதற்குப் பதில் மருத்துவக் கல்விக்குப் பயன்படட்டுமே’ என்று வெகுசிலரே உடல்தானம் செய்ய முன்வருகிறார்கள். ஒரு மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அந்தக் கல்லூரிக்கு 15 மனித உடல்கள் தேவை. ஆனால், மருத்துவ மாணவர்களின் உடல்கூறு ஆய்வுக்குத் தேவையான மனித உடல்கள் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம், உடல்தானம் குறித்த விழிப்பு உணர்வு இல்லாமையே.
உறுப்புதானத்தில் தமிழ்நாடுதான் முதலிடத்திலிருக்கிறது. இதற்காகத் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் தேசிய அளவிலான விருதுகளைப் பெற்றிருக்கிறது தமிழகம். அதேபோல, உடல் தானத்திலும் விழிப்பு உணர்வு பெற வேண்டும். உடலமைப்பு, உள் உறுப்புகளின் அமைப்பு, அதன் செயல்பாடுகள் என ஓர் உடலை முழுமையாகத் திறந்து பார்த்தால் மட்டுமே மாணவர்களால் தெளிவாகக் கற்கமுடியும். தெளிவாகக் கற்றால்தான் நல்ல மருத்துவராகி, மக்களுக்குச் சேவை செய்யமுடியும். எனவே, உடல்தானம் பற்றிய சிந்தனை மக்கள் மத்தியில் அதிகமாக வர வேண்டும். இறந்தவுடன் மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு உடலைத் தானமாகக் கொடுக்கும் உயர்ந்த முடிவுக்கு மனித சமுதாயம் முன்வர வேண்டும்’’ என்கிறார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி.

உடல்தானம் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரிக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், உடல் உறுப்புதானம் செய்ய ஆசைப்படுபவர்கள் எங்கே பதிவு செய்ய வேண்டும்? அதற்கான வரைமுறைகள் என்ன? என்பது குறித்துப் பலருக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. அந்தச் சந்தேகங்களுக்குத் தீர்வு சொல்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல்துறை இயக்குநர் சுதா சேஷய்யன்.

உடல்தானம் செய்வது எப்படி?
“முழு உடல்தானம் செய்ய விரும்பும் ஒருவர், தன் பெயரை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம், எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கிடைக்கும். விண்ணப்பத்தில், புகைப்படத்தை ஒட்டிப் பெயர், முகவரி, அங்க அடையாளங்கள், தொலைபேசி எண் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அத்துடன் கூடுதலாக ஒரு புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் ‘‘என் இறப்புக்குப் பிறகு என் உடலைத் தானம் செய்ய விரும்புகிறேன்’’ என்று உறுதியளித்துக் கையெழுத்திட வேண்டும். அத்துடன், இரண்டுபேரிடம் சாட்சிக் கையொப்பம் பெற்று, விண்ணப்பப் படிவத்தை அரசு மருத்துவக் கல்லூரி டீன் அல்லது உடற்கூறியல் துறைத்தலைவரிடம் (Anatomy HOD) சமர்ப்பிக்க வேண்டும். நேரில் வரமுடியாதவர்கள் தபால்மூலம் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்திசெய்து அனுப்பி வைக்கலாம். படிவத்தில் கொடுக்கப்படும் தகவல்களைக்கொண்டு, முழு உடல்தானம் செய்வதற்கான தகுதி குறிப்பிட்ட நபருக்கு உள்ளதென நிர்ணயிக்கப்பட்டால், அவரது பெயர் உடல்தானத்துக்காகப் பதிவு செய்யப்படும். இதையடுத்து, புகைப்படத்துடன் கூடிய முழு உடல்தானப் பதிவு அட்டை, தபாலில் அனுப்பி வைக்கப்படும். பதிவு செய்து கொள்வதற்கும் உடல்தானம் வழங்குவதற்கும் கட்டணம் கிடையாது.
இறந்த பிறகு உடலை ஒப்படைப்பது எப்படி?
உடல்தானம் செய்யப் பதிவுசெய்தவர் இறந்தவுடன், அவரது குடும்பத்தினரோ நண்பர்களோ மருத்துவக்கல்லூரி அல்லது உடற்கூறியல்துறைக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல, இறந்து 24 மணி நேரத்துக்குள் இறந்தவரின் உடலைக் கொண்டுவந்து ஒப்படைத்துவிட வேண்டும்.
தற்கொலை, விபத்து, கொலை போன்றவற்றால் இறந்தவரின் உடல் ஏற்கப்படமாட்டாது. இயற்கை மரணம் அடைந்தவர்களின் உடல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். உடலைக் கொண்டுவந்து ஒப்படைக்கும்போது, இறப்புச் சான்றிதழின் அசல், நகல் படிவம் ஆகிய இரண்டையும் கொண்டுசெல்ல வேண்டும். அசல் சான்றிதழை, ஒப்பிட்டுப் பார்த்தபிறகு திரும்பக் கொடுத்துவிடுவார்கள். இறந்தவரின் வாரிசுதாரர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் ‘இறந்தவரின் உடலைத் தானமாகக் கொடுக்க ஆட்சேபம் இல்லை’ என்ற உறுதிமொழிக் கடிதத்தையும் கொடுக்க வேண்டும். இதுதான் நடைமுறை’’ என்கிறார் சுதா சேஷய்யன்.

தானமாகக் கொடுக்கப்பட்ட பிறகு உடலை உறவினர்கள் பார்க்க அனுமதி உண்டா, தானம் செய்த பிறகு என்னவெல்லாம் நடக்கும், யாரெல்லாம் தானம் செய்ய முடியாது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களைக் கேள்விகளாக்கி, தேனி மருத்துவக்கல்லூரியின் உடற்கூறியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் எழிலரசன் முன் வைத்தோம்.

தானத்துக்குப் பிறகு என்ன நடக்கும்?
எம்பாமிங் (Embalming) 
இறந்த சில மணி நேரத்தில் மனித உடலானது, பாக்டீரியா, பூஞ்சைகள் போன்ற நுண் கிருமிகளின் தாக்குதலால் அழுகி, சிதைந்துபோகும். இதை ஆங்கிலத்தில், ‘டீகாம்போஸிஷன்’ (Decomposition) என்பார்கள். இறந்த உடலை நுண் கிருமிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாத்து, பதப்படுத்தும் முறையே ‘எம்பாமிங்’.
எம்பாமிங் முறையில் பல வகைகள் இருந்தாலும் பெரும்பாலும் ரத்த நாளங்கள் வழியே வேதிப்பொருள்களைச் செலுத்தக்கூடிய முறையே பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒருவர் இறந்தவுடன் உடல் திசுக்களில் உள்ள ஒருவிதப் புரதச்சத்து, நுண் கிருமிகள் வளர்வதை ஊக்கப்படுத்தும். அந்தப் புரதச்சத்தை, ரசாயனத்தைப் பயன்படுத்தி அழிப்பதன் மூலம் இறந்த உடல் பதப்படுத்தப்படுகிறது.

எப்படிச் செய்யப்படும்?
இறந்ததும் உடலில் உள்ள ரத்தம் உறைந்து போகும். அதை வெளியேற்றி விட்டு, ரத்த நாளங்கள் வழியாக வேதிப்பொருள்கள் உள் செலுத்தப்படும். இறந்த உடலின் ரத்தக்குழாயின் மூலம் செலுத்தப்படும் ரசாயனக் கலவையை எம்பாமிங் திரவம் (Embalming Fluid) என்கிறார்கள்.
ஆரம்காலங்களில், இறந்துபோன உடலில் ஆர்செனிக் (Arsenic) எனப்படும் அமிலம் செலுத்தப்பட்டு, உடல் பாதுகாக்கப்பட்டது. ஆனால், ஆர்செனிக் அமிலம் அதிக விஷத் தன்மைகொண்டது என்பதால், மருத்துவர்கள் அதை உபயோகிப்பதை நிறுத்திக்கொண்டார்கள். தற்போது, ‘ஃபார்மால்டிஹைட்’ (Formaldehyde) அல்லது ‘ஃபார்மலின்’ (Formalin) எனப்படும் ரசாயனக் கலவை பதப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
ஃபார்மலின் கலவை என்பது, 1 லிட்டர் ஃபார்மலின், 500 மி.லி ஆல்கஹால் (Alcohol), 500 மி.லி கிளிசரால் (Glycerol), சிறிது தைமால் உப்புகள் (Thymol Crystals), 200 கிராம் சோடியம் குளோரைடு, 3 லிட்டர் வரை வடிநீர் (Distilled Water) உள்ளிட்டவை சேர்ந்ததாகும்.
எப்போதெல்லாம் எம்பாமிங் அவசியம்?
இறந்த உடலை ஒன்றிரண்டு நாள்கள் மட்டுமே குளிர்பதனப்பெட்டியில் வைத்துப் பாதுகாக்க முடியும். அதற்குமேல் உடலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் எம்பாமிங் அவசியம்.
வெளிநாட்டில் இறந்தவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவருவதற்குக் கட்டாயம் எம்பாமிங் செய்ய வேண்டும்.
மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக வழங்கப்படும் உடல்கள் அனைத்தும் எம்பாமிங் செய்தே பயன்படுத்தப்பட வேண்டும்.
மொத்தத்தில் எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்புமுறையில், பல்வேறு வேதிப் பொருள்களைக்கொண்டு சீரமைப்பு செய்யப் படுவதால் உடலின் நிறம் பாதுகாக்கப்படும். உடலில் ஏற்கெனவே தங்கியிருக்கும் மருந்துகளால் உண்டாகும் தேவையற்ற துர்நாற்றத்தை அது கட்டுப்படுத்தும்.
எவ்வளவு நேரத்துக்குள் எம்பாமிங் செய்தாக வேண்டும்?
இறந்து 24 மணி நேரத்துக்குள் எம்பாமிங் செய்யப்படுவதே சிறந்தது.
எம்பாமிங் செய்த உடலை எவ்வளவு நாள் வைத்திருக்க முடியும்?
எம்பாமிங் செய்த உடலை சீதோஷ்ண நிலையைப் பொறுத்து, இரண்டு வாரம் முதல் ஒரு மாதம் வரையில் வெளியில் வைத்திருக்க முடியும். அதிக நேரம் வெளியில் வைத்திருந்தால் உடலில் உள்ள தண்ணீர்ச் சத்து ஆவியாவதன் மூலம் உடல் மரக்கட்டையைப்போலச் சுருங்கி விடும். ஆனால், எம்பாமிங் செய்த உடலை ஃபார்மலின் திரவத்தில் போட்டுப் பல ஆண்டுகள் அப்படியே கெடாமல் வைத்திருக்க முடியும். உதாரணத்துக்கு 1924-ம் ஆண்டு இறந்த ரஷ்ய அரசியல் தலைவர் லெனின் உடல் 90 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை ஃபார்மலின் தண்ணீர்க் கலவையில் பாதுகாக்கப்படுகிறது.
நவீன பதப்படுத்தும்முறை (பிளாஸ்ட்டினேஷன்)
ஃபார்மலின் திரவத்தால் பதப்படுத்தப்பட்ட உடலைச் சாதாரணமாக வெளியில் வைத்துப் பாதுகாக்க முடியாது. ஆனால், அதை வேறு சில வேதிப்பொருள்கள்மூலம் பதப்படுத்தி நீண்ட நாள்கள் வெளியில் வைத்திருக்க முடியும். இதற்கு ‘பிளாஸ்ட்டினேஷன்’ (Plastination) என்று பெயர். அதாவது, இந்தமுறையில் பதப்படுத்திய உடலே ஒருவித பிளாஸ்டிக் பொருளாக மாற்றப்படும். 1985-ம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கந்தர் வான் ஹேஜன்ஸ் (Gunther Von Hagens) என்பவரால் இந்தமுறை உருவாக்கப்பட்டது. நம் நாட்டில் சில கல்லூரிகளில் மட்டுமே இந்தமுறை உள்ளது. குறிப்பாக, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்ட்டினேஷன்முறையில் உடல்பதப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மட்டுமே இந்த வசதி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு, அன்றைய கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தால் இது தொடங்கப்பட்டது.

இந்தமுறையில், முதலில் ஃபார்மலின் கலவையின்மூலம் எம்பாமிங் செய்யப்பட வேண்டும். பின்னர், எம்பாமிங் செய்யப்பட்ட உடலில் உள்ள ஃபார்மலின் மற்றும் தண்ணீர் பொருள்கள் நீக்கப்பட்டு ரெசின் என்னும் ரசாயானப் பொருள் திசுக்களில் செலுத்தப்படும். இந்தமுறையைப் பயன்படுத்தி முழு உடல் மற்றும் பல்வேறு மனித உறுப்புகளை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வெளியில் வைத்துப் பாதுகாக்கமுடியும். உடலில் தோல் நீக்கப்பட்டுப் பல்வேறு தசைகளும் நரம்புகளும் தெரியும் வண்ணம் முழு உடலையும் மருத்துவ மாணவர்கள் படிப்பதற்காகப் பயன்படுத்த முடியும். இந்த முறைமூலம் மருத்துவ மாணவர்களுக்குத் தேவைப்படும் உடல்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாம்’’ என்கிறார் அவர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, உடல்தானம் செய்யப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை முன்னைவிட அதிகரித்திருந்தாலும், ஒப்புதல் அளித்தபடி உடல்களை ஒப்படைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. பாதிக்கும் குறைவான உடல்களே மருத்துவக் கல்லூரிகளில் ஒப்படைக்கப்படுகின்றன. எஞ்சியவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்கள், சம்பிரதாயச் சடங்குகளைக் காரணம் காட்டி, எரிக்கவோ புதைக்கவோ செய்துவிடுகிறார்கள். இதுபோன்ற சமயங்களில், இறந்தவர் முன்பே ஒப்புதல் அளித்திருந்த விண்ணப்பத்தின்படி அவரது உடலைக் கேட்டுப்பெறுவதற்கான அதிகாரம் மருத்துவக்கல்லூரிக்கு வழங்கப்பட வேண்டும்.

இறந்தவரின் உடலை வாரிசுகள் ஒப்படைக்க முன் வந்தாலும், அதை எடுத்துக் கொண்டு வருவதற்கு மருத்துவக் கல்லூரிகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. சம்பந்தப்பட்டவர்களே ஆம்புலன்ஸ் ஏற்பாடுசெய்து கொண்டுவந்தால் தான் உண்டு. அரசு, அந்தத் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவதோடு, குறைபாடுகளைச் சரிசெய்தால் உடல்தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


 

எம்பாமிங்கில் எகிப்தியர்களே முன்னோடி
இறந்த உடலைக் கெடாமல் பதப்படுத்தும் முறைக்கு எகிப்தியர்களே முன்னோடியாக இருந்துள்ளார்கள். அவர்கள் பதப்படுத்திய உடலுக்கு `மம்மி’ என்று பெயர். நவீன மருத்துவத்தில் டாக்டர் தாமஸ் ஹாம்ஸ்
(Thomas Holmes), டாக்டர் வில்லியம் ஹன்ட்டர் (William Hunter), டாக்டர் ஃப்ரெடெரிக் யூஷ் (Frederic Ryusch) போன்றோரால் பல்வேறு காலகட்டங்களில் இந்தமுறையில் முன்னேற்றம் ஏற்பட்டது. உலகப்போர் சமயங்களில்கூட எம்பாமிங் முறை, போர் முனையிலிருந்து உடலை உறவினர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க உதவியது. அதன் பின்னர், பல முக்கியத் தலைவர்களின் உடல்களைப் பதப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைக்கவும் இந்தமுறையைப் பின்பற்றினார்கள்.

%d bloggers like this: