வருமுன் காக்கும் சூத்திரம்!

தற்போது, இளம் பெண்களை அதிகம் பாதிக்கும், ‘பாலிசிஸ்டிக் ஓவரி’ எனப்படும், சினைப்பை நீர்க் கட்டி குறித்து தான் என் ஆராய்ச்சி!
முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், கனத்த குரல், அதிகமாக முடி உதிர்தல், முகப்பரு, இடுப்பு வலி, கை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில், தோல் நிறம் கறுத்து, சுருக்கம் உண்டாதல்,

மனநிலை மாறுபடுதல் போன்ற பிரச்னைகள் உள்ள மாணவியரிடம் ஆய்வு செய்தேன்.
இதுபோன்ற பிரச்னைகள் இருக்கும் பெண்களுக்கு, பின்னாளில், சினைப்பை நீர்க்கட்டி வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பது, ஏற்கனவே மருத்துவ ஆய்வில் உறுதியாகி உள்ளது. உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, உணவுப் பழக்க மாற்றம் உட்பட, பல காரணங்களால் இப்பிரச்னை வருகிறது.
இதில், சமூக, பொருளாதார நிலையில் மாறுபட்ட, 16 – 19 வயது வரையிலான, 102 மாணவியர் என் ஆய்வில் பங்கு பெற்றனர்.
‘சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைக்கு, முறையான யோகா மற்றும் உடற்பயிற்சி செய்தால், அதன் பாதிப்புகள் படிப்படியாக குறைகின்றன’ என, யோகா ஆய்வுகள் கூறுகின்றன.
இரண்டு மாதங்கள் தொடர்ந்து இந்த மாணவியரை, யோகா மற்றும் நடைபயிற்சியும் செய்யச் சொன்னேன். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உள்ள சமச்சீர் உணவு பழக்கத்தைப் பின்பற்றினர்.
சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்காகவே, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆசனங்கள் உள்ளன. அவற்றை செய்வதால், இடுப்புப் பகுதியை தளர்வுறச் செய்து, உடலுக்கு நல்ல ஓய்வை தருவதுடன், தசைகளில் ஏற்படும் இறுக்கத்தையும் குறைக்கும்.
மாணவியர் மேற்கூறியவற்றை பின்பற்றியதில், நீர்க்கட்டி வருவதற்கான அறிகுறிகள், வெகுவாக குறைந்திருப்பது தெரிந்தது. தொடர்ந்து பயிற்சி செய்தால், பிரச்னை வராமலே தடுக்கலாம்.

வளர்மதி செல்வராஜ்,
ஆராய்ச்சி மாணவி.
valarmathisubish@gmail.com

%d bloggers like this: