Advertisements

நுரையீரல் நலமா?

யிர்வாழ்வதற்கு ஆதாரமான ஆக்சிஜனை உள்வாங்கி, கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் உயிர்த் தொழிற்சாலைதான் நுரையீரல். அதைப் பாதுகாப்பதில் நாம் எந்தளவு அக்கறை செலுத்துகிறோம் என்பது கேள்விக்குறி. சுற்றுச்சுழல் மாசுபடுவதால் நம் உடலில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் உறுப்பு நுரையீரல்தான்.


2015-ம் ஆண்டு ‘லான்செட் ரெஸ்பிரேட்டரி’ (Lancet Respiratory Medicine Journal) என்ற மருத்துவ ஆய்விதழ் நடத்திய ஓர் ஆய்வில், ‘சுவாசம் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் ஏற்படும் இறப்பில் நான்கில் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது’ என்று தெரியவந்துள்ளது.

“நுரையீரலைப் பொறுத்தவரை, உள்ளுக்குள் மறைந்துகொண்டிருக்கும் நோய் ஒருநாள் திடீரெனத் தாக்கும். அப்போது நோய் முற்றிய நிலையில் இருக்கும் என்பதுதான் சிக்கல். நோய் அறிகுறிகள் வெளிப்படும்வரை காத்திருப்பதைவிட, முன்னெச்சரிக்கையாக சில பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது” என்கிறார் நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர் திருப்பதி. நுரையீரல் தொடர்பான பரிசோதனைகள் என்னென்ன? யாரெல்லாம் செய்துகொள்ள வேண்டும்? என்று விளக்குகிறார் அவர்.

நுரையீரல் செயல்திறன் பரிசோதனை

“சுவாச அமைப்புமுறையின் செயல்பாட்டை முழுமையாக மதிப்பிட உதவும் பரிசோதனை இது. நோயாளியின்  நுரையீரலின் திறன், செயல்பாடு, கொள்ளளவு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு எனப் பல்வேறு பரிசோதனைகள் இதில் உண்டு. ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) பரிசோதனை, நுரையீரலின் கொள்ளளவு அறியும் பரிசோதனை (Lung volumes), ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு (Arterial blood gases) அறியும் பரிசோதனை, ஆறு நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை (The six-minute walk test) போன்றவையும் இதில் உண்டு. வயது, உடல் எடை, உயரம், நோய் பாதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கான பரிசோதனையை மருத்துவர் தீர்மானிப்பார்.

ஸ்பைரோமெட்ரி சோதனை

நுரையீரலில் உள்ள பிரச்னையை ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) பரிசோதனையின் மூலமே கண்டறியமுடியும். அதாவது, ஸ்பைரோமெட்ரி கருவியுடன் இணைக்கப்பட்ட குழாயில் வாயை வைத்து ஊதவோ, மூச்சை உள்ளிழுக்கவோ வேண்டும். அப்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் அவரால் எவ்வளவு காற்றை, எவ்வளவு வேகத்தில் உள்ளிழுக்கவோ, வெளியேற்றவோ முடிகிறது என்பது அளவிடப்படும். அதன்மூலம் எந்த மாதிரியான நுரையீரல் பிரச்னை இருக்கிறது என்பது கண்டறியப்படும்.

நுரையீரல் கொள்ளளவை அளவிடும் பரிசோதனை

இந்தப் பரிசோதனை ஸ்பைரோமெட்ரி பரிசோதனையைப் போன்றதே. இதன்மூலம் நுரையீரலில் அதிகபட்சமாக எவ்வளவு காற்றைத் தேக்கி வைக்க முடியும் என்பதைக் கண்டறிய முடியும்.

6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை

ஒருவரை ஆறு நிமிடங்கள் நடக்க வைத்து அவரின் இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைக் கணக்கிடுவார்கள்.

ஏபிஜி பரிசோதனை (Arterial Blood Gases)

தமனியில், ரத்தத்தில் உள்ள வாயுக்களின் அளவு சீராக இருக்கிறதா என்பதை அறிய உதவும். வழக்கமான ரத்தப் பரிசோதனை போன்றதே இது.

எவற்றையெல்லாம் கண்டறியலாம்?

ஆஸ்துமா, சி.ஓ.பி.டி என்னும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Plumonary Disease), இடியோபாதிக் பல்மனரி ஃபைப்ரோஸிஸ் (Idiopathic Pulmonary Fibrosis -IPF) போன்ற நுரையீரல் பிரச்னைகளைக் கண்டறிய உதவும். அத்துடன் சிகிச்சையைக் கண்காணித்து முன்னேற்றம் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

யாரெல்லாம் செய்துகொள்ள வேண்டும்?

* நாள்பட்ட இருமல் உள்ளவர்கள்

மூச்சுத் திணறல் உள்ளவர்கள்

புகைப்பழக்கம் இருப்பவர்கள்

சர்க்கரை நோயாளிகள்

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்

நுரையீரல் அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பவர்கள்

வயதானவர்கள்

Advertisements
%d bloggers like this: