எது சரியான அளவு? – உணர்த்தும் உள்ளங்கை மேஜிக்!

நான் இன்னைல இருந்து டயட்ல இருக்கப்போறேன்… இன்னும் மூணு மாசத்துல ஃபிட்டாயிடுவேன்’ என்று சவால்விடும் சிலரால் நான்கு நாள்களுக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. `டயட்’ என்ற பெயரில் குறைவான அளவு உணவு எடுத்துக்கொண்டாலும்

பிரச்னைதான். அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டாலும் பிரச்னைதான்.  சரியான எடையைத் தக்கவைத்துக்கொள்ள எப்படித்தான் சாப்பிடுவது? டிப்ஸ் தருகிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி.

* ஒவ்வொருநாள் காலையிலும் இன்றைக்கு என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டு, சமைக்கத் தொடங்குங்கள். மதியம் ஒரு கப் உணவு சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தால், அதை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அந்த ஒரு கப் உணவில், அரை கப் மாவுச்சத்து குறைவான காய்கறிகள் இருக்க வேண்டும். உதாரணமாக, பீன்ஸ், கேரட், வெங்காயம், தக்காளி, காலிஃப்ளவர், வெள்ளரிக்காய் போன்றவை. மீதமுள்ள அரை கப்பில், கால் கப் புரதச்சத்து (பருப்பு, பீன்ஸ், மீன், முட்டை, கோழி போன்றவை) அதிகமுள்ள உணவும், கால் கப் தானிய வகை உணவும் இருக்க வேண்டும்.

* உங்களுக்கான உணவை நீங்களே சமையுங்கள். காய் மற்றும் தானிய வகைகளை அளப்பதற்கு ஸ்பூன், கரண்டி போன்றவற்றுக்குப் பதிலாகக் கைகளைப் பயன்படுத்துங்கள். கைகளை அளவுகோலாகப் பயன்படுத்தும்போது கவனிக்கவேண்டியவை (ஒரு நபருக்கு):

1. உணவில் இரண்டு உள்ளங்கை அளவு காய்கறிகள் இருக்க வேண்டும். வறுத்த காய்கறிகளைச் சாப்பிடுவதைக் காட்டிலும் சாலட், கூட்டு, பொரியல் போன்ற வடிவங்களில் சாப்பிடுவது நல்லது. எனவே, வறுப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்.

2. தானியங்கள்/பருப்புகளில் அதிக கலோரிகள் இருக்கும் என்பதால், அவற்றை ஒரு கைப்பிடி அளவு மட்டும் சேர்த்துக்கொள்வது நல்லது.

3. இறைச்சி சாப்பிட்டால், ஓர்  உள்ளங்கை அளவு இறைச்சி மட்டும் எடுத்துக் கொள்ளவும். அயிரை போன்ற மீன் வகைகள், சிக்கன், மட்டன் போன்றவற்றில் புரதச்சத்துகள் ஏராளமாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக அவற்றை எடுத்துக் கொள்வது ஆபத்து. இறைச்சி உணவுகளை வறுத்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு தண்ணீர் குடிக்கவும். சாப்பிடும்போது, டி.வி பார்ப்பது, புத்தகம் வாசிப்பது என எந்த எக்ஸ்ட்ரா வேலையும் செய்யாதீர்கள். 15 முதல் 20 நிமிடங்கள் வரை சாப்பிட வேண்டும். உணவைப் பொறுமையாக மென்று சாப்பிடுங்கள். அப்போதுதான், வயிறு நிறைய சாப்பிட்டோம் என்ற உணர்வு மூளைக்கு ஏற்படும். உணவு இடைவேளைக்குள் ஏதாவதொரு நேரத்தில் பழவகைகளை ஸ்நாக்ஸ் போன்று எடுத்துக்கொள்ளலாம்.

* சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதும், நேரத்துக்குத் தூங்குவதும் அடிப்படை ஆரோக்கியத்துக்கு அவசியம். குறிப்பாகப் பெண்களுக்கு இது பொருந்தும். தினமும் எட்டு மணி நேரம் தூங்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பதில்லை என அமெரிக்க ஆய்வு ஒன்று கூறியுள்ளது. அதேபோல சரியான அளவு, சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அவசியம்.

%d bloggers like this: