Advertisements

எலும்பை இரும்பாக்கும் தேங்காய்ப்பால்

பாரம்பர்யமாக நமது மண்ணில் விளைந்து நம் உணவிலும் வழிபாட்டிலும் மருந்துகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது தேங்காய். ‘தேங்காயை உணவில் சேர்த்தால் கொழுப்பு அதிகரித்துவிடும், உடலுக்குக் கேடு விளைவிக்கும்’ என்று திட்டமிட்டுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்போது அந்த மூடநம்பிக்கை மாறிவருகிறது.

தேங்காயை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட அதை அரைத்துப் பால் எடுத்துப் பயன்படுத்துவதன்மூலம் நிறைய நோய்களைக் குணப்படுத்த முடியும்” என்கிறார் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம். தேங்காய்ப்பாலின் மகத்துவங்களைப் பட்டியலிடுகிறார் அவர்.

தேங்காய்ப்பாலை ஓர் அதிசயமான மருந்து என்றே சொல்லலாம். இதன் முதல் பயன், உடல் சூட்டைக் குறைப்பது. ஒல்லியானவர்களைச் சற்று பூசினாற்போல பளபளப்பாக மாற்றுவது இதன் தனித்தன்மை.  வாய்ப்புண், வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துவதோடு மூளை வளர்ச்சிக்கும் இது பயன்படுகிறது.
பாஸ்பரஸ், மாங்கனீஸ், வைட்டமின் சி, இ, பி1, பி3, பி5, பி6 மற்றும் இரும்புச்சத்து, செலினியம், கால்சியம், தாமிரம் போன்ற பல சத்துகள் நிறைந்திருப்பதால் இதை ஓர் அற்புத பானம் என்றே சொல்லலாம்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். வயிற்றினுள் பெருங்குடலின் வறட்சித் தன்மையைப் போக்கி  மலச்சிக்கலை நீக்கும். மூலநோய் வராமல் பாதுகாக்கும். ஒரு கப் தேங்காய்ப்பாலில் நமக்குத் தினமும் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவிகிதம் கிடைத்து விடுகிறது. ரத்தச்சோகை போன்ற நோய்களையும்  தடுத்துவிடும். இதில் உள்ள மக்னீசியம் தசைவலி மற்றும் நரம்பு வலிகளுக்கு நிவாரணியாக உள்ளது.

பசியை அடக்கும் ஆற்றல் கொண்டதால், தேங்காய்ப்பாலைப் பருகி உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். செலினியம் அதிகம் இருப்பதால் கீல்வாதம், முடக்குவாதம் போன்றவற்றைத் தடுக்கிறது. பொட்டாசியம் இருப்பதால் ரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்தும். வைட்டமின் சி அதிகமிருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல் போன்ற தொல்லைகளை நீக்கும்.

*  சரும நோய்களைத் தீர்க்கும்.
        * வறண்ட சருமத்தை வளமாக்கும்.
          * இளமைப் பொலிவை அதிகரிக்கும்.
         *  கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

தேங்காய்ப்பாலில் உள்ள நன்மை தரும் பாஸ்பரஸ் எலும்புகளை உறுதியாக்கும். மென்மையான எலும்புகளைக்கொண்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத் தேங்காய்ப்பாலைத் தடவி சூரிய ஒளியில் நிற்க வைத்துச் சூரியக்குளியலாடச் செய்யலாம். இது எலும்புகளைக் கடினமாக்கி வலிமையைத் தரும். தேங்காய்ப்பாலுக்கு எலும்புப்புரை, எலும்பு வளைதல் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களைச் சரி செய்யும் ஆற்றலும் உண்டு.
தேங்காய்ப்பால் ஆரம்பத்தில் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். உடலில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், தேங்காய் ஏற்றுக் கொள்ளாமல் போகும். அமிலத்தன்மை உடலுக்குத் தீங்கு செய்யக்கூடியது. எனவே, அமிலத்தன்மையை நீக்க, தொடர்ந்து தேங்காயை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் சர்வரோக நிவாரணியான தேங்காய்ப் பாலால் பல நன்மைகளை அடையலாம்.

Advertisements
%d bloggers like this: