சோரியாசிஸ்… மொட்டை அடிப்பது தீர்வாகுமா?

சோரியாசிஸைக் குணப்படுத்துவதாகத் திடீர் திடீர் என முளைக்கிற மையங்களை சமீபகாலத்தில் அதிகம் பார்க்கிறோம். இந்தத் தலைமுறையினரில் பலருக்கும் சோரியாசிஸ் என்கிற வார்த்தையே புதிது. பொடுகுத் தொல்லையை சோரியாசிஸ் எனப் பூதாகரப்படுத்தி,

ஆண், பெண் என எல்லோரையும் மொட்டையடிக்கச் சொல்லி சிகிச்சை அளிப்பதாக ஏமாற்று வித்தைகள் காட்டும் போலி நபர்களுக்கும் இன்று குறைவில்லை. சோரியாசிஸ் பாதிப்பைவிடவும் கொடுமையானது மொட்டைத் தலையுடன் வலம் வருவது. உண்மையில் சோரியாசிஸ் என்பது என்ன? அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? குணப்படுத்த முடியுமா? விரிவாகப் பேசுகிறார் ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்.

சோரியாசிஸ் என்பது என்ன?

சாதாரண சருமத்தைக் கொண்டவர்களின் உடல், சருமத்தின் பழைய செல்களை உதிர்த்துவிட்டுப் புதிய செல்களை உருவாக்க  சராசரியாக 28 முதல் 30 நாள்களை எடுத்துக்கொள்ளும். சோரியாசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு அமைப்பானது அதிவேகத்துடன் செயல்படும். எனவே இவர்களுக்குச் சரும அழற்சியும், செல்கள் உருவாவதும் சராசரியைவிட முன்னதாக நடக்கும்.  அதாவது 28-30 நாள்களில் புதிய செல்கள் உருவாகும் செயலானது 3-4 நாள்களில் நடப்பதால், அந்த செல்கள் சருமத்தின் மேல்புறத்துக்குத் தள்ளப்படும். புதிய செல்கள் உருவாகும் அதே வேகத்தில் பழைய செல்களை உடலால் உதிர்த்துத் தள்ள முடிவதில்லை. எனவே, புதிதாக உற்பத்தியாகிற செல்கள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து, தடித்த, அரிப்புடனும் வறட்சியுடனும் கூடிய தகடுகள் போன்று மாறுகின்றன.

 

ஏன் ஏற்படுகிறது?

சோரியாசிஸுக்கான காரணம் இதுதான் என இன்றுவரை எதையும் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது என்றாலும் சருமத்தைப் பாதிக்கிற மோசமான பிரச்னை இது. பாலியல் உறவின் மூலமோ, ஒருவரைத் தொடுவதன் மூலமோ பரவாது. உணவுப் பழக்கமோ, வாழ்வியல் முறையோ, சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காததோ இந்தப் பிரச்னைக்குக் காரணங்கள் இல்லை. அப்படியென்றால் வேறு எதனால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது?

* ‘மரபு ரீதியாக, சூழல் காரணமாக, எதிர்ப்பு மண்டல இயக்க மாறுபாடுகள் காரணமாக வரலாம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ‘பீட்டா பிளாக்கர்ஸ்’ எனப்படுகிற மருந்துகளை உட்கொள்வதாலும் வரலாம் என்று சொல்லப்படுகிறது. 35 முதல் 40 சதவிகிதம் பேருக்குப் பரம்பரையாக இந்தப் பிரச்னை பாதிக்கக்கூடும்.

* சருமம் சந்திக்கிற திடீர் அதிர்ச்சி, சருமம் கிழிவது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு சருமத்தில் ஏற்படுகிற தழும்பு போன்றவற்றாலும் வரலாம்.

* ஸ்ட்ரெஸ் மிக முக்கியமான காரணியாகச் சொல்லப்படுகிறது. ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்  போது சோரியாசிஸ் பாதிப்பின் தீவிரமும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்திருக் கிறார்கள்.

* ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் அசாதாரணக் கோளாறும் காரணமாகலாம்.

 

* புகை மற்றும் மதுப்பழக்கம் காரணமாகவும் வரக்கூடும்.


அறிகுறிகள்

* வெளிர்நிறத் துகள்களுடன் சருமத்தில் காணப்படுகிற சிவந்த தடிப்புகள்

* வறண்டு, வெடித்த சருமப் பகுதி

* அரிப்பு, எரிச்சல்

* செதில் பகுதிகள் உரிந்து ரத்தக் கசிவு

* தடித்து, வளைந்து நிறம் மாறிய நகங்கள்

* வீங்கி, இறுகிப் போன மூட்டுகள்

* சோரியாசிஸ் பிரச்னையின் அடையாளம் அதன் தீவிரத்தைப் பொறுத்து பொடுகு போன்ற செதில் உதிர்வில் தொடங்கி, சருமத்தின் மேல் பெரிய இடத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் தடிப்புகளாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

%d bloggers like this: