Advertisements

பஞ்ச பர்வத க்ஷேத்திரம்!

ன்மிக முன்னேற்றத்துக்குத் தேடல் என்பது மிகவும் அவசியம். அதனால்தான் ஆன்மிகத்தில் நாட்டமுள்ள அன்பர்கள், தேடலுக்கான சாதனமாக யாத்திரையை மேற்கொள் கின்றனர். அதன்மூலம் கிடைக்கும் அனுபவங்கள், அவர்களை உள்முகமாகப் பயணிக்கச் செய்கின்றன. ஆன்மிகத்தின் நிறைவான கடவுளையும் உணர வைக்கின்றன. அது ஒரு சுகானுபவம்தான். 

சமீபத்தில், சனிக்கிழமை மட்டுமே நடை திறந்து வழிபாடுகள் நடைபெறும் – மலைமீது குடியிருக்கும் பெருமாளின் திருக்கோயில் குறித்து நண்பர்கள் மூலம் ஒரு தகவல் கிடைத்தது. எல்லோருமாகச் சேர்ந்து போய், பெருமாளைச் சேவித்து வரலாம் என்று முடிவெடுத்தோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் படவேடு பகுதியில் அமைந்துள்ள ‘பஞ்ச பர்வத க்ஷேத்திரம்’ எனப் போற்றப்படும்  ஸ்ரீகிருஷ் ணரின் மலைக்கோட்டை தலம்தான் அது.
சென்னையிலிருந்து ஒரு குழுவாகப் புறப் பட்டு வேலூரை அடைந்த நாங்கள், அங்கிருந்து திருவண்ணாமலை செல்லும் பாதையில் சுமார் 32 கி.மீ. தொலைவிலுள்ள சந்தைவாசல் என்ற கிராமத்தை அடைந்தோம். அங்கிருந்து படவேடு சுமார் 8 கி.மீ. தொலைவிலுள்ளதாகத் தெரிவித்தார்கள். தொடர்ந்து பயணித்து படவேடு கிராமத்தை அடைந்தோம். கிராமத்தின் மத்தியில் ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. தமிழகத்திலுள்ள பிரசித்திப் பெற்ற சக்தி திருத்தலங்களில் படவேடும் ஒன்று. அம்மன் தன் படைபரிவாரங்களுடன் வந்து தங்கியதால், முற்காலத்தில் ‘படைவீடு’ என்று அழைக்கப்பட்டு, தற்போது `படவேடு’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊரில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணற்ற சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் அமைந்திருந்ததாக வரலாறும் புராணங்களும் தெரிவிக்கின்றன. 12-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதி, சம்புவராய மன்னர்களின் தலைமையிடமாக, மாபெரும் நகரமாக இருந்தது என்கிறார்கள்.
சோழர்கள் காலத்தில் குண்டலி நகரம், குண்டலிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் படவேடு திருத்தலம், இன்றைக்கும் செழிப்புடன் திகழ்கிறது. அருகில் ஜவ்வாது மலைத்தொடரில், பச்சைப் பசேலென்று மரகத மலை போன்று அழகுற காட்சி தருகிறது கோட்டை மலை. இந்த மலையில்தான் சுமார் 2,560 அடி உயரத்தில்  மிக அழகுற அமைந்திருக்கிறது ஸ்ரீவேணு கோபால ஸ்வாமி திருக்கோயில்.
படவேடு ரேணுகாம்பாள் கோயிலி லிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள கோட்டைமலை அடிவாரத்துக்கு ஒரு ஜீப்பில் பயணித்தோம். சுற்றிலும் மரங்கள் அடர்ந்த பகுதியினூடே தொடர்ந்த பயணம் நம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை தந்தது.  

ஐந்து மலைகளுக்கிடையில் உள்ள கோயில் என்பதால், ‘பஞ்ச பர்வத க்ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது ஸ்வாமியின் திருக்கோயில். அங்கே செல்லும் பாதை, ஏற்றமும் இறக்கமுமாக இருக்கவே, வண்டி திக்கித் திணறித்தான் சென்றது.
சுமார் 5 கி.மீ. தொலைவு கடந்து மலையடிவாரத்தை அடைந்தோம். அதற்கு மேல் வாகனம் எதுவும் செல்ல முடியாது. படிகளில்தான் ஏறிச் செல்லவேண்டும். படிகள் தொடங்கும் இடத்தில், அனுமனின் அம்சமான ஏராளமான குரங்குகள் நம்மையே பார்த்தபடியிருந்தன. நாமும் மானசீகமாக அனுமனை வேண்டிக்கொண்டு மலையேறத் தொடங்கினோம்.
காலை வெயிலே சுள்ளென்று சுட்டெரித்தாலும் உற்சாகமாகவே படிகளில் ஏறத் துவங்கினோம். ஆனாலும் 100 படிகளைக் கடந்ததும் களைப்பு ஏற்பட்டுவிடுகிறது.
ஒழுங்கற்ற கருங்கல் படிகளும், அபாயகரமான பாதை வளைவுகளும்  சிரமம் தந்தாலும், ‘வேணுகானம் இசைத்து பல லீலைகள் புரிந்த வேணுகோபாலனை தரிசிக்கப் போகிறோம்’ என்ற எண்ணம், நம்மு டைய சோர்வை விரட்டியது. 
அதுமட்டுமல்ல, 70 வயதைக் கடந்த முதியவர்கள் உற்சாகமாக எங்களைக் கடந்து செல்வதைப் பார்த்ததும், எங்களையும் அறியாமல் எங்களுக்குள் ஓர் உத்வேகம் பிறந்தது.  ‘அவர்களுக்கே உற்சாகம் தந்து கூட்டிச் செல் லும் அந்த வேணுகோபாலன், நம்மை மட்டும் விட்டுவிடுவாரா என்ன?’ என்ற எண்ணமும் கூடவே சேர்ந்துகொள்ள, வேகமாக படிகளில் ஏறினோம்.
எங்களுடன் கன்னடம், தெலுங்கு பேசும் மக்களும் பெருமளவு வந்துகொண்டிருந்தார்கள். வெளியூர்களிலிருந்தும் வெளி மாநிலங்களி லிருந்தும் வந்திருக்கும் அவர்களுக்கு ஸ்ரீவேணு கோபால ஸ்வாமிதான் குலதெய்வம் என்பதைக் கேட்டு நாம் திகைத்துப் போனோம். அத்துடன், ஒருகாலத்தில் இந்தக் கோயில்  தென்பரத கண்டத்தில் பிரசித்திப் பெற்ற கோயிலாக இருந்திருக்கும் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.
மலையேறும் களைப்பு தெரியாமலிருக்க பக்தர்கள் பக்தி முழக்கமிட்டுக்கொண்டே வந்தார்கள். ‘கோட்டைமலை கோவிந்தா, கொண்டு போகணும் கோவிந்தா’ என்ற பக்தர்களின் முழக்கம் எங்கும் எதிரொலிக்க, அந்த பக்தி முழக்கம் தந்த உற்சாகத்தில் நம் களைப்பெல்லாம் பறந்துபோக, ஒருவழியாக மேலே ஏறிவிட்டோம்.
கோவிந்தன் பெயரைச் சொன்னதுமே என்ன மந்திரமோ மாயமோ தெரியவில்லை வெயிலின் தாக்கமும் குறைந்துவிட்டது. கோயில் நெருங்கவிட்டது என்பதை கோட்டைச் சுவர்கள் கட்டியம் கூறித் தெரிவித்தன.
கோயிலுக்குள் கருடாழ்வார் திருவுருவம் திகழும் பிரமாண்டமான கல் கொடிமரம், அதன் இடப்புறம் மடப் பள்ளி ஆகியவற்றைக் கடந்து கோயிலுக்குள் சென்றோம்.
13-ம் நூற்றாண்டில், ராஜகம்பீர சம்புவராய மன்னர் காலத்தில் (1239-ம் வருடம்), இந்தக் கோயில் கட்டப்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. வாரிசு இல்லாத இந்த மன்னவன்,   சந்தான பிராப்திக்காக வேண்டிக்கொண்டு இந்த ஆலயத்தை அமைத்ததாகவும், அதன் பலனாக அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள். அவர் இந்தக் கோயில் பகுதியை பாது காப்புக் கோட்டையாகவும் நிர்மாணித்தார் என்பதை, சுற்றிலும் உள்ள மதில்கள், அகழிகள் ஆகியவற்றின் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.  

வாரத்தில் சனிக்கிழமை மட்டுமேதான் கோயில் திறந்திருக்கும். ஆகவே அன்று நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் வந்திருந்தார்கள். சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் முடிந்து திரை விலகியதும், நாம் கண்ட திவ்ய தரிசனம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்திவிட்டது.
நின்ற திருக்கோலத்தில் சிவப்புப் பட்டாடையுடுத்தி, மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ, மற்ற இரு கரங்களில் புல்லாங்குழலுடன் அழகே உருவாக அருள் கோலம் தருகிறார் ஸ்ரீவேணுகோபாலன். அருகில் ருக்மினி, சத்யபாமா தேவியர் காட்சி தருகின்றனர். இங்கே, காலையில் உதிக்கும் சூரியன் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியின் மீது பட்டு சேவிக்கும் விதமாக ஆலயக் கருவறை அமைந்துள்ளது சிறப்பு.
மூலவரைக் கண்குளிர மனம் குளிரத் தரிசித்துவிட்டு கோயிலை வலம் வந்தோம். வெளிச்சுற்றில் கருவறைக்கு இடப்புறமாக சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீசுந்தரவல்லித் தாயாரையும் தரிசித்துவிட்டு வெளியில் வந்தோம். ஆலயத்தைச் சுற்றியும் இடிபாடடைந்த கோட்டைச் சுற்றுச்சுவர்களும், கொத்தளங்களும் அந்த கோயிலின் பழைமையையும் பெருமையையும் எடுத்துச் சொல்லின.
இடதுபுறப் பாதையில் இரு பெண்களின் கருங்கல் சிலைகள் கவனிப்பாரற்று காட்சி தந்தன. அவற்றின் அருகே கீழ்நோக்கிய பகுதியில் சுனை ஒன்று, வேலிகள் அமைக்கப்பட்டு காட்சி தந்தது. ஆலயத்தின் பின்புறம் சென்றால் எழிலார்ந்த மலைகளையும் அவற்றினூடே திகழும் பழங்குடி மக்களின் கிராமங்களையும் கண்டு ரசிக்க முடியும்.
இப்படி, இயற்கை எழில்சூழ கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீவேணுகோபாலரை மனதில் இருத்தி தியானித்துக்கொண்டிருந்தோம்.
அப்போது, பக்தர் ஒருவர் தனக்குத் தானே சொல்லிக்கொள்வதுபோல், ‘கேட்டதைக் கொடுக்கறவன் இந்த வேணுகோபாலன். இங்கே வந்துட்டீங்கள்ல, இனிமே அவன் பார்த்துப்பான், எல்லாம் சுபிட்சம் தான்’ என்று கன்னடத்தில் சொல்லிக் கொண்டே போனார். அவரின் அந்த வார்த்தைகளை ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியின் திருவாக்காகவே கருதி மெய்சிலிர்த்தோம்.
சற்றைக்கெல்லாம், ‘காளிங்க நர்த்தனா, பாண்டவதூதா, ராசலீலா தாரி, கஜேந்திர வரதா, கலிதீர்க்கும் பரமா, தேவகீ நந்தனா’ என்றெல்லாம் காற்றில் மிதந்து வந்த ஸ்ரீகிருஷ்ண துதிகளைக் கேட்டு, அந்தக் குரல் வந்த திசைக்கு நகர்ந்தோம். அங்கே, ஒரு பெண்குழந்தைதான் வாய்மணக்க பகவானின் நாமாக்களைக் கூறி வணங்கிக் கொண்டிருந்தாள்.
‘‘மழலை வரம் அளிக்கும் இந்த நவ நீதக் கண்ணன் அருளால் எங்களு க்குப் பிறந்த குழந்தை இவள்’’ என்று கண்கள் பனிக்கக் கூறினார்கள், அவளின் பெற்றோர்.
மனம் கனியக் கனிய ஸ்ரீவேணு கோபால ஸ்வாமியை மறுபடியும் மானசீகமாக வழிபட்டுவிட்டுத் திரும்பினோம். என்றாலும் நம் மனம் என்னவோ வேணுகானம் இசைக்கும் அந்த வேணுகோபாலனிடமே தங்கி விட்டது போன்ற உணர்வே நம்மை ஆட்கொண்டிருக்கிறது.


பக்தர்கள் கவனத்துக்கு
ஸ்வாமி: ஸ்ரீவேணுகோபாலர்
தாயார்: ஸ்ரீசுந்தரவல்லித் தாயார்
எங்கிருக்கிறது?: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு என்ற ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கோட்டைமலை அடிவாரம்.
படவேட்டிலிருந்து கோட்டைமலை அடிவாரத்தை அடைய டிராக்டரில்தான் செல்லவேண்டும். அடிவாரத்தி லிருந்து 400 படிகளை ஏறித்தான் கடக்கவேண்டும்.
கோயில் நடைதிறப்பு: வாரம் ஒருநாள் சனிக்கிழமை மட்டுமே காலை 7 முதல் மாலை 4 மணி வரை கோயில் திறந்திருக்கும். கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடை பெறும்.
அருகில் தரிசிக்கவேண்டிய மற்ற கோயில்கள்: ஓரிரு நாள்கள் தங்கும்படி திட்டமிட்டுச் சென்றால் பத்துக்கும் மேற்பட்ட ஆலயங்களை ஒருங்கே தரிசிக்கலாம்.
படவேடு ஊரின் மையத்திலுள்ள ரேணுகாம்பாள் கோயில், குண்டலீபுரம் முருகன் ஆலயம், திரௌபதியம் மன் ஆலயம், வீர ஆஞ்சநேயர் ஆலயம், யோகராமர் ஆலயம், பெரியகோட்டை வரதர் ஆலயம், ராமலிங்க சௌடேஸ்வரியம்மன் ஆலயம், கோட்டை சிவன் கோயில், கயிலாச விநாயகர் கோயில், லட்சுமி நரசிம்மர் கோயில், ஜலகண்டேஸ்வரர் கோயில், அஷ்டதிக்கு ஆஞ்சநேயர் கோயில், அம்மையப்ப ஈஸ்வரர் கோயில், சின்னக்கோட்டை வரதர் கோயில் ஆகியவையும் அவசியம் தரிசிக்கவேண்டியவை.


இந்தக் கோயில்களின் மகிமைகளை வீடியோ வடிவில் காண அருகில் உள்ள QR code – ஐ பயன்படுத்தவும். 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: