Advertisements

பச்சைக்கொடி… கறுப்புக்கொடி… பரபரக்கும் காவிரிக் கொடி!

க்ஸ்பிரஸ் வேகத்தில் வந்த கழுகார், அதைவிட வேகமாகப் பேச ஆரம்பித்தார். 
‘‘காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னையில் தமிழகம் கொந்தளித்துக் கிடக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய பி.ஜே.பி அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான நிலையில் உள்ளனர். தமிழகத்தில்

எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்குப் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு உள்ளது. இந்தச் சூழலில், ‘சென்னை அருகே திருவிடந்தையில் மத்தியப் பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெறும் டிஃபென்ஸ் எக்ஸ்போவுக்கு வரும் பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டுவோம்’ என்று அறிவித்தார் ஸ்டாலின். இந்த அறிவிப்பு, தமிழகத்தின் இன்றைய இக்கட்டான சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மோடியின் தமிழகப் பயணம் ரத்து செய்யப்படும் என்று செய்திகள் பரவின. ஆனால், பிரதமர் வருகை தற்போது உறுதியாகிவிட்டது.’’
‘‘எங்கே கறுப்புக்கொடி காட்டுவார்கள்?’’
‘‘ஏப்ரல் 12-ம் தேதி காலை 9.20 மணிக்குச் சென்னை பழைய விமான நிலையத்தில் தரையிறங்குகிறார் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் செல்கிறார். அங்கிருந்து காரில் எக்ஸ்போ வளாகம் செல்கிறார். அங்கு இரண்டு மணி நேரம் இருந்துவிட்டு காரில் மீண்டும் மாமல்லபுரம் வந்து, ஹெலிகாப்டரில் ஏறிச் சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார். மதியம் ஒரு மணிக்கு அங்கிருந்து காரில் சென்று அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் கட்டப் பட்டுள்ள டைமண்டு ஜூப்ளி கட்டடத்தைத் திறந்து வைக்கிறார். அங்கிருந்து காரில் விமான நிலையம் திரும்பி, மாலை மூன்று மணிக்கு டெல்லி கிளம்புகிறார். பிரதமர் வருகையின்போது, பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதை உடைத்து, கறுப்புக்கொடி போராட்டத்தைப் பிரதமர் மோடிக்கு எதிராக வெற்றிகரமாக நடத்துவதில் தி.மு.க-வும் உறுதியாக இருக்கிறது. தி.மு.க        எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் சென்னைக்கு வரச் சொல்லி உத்தரவு போயுள்ளது. மு.க.ஸ்டாலின், காவிரிப் பயணத்தில் இருக்கிறார். அவர் 13-ம் தேதிதான் சென்னை திரும்புகிறார். ஆனால், திட்டமிட்டபடி கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடக்குமாம். மாமல்லபுரத்திலும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்குச் செல்லும் வழியிலும் கறுப்புக்கொடி காட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் விவசாயிகளின் அடையாளமான பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்ட முயற்சிகள் நடக்கின்றன. மொத்தத்தில், தமிழ்நாட்டில் இப்போது பறப்பது காவேரிக் கொடிதான். ’’
‘‘உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர், திடீரென ஜெயலலிதா தீர்ப்பு விவகாரம் குறித்துப் பேசியுள்ளாரே?’’

‘‘2018 ஜனவரி மாதத்தில் நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியது இந்தியா முழுவதும் பரபரப்பைப் பற்ற வைத்திருந்தது. ‘வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார்’ என்பது அப்போது நீதிபதிகள் சொன்ன குற்றச்சாட்டு. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலும் செல்லமேஸ்வர் சொல்வது இதைத்தான். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நீதிபதி செல்லமேஸ்வர், ‘ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு, ஓராண்டுக்குப் பிறகே தீர்ப்பு கூறியது. ஜெயலலிதா இறந்த பிறகு இந்தத் தீர்ப்பு என்ன பயன் தரும்? விருப்பத்தின் அடிப்படையில் வழக்குகள் ஒதுக்கப்பட்டால், அது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையைப் பாதிப்பதாக அமைந்துவிடும்’ என்றார். அந்தத் தீர்ப்பு முன்பே வந்திருந்தால், ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். 2016 சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போயிருக்கும். அதைத்தான், செல்லமேஸ்வர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.’’

‘‘தமிழகக் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் ‘ஆபரேஷன் டி.எம்.ஜி’ என்ற வார்த்தை மிக ரகசியமாக உச்சரிக்கப்படுகிறதாமே?’’
‘‘ஆம். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, காவல்துறைக்குக் குடைச்சலாக இருக்கும் சமூக ஆர்வலர்கள், போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு இதுபோன்ற ஆபரேஷன்கள் அடிக்கடி திட்டமிடப்படும். இவற்றைக் காவல்துறை நேரடியாகச் செய்யாது. டிபார்ட்மென்ட்டுக்கு வெளியில் உள்ளவர்களை வைத்துக் காதும் காதும் வைத்ததுபோல் கச்சிதமாக முடித்துவிடும். அந்தவகையில், இப்போது ஆபரேஷன் டி.எம்.ஜி திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமான ஒரு நபரைக் குறிவைத்து இந்த ஆபரேஷன் திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களுக்கு பி.ஜே.பி தரப்பிலிருந்தும் போலீஸ் தரப்பிலிருந்தும் அந்த நபருக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கப்படாது. மிக அமைதியாக எல்லாம் போய்க் கொண்டிருக்கும். திடீரென ஒருநாள், அந்த நபருக்கு என்ன ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டுமோ, அதை போலீஸ் நியமித்துள்ள வெளியாள்கள் கொடுப்பார்கள்.’’
‘‘ஓஹோ… யார் அந்த நபர்? என்ன மாதிரியான ட்ரீட்மென்ட்?’’
‘‘சில சோர்ஸ்கள், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்திக்குத்தான் அந்த ஆபரேஷன் என்கின்றனர். ஆனால், அதில் என்ன மாதிரியான ட்ரீட்மென்ட் என்பது யாருக்கும் தெரியவில்லை.’’
‘‘மத்திய உளவுத்துறையிடம் மத்திய அரசு ஒரு ரிப்போர்ட் கேட்டுள்ளதாமே?’’
‘‘ஆம். எட்டு முக்கியமான கேள்விகளுக்குத் தெளிவான பதில்களுடன் ஒரு ரிப்போர்ட் கேட்டுள்ளது. அ.தி.மு.க-வுடன் பி.ஜே.பி கூட்டணி வைக்கலாமா, தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுமீது வைக்கப்படும் விமர்சனங்கள் அரசியல் கட்சிகள் ஏற்படுத்தும் தோற்றமா அல்லது பொதுமக்களிடமே அந்த வெறுப்பு இருக்கிறதா, எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் எப்படிப் பார்க்கின்றனர் என்பன உள்ளிட்ட எட்டுக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அந்த ரிப்போர்ட் இந்த இதழ் கடைக்கு வரும்போது, மத்திய அரசின் கைகளுக்குப் போயிருக்கும்’’ என்ற கழுகார் வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டார். 

Advertisements
%d bloggers like this: