வருகிறது ஜீன் எடிட்டிங்…இனி குறையொன்றுமில்லை!

நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், ஜீன்கள் என்கிற மரபணுவியல் துறை சார்ந்த வளர்ச்சி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. தாவரங்களில் மரபணு மாற்றப் பயிர்களை உருவாக்கல், விலங்குகளில் மரபணு சார்ந்த பரிசோதனைகள் மேற்கொள்வது என்ற நிலைகளைத் தாண்டி, தற்போது மனிதர்களில் மரபணு பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை செய்கிற நிலை உருவாகியுள்ளது.

ஒருவர் நோய்வாய்ப்படுவதற்கும் அல்லது ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த மரபணுக்களே பிரதான காரணிகளாக உள்ளது. உடலளவில் மட்டும் என்றில்லாமல் ஒருவரின் நல்ல குணாதிசயங்களை அல்லது தீய குணாதிசயங்களை தீர்மானிப்பதும் இந்த மரபணுக்களே!

மரபணு அளவிலேயே சில மாற்றங்களை செய்வதன் மூலம் நோயற்ற, ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்று மிகப்பெரும் நம்பிக்கை இதனால் உருவாகியிருக்கிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின் செல் மற்றும் உயிர்மூலக்கூறு ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானியும், முனைவருமான தங்கராஜிடம் இதுபற்றிக் கேட்டோம்…

ஜீன்கள் என்பவை என்ன?

‘‘மனித உடலினுள் எண்ணற்ற செல்கள் உள்ளன. இவற்றில் ஒரு செல்லின் உட்கருவுக்குள் மொத்தம் 46 குரோமோசோம்கள், அதாவது 23 ஜோடிகளாக அமைந்துள்ளது. இந்த ஒவ்வொரு குரோமோசோமும் DNA (Deoxyribonucleic Acid) மற்றும் Histon என்ற புரதத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக உடல் வளர்ச்சி, உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு புரதம் மிகவும் அவசியம்.

இந்த புரதத்தின் உருவாக்கத்தில் DNA முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த DNA-வுக்குள் சுமார் 30 ஆயிரம் வரையிலான ஜீன்கள்(Genes) அல்லது மரபணுக்கள் உள்ளது. இத்தகைய DNA-வில் ஏற்படும் மாற்றம், செல்களில் உள்ள புரதத்தயாரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, நமது உடல் அமைப்பு மற்றும் பண்புகள் சார்ந்த மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது.’’

ஜீன்களின் முக்கியத்துவம் என்ன?

‘‘குழந்தைகள் தங்களுடைய பெற்றோரில் யாராவது ஒருவரைப் போன்ற உருவம் மற்றும் குணநலன்களைப் பெற்றிருப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மரபணுக்கள். ஒவ்வொரு மரபணுவும் ஒவ்வொரு விதமான மரபுப் பண்பினை பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் பணியினை மேற்கொள்கிறது. இப்படி எடுத்துச் செல்லப்படும் பண்புகளே அவர்களுக்கிடையே உள்ள பலவிதமான ஒற்றுமைகளுக்கு மூலகாரணமாக இருக்கிறது.

இந்த ஒற்றுமைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முகம், உடல் உறுப்புகளின் புறத் தோற்றம், உடல் நிறம் போன்ற புறம் சார்ந்த ஒற்றுமைகள் ஒன்று. செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், குணநலன்கள், நோய்கள் போன்ற அகம் சார்ந்த ஒற்றுமைகள் மற்றொன்று.

பெற்றோரின் மரபணு குறைபாடுகளால், அவர்களுக்கு இருக்கக்கூடிய நோய்களும் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உண்டாகும் நோய்களை பரம்பரை நோய்கள் என்று சொல்கிறோம்.’’

ஜீன் எடிட்டிங் என்பது என்ன?

‘‘ஓர் உயிரியின் மரபணுவை நீக்குவது, மற்றொரு மரபணுவோடு சேர்ப்பது போன்ற மரபணு பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப முறையை Gene editing அல்லது Genetic engineering என்று அழைக்கிறோம். நல்ல பண்புகளுக்கு காரணமாக உள்ள மரபணுக்களை ஒன்றிணைத்து ஒரு புதிய கருவை உருவாக்கவும், அந்த கருவிலிருந்து நாம் விரும்பும் பண்புகளை உடைய ஒரு புதிய உயிரியை உருவாக்கவும் மரபணுப் பொறியியல் (Genetic engineering) தொழில்நுட்பம் உதவுகிறது.

ஒரு தாவரம் அல்லது விலங்கினுடைய செல்லில் நோய் உருவாக்கத்துக்கு அல்லது தீய பண்புகளுக்குக் காரணமாக உள்ள மரபணுவை அடையாளம் கண்டு, அதை மாற்றியமைக்க ஜீன் எடிட்டிங் உதவுகிறது. இதன் மூலம் அந்த உயிரிக்கு மரபணு அடிப்படையிலான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். இந்தத் தொழில்நுட்பமுறை மூலம் நோயினை குணப்படுத்துவது அல்லது நாம் விரும்பும்படியான பண்புகளை உடைய, மரபணு மாற்றம் செய்யப்பட்ட, ஒரு புதிய தாவரம் அல்லது விலங்கினை உருவாக்க முடிகிறது. இதுபோன்ற மாற்றங்களை ஒருசெல் நிலை அல்லது புதிய கரு உருவாக்கத்துக்கு முந்தைய நிலையில் செய்ய முடியும்.

இப்படி ஒருசெல் நிலையிலிருந்து பலசெல் நிலைக்கு வளர்கிற அனைத்து செல்களும் நல்ல பண்புகளை மட்டுமே உடையதாக இருப்பதால், நல்ல பண்புகளை உடைய ஒரு புதிய உயிரி உருவாகிறது. ஏற்கெனவே முழுவதும் வளர்ந்து, பலசெல் நிலையில் இருக்கிற மனிதன் போன்ற பிற உயிர்களில் உள்ள ஒட்டுமொத்த செல்களையும் நாம் விரும்பும் பண்புகளோடு உருவாக்குவது சாத்தியமில்லை.’’

ஏதாவது ஓர் உதாரணம் சொல்ல முடியுமா?

‘‘தொடர்ந்து பல தலைமுறைகளாக ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்கள், தங்கள் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதால், மரபணுக்களின் வழியே அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது. மரபணுக்களில் ஜீன் எடிட்டிங் முறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவுகளைக் கொண்டு இதுபோன்ற பரம்பரை நோய்களின் சுமைகளைக் குறைக்க முடியும்.

ஒவ்வொருவருடைய தனிப்பட்ட மரபணுக்களின் அடிப்படையில், அவர்களுடைய உடல் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தனிப்பட்ட மருந்துகளை பரிந்துரைத்து, துல்லியமாகவும் விரைவாகவும் நோய்களுக்கு தீர்வு காண்பதற்கு இந்தத் தொழில்நுட்பமுறை பெரிதும் உதவி செய்யும்.’’

என்னென்ன குறைகளைத் தடுக்க முடியும்?

‘‘தற்போது நவீன ஜீன் எடிட்டிங் முறையில் மரபணு மூலம் பரவுகிற பரம்பரை நோய்கள், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய்கள், குழந்தையின்மை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த மரபணுப் பொறியியல் துறை மூலம் ஆச்சரியப்பட வைக்கும் பல்வேறு அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்படும். நோய்களற்ற, தீய குணங்களற்ற ஒரு மனித இனம் எதிர்காலத்தில் உருவாகும் காலம் வந்துகொண்டிருக்கிறது. அதனால், எதிர்கால மனித சமூகத்துக்கு இனி குறையொன்றுமில்லை என்று நம்பிக்கையோடு சொல்லலாம்!’’.

%d bloggers like this: