உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க…

தினமும் காலையில் கண்விழித்ததும் பரபரப்பாகக் கிளம்பி வேலைக்குச் செல்வது, வேலை முடிந்ததும் வீடு திரும்பி டி.வி முன்னால் உட்கார்ந்து மீதமுள்ள பொழுதைக் கழிப்பது என இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படியே கடக்கப்போகிறோம்? கொஞ்சம் மாற்றி யோசித்து மூளைக்கும் வேலை கொடுக்கலாம்.

டேக் லெஃப்ட்!

சின்னச் சின்ன வேலைகளை எப்போதும் நாம் நமது வலது கையில்தானே செய்வோம். கதவைத் திறப்பது, சிறுசிறு பொருள்களை எடுத்துக்கொடுப்பது என எதற்கெடுத்தாலும் வலது கையைப்  பயன்படுத்தும் நாம், அவற்றை இடது கையால் செய்து பார்க்கலாமே. அதேபோல் இடது கையில் வேலைகளைச் செய்பவர்கள் வலது கையால் செய்து பார்க்கலாமே!


கதை சொல்லுங்கள்!

தினமும் ஒரு கதை சொல்வது நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  அது நமது ஞாபகசக்தியை மட்டுமல்லாமல் கற்பனைத் திறனையும் வளர்க்குமாம். இந்த டாஸ்க் நிறையபேருக்கு கை வந்த கலையாக இருக்க வாய்ப்பு உண்டு


பஞ்சாயத்து பண்ணலாமே..!

ஒருவருக்குப் பிரச்னை வந்தால் அதைத் தீர்த்து வைக்கலாம். ஆனால், அடுத்தவர் பிரச்னையில் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் மனதுக்குள் ஆயிரம் பிரச்னைகள், ஆயிரம் சவால்கள் இருக்கும். அதில் ஒரு நாளைக்கு ஒன்று என எடுத்துச் சரி செய்து பாருங்கள். பிரச்னையும் தீரும், மனசும் லேசாகும்.


பட்டியலைப் பார்க்காதீங்க!

எல்லாவற்றுக்கும் லிஸ்ட் போட்டு வேலை செய்தால் நன்றாக இருக்காது. ஷாப்பிங் போகும்போது லிஸ்ட்டை ஒரு பேக்-அப் மாதிரி மட்டும் பயன்படுத்துங்கள். எவ்வளவு ஞாபகசக்தி இருக்கிறது என்று நம்மை ஒரு சுய பரிசோதனை செய்ததுபோல் இருக்கும்.


நன்றாக உற்றுப் பாருங்கள்!

நம்முடைய கவனத்தை மேம்படுத்த இது உதவும். உங்களுக்கு நீங்களே ஒரு டாஸ்க் வைத்துக் கவனியுங்கள். அதாவது இன்றைக்கு எத்தனைபேர் ஹெல்மெட் போடாமல் போகிறார்கள் என்று ஆபீஸ் போகும் வழியில் பார்த்துக்கொண்டே செல்லுங்கள். இதனால் உங்கள் மூளைக்கு வேலை கொடுத்த மாதிரியும் ஆகும், நம்முடைய கவனிக்கும் திறன் வளர்ந்த மாதிரியும் இருக்கும்.


வாசியுங்கள்!

தினமும் கையில் கிடைக்கும் ஏதாவதொரு புத்தகத்தையோ, தினசரி செய்தித்தாளையோ வாசியுங்கள். அது நமது மூளைக்கு நல்ல வேலை தரும்.  நம்மை அறிவாளியாக்கிக் கூடுதலாகச் சம்பாதிக்கும் அளவுக்கு ஒரு ஸ்பெஷல் வேலையைத் தரலாம். யாருக்குத் தெரியும்? நம் உள்ளே புதைந்து கிடக்கும் எடிசனோ, ஐன்ஸ்டீனோ எட்டிப்பார்க்க வாய்ப்பு இருக்கிறது.


நம்பர் தெரியுமா?

ஸ்மார்ட் போன் வரவால் நாம் நமது மொபைல் எண்ணைக்கூட கான்டாக்ட் லிஸ்ட்டைப் பார்த்துச் சொல்லும் நிலை. ஆகவே, ஒரு மாறுதலுக்காக உங்களுக்குத் தெரிந்தவர்கள் சிலரின் மொபைல் எண்களை மனப்பாடம் செய்து பாருங்களேன்!


ரூட்டை மாத்துங்கள்!

தினமும் ஒரே வழியில் போனால் போர் அடிக்கும். ஆகவே, ஒருநாள் ரூட்டை மாற்றிப்பாருங்கள். அட்வென்ச்சர் மாதிரியும் இருக்கும். சந்து சந்தாகச் சுற்றி வந்து ஏரியா பழகிய மாதிரியும் இருக்கும். (குறிப்பு: 10 மணி ஆபீஸுக்கு 9 மணிக்குக் கிளம்பி ரூட் மாறி அட்வென்ச்சர் செய்தால் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல)


தினம் ஒரு திட்டம்!

தினமும் ஏதாவது ஒரு திட்டத்தை எடுத்துக்கொண்டு லிஸ்ட் போடுங்கள். அதாவது இதுவரை நாம் சென்று வந்த சுற்றுலாத் தலங்கள், போக வேண்டிய இடங்கள், பார்த்து ரசித்த இடங்கள், உணவுகள் என லிஸ்ட் போடலாம். இவை நமக்குள் இருக்கும் நல்ல நினைவுகளை  நம் கண் முன்னால் கொண்டுவந்து நம்மை உற்சாகப்படுத்தும்.

%d bloggers like this: