சக்கரத்தில் சிக்கலாம்; கழுத்தெலும்புகூட உடையலாம்…” டுவீலரில் சிக்கும் துப்பட்டாவும், ஆபத்தும்!

முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு வேலைப் பாருங்கள் என அந்தக் காலத்தில் பெரியவர்கள் சொன்னதன் அர்த்தம், இந்த அதிர்ச்சி சம்பவத்தை படித்த பிறகுதான் புரிகிறது. புனேவைச் சேர்ந்த சுப்ரியாவுக்கு வயது 40.  சப்பாத்திக்கு மாவு பிசையும் மெஷின்

பக்கத்தில் நின்றபடி வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த துப்பட்டா, மெஷினில் சிக்கி இழுபட்டுள்ளது. சுதாரித்து விடுபடும் முன்பு அவரது தலை மெஷினில் மோதி, பரிதாபமாக இறந்துவிட்டார். இப்படி வீட்டில் மட்டுமின்றி, வேறு சில இடங்களிலும் கவனமுடன் இருக்கவேண்டியது முக்கியம். துப்பட்டாவின் நுனியை முடிச்சுப் போடாமல் வண்டி ஓட்டும்போதும், முடியை விரித்துப் போட்டவாறு பெடஸ்டல் ஃபேன் அருகே நிற்கும்போதும் இதுபோன்ற விபரீதம் நிகழலாம். இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருப்பது பற்றிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஜோஸ்.

(**கோப்புப் படம்**)

”திரைப்படங்களில் தேவதையைப்போல வண்டி ஓட்டிவரும் நாயகியின் சுடிதார் துப்பட்டா பறந்துபோய், நாயகன் முகத்தை மூடுவதும், அப்போது தென்றல் வீசுவதும் நடக்கும். படத்துக்கு அது ஓகே. நிஜத்தில் அப்படி நடந்தால், வாழ்க்கையில் புயல்தான் வீசும். உயிரோ, உடல் பாகமோ பறிபோகும். அதனால், சுடிதார் துப்பட்டாவின் இரண்டு நுனிகளையும் சேர்த்து முடிச்சுப்போட்டு வண்டி ஓட்டுவதுதான், பெண்களுக்கும் பாதுகாப்பு; பக்கத்து வண்டிக்காரருக்கும் பாதுகாப்பு.

டூவீலரில் புடவை முந்தானை அல்லது துப்பட்டா மட்டுமின்றி, தரையில் புரள்வது போன்ற நீளமான ஆடைகளும் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு. இதுபோன்ற ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, வண்டிகளில் ‘சாரி கார்டு’ இருப்பதுதான் முதல் பாதுகாப்பு வழி. உங்கள் ஆடை வண்டிச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டால், அப்படியே சாலையில் விழும் நிலை உண்டாகும். எலும்பு முறிவு, ஹெல்மெட் போடவில்லையென்றால் தலையில் அடிபடுவது, பின்னால் வேகமாக வரும் வண்டியினால் ஏற்படும் விளைவு என ஆபத்தின் நீளம்  பெரியது.

கழுத்தைச் சுற்றி துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு வண்டி ஓட்டும்போது, துப்பட்டா சக்கரத்தில் மாட்டி இழுபட்டால், கழுத்து எலும்பும் முறிந்துவிடும். உயிருக்கும் பெரும் ஆபத்தாக மாறலாம். திக்கானத் துணியில் துப்பட்டா போட்டுக்கொண்டிருந்தால், அது வண்டி சக்கரத்தில் மாட்டும்போது, காத்தாடி நூல் எப்படி கழுத்தை அறுக்குமோ அதுபோன்று நிகழ்ந்துவிடும். புடவை முந்தானை வண்டிச் சக்கரத்தில் சிக்கினால், அது என்ன மாதிரியான சங்கடங்களை ஏற்படுத்தும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இதுதவிர, லிஃப்டில் ஏறும்போதும், காரில் ஏறும்போதும்கூட துப்பட்டா அல்லது முந்தானை கதவில் சிக்கியுள்ளதா என்பதைக் கவனியுங்கள்” என்று வீட்டுக்கு வெளியே நடக்கும் விபரீதங்களைச் சொன்ன டாக்டர் ஜோஸ், வீட்டுக்குள்ளேயே பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் பகிர்ந்தார்.

”ஓரளவுக்கு நீளமான தலைமுடி இருக்கும் பெண்கள், பெடஸ்டல் ஃபேனில் முடியைக் காயவைக்கும்போதும், ஃபேன் அருகில் முடியை விரித்துப்போட்டு வேறு வேலையாக நின்றிருக்கும்போதும் கவனமாக இருக்கவும். கண்மூடித் திறக்கும் நேரத்தில் காற்றின் இழுவிசை வேகத்தில், தலைமுடி ஃபேனுக்குள் சிக்கிக்கொள்ளலாம். இதுபோன்ற ஃபேனுக்குள் இருக்கும் பிளேடுகள் பெரும்பாலும், தடிமனான இரும்பால் செய்யப்பட்டிருக்கும். ஃபேனும் வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால், தலைமுடியானது ஸ்கால்ப்புடன் பிய்ந்துவிடும். ஒரு வருடத்துக்கு முன்பு இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. கழுத்தில் போட்டிருக்கும் துணியும் வெட்கிரைண்டரில் சிக்கிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, மெஷின்கள் மற்றும் வாகனங்களைக் கையாளும்போது, பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். தலைமுடி மற்றும் ஆடை மீது கண் இருக்கட்டும்” என்கிறார் டாக்டர் ஜோஸ்.

%d bloggers like this: