பி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி?

இந்தியாவில் பி.எஃப் கணக்கு உள்ள தொழிலாளர்களில் எட்டுக் கோடிப் பேருக்கு பிறந்ததேதி தவறாக உள்ளதாகவும், 11 கோடி பேருக்கு தந்தையின் பெயர் தவறாக உள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பணியாளர்கள் தங்களின் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறும்போது சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பி.எஃப் கணக்கில் விடுபட்டுப் போன தகவல்களைச் சேர்க்க முடியுமா, பணியாளர்கள் தொடர்பான அனைத்து  விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது என சென்னை மண்டலத்தில் பி.எ.ஃப் அலுவலத்தின் துணை கமிஷனர்  ஆர்.கணேஷிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
“பி.எஃப் அலுவலகம் பணியாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களின் வாயிலாகத்தான் அவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பெறுகிறது. எனவே, நிறுவனங்களின் வாயிலாகவே பணியாளர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ள முடியும். 

உதாரணமாக, 500 பேர் கொண்ட அலுவலத்தில் ஒரே பெயர்கொண்ட பணியாளர்கள் பலர் இருப்பார்கள். அப்படி இருக்கும்போது, ஒருவர் கணக்கில் இருக்கும் பி.எ.ஃப் பணம், அதே பெயரில் இருக்கும் வேறு பெயர் உடைய வேறு ஒரு பணியாளருக்கு மாறிச் சென்றுவிட்டது என்று சொன்னால், சம்பந்தப்பட்ட  நிறுவனத்திலிருந்து வரும் உறுதியான தகவல் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில்தான் பி.எஃப் அலுவலகம் நடவடிக்கை எடுக்க முடியும். இதற்குப் பணியாளர்கள் தகுந்த ஆதாரங்களை அளிப்பது அவசியம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, பணியாளர்கள் பி.எஃப் கணக்கு தொடர்பான தகவல்களையும், ஆவணங்களையும் அளிக்கும்போது, உரிய ஆவணங்களைச் சரியாக நிறுவனத்திடம் அளிக்க வேண்டும். அது பணியாளர்களின் கடமை. இதைச் சரியாகச் செய்தால்தான், பணியாளர்கள் தங்களின் பி.எஃப் பணத்தை எந்தவிதச் சிரமமுமின்றிப் பெற முடியும்.
தற்போது, பி.எஃப் அலுவலகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமாகவே நடக்கிறது. பி.எஃப் திட்டத்தில் பணியாளர்களை இணைக்க விரும்பும் நிறுவனங்கள் அனைத்தையும் ஆன்லைன் (www.epfindia.gov.in) மூலமாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற நிறுவனங்களுக்குரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த வசதியைப் பயன்படுத்தி நிறுவனங்கள், பணியாளர்கள் செய்ய நினைக்கும் திருத்தங்களை,  குறிப்பாக, தந்தையின் பெயர் தவறாக இருப்பது, பிறந்த தேதி மாறியிருப்பது உள்ளிட்ட திருத்தங் களை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள முடியும். மேலும், பி.எஃப் இணையதளத்தில் மேற்கண்ட திருத்தங்களைச் செய்ய தனிவசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
பி.எஃப் கணக்கு தொடர்பாகத் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பும் பணியாளர்கள்  அதற்குத் தேவையான ஆவணங்களை அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகம்மூலம் தந்து, திருத்தம் செய்ய முயற்சி செய்யலாம். ஆதார் எண்ணை பி.எஃப் திட்டத்துடன் இணைப்பதன்மூலம் பணியாளர்கள் இதுபோன்ற விவரங்களை எளிதில் சரிபார்க்க முடியும்.
பி.எஃப் கணக்கில் சிறிய அளவிலான திருத்தங்கள் இருந்தால், கமிஷனர் மூலமாக உடனடியாகச் செய்துகொள்ள முடியும். பெரிய அளவிலான திருத்தங்கள் இருந்தால், அவை அந்த மண்டல பி.எஃப் அலுவலக கமிஷனரின் பார்வைக்குச் சென்று, அவரின் ஒப்புதலுக்குப் பிறகே மாற்றங்கள் செய்யப்படும். பணியாளர்கள் மேற்கொள்ள விரும்பும் திருத்தங்கள் பி.எஃப் இணையதளத்தில் உடனடியாக அப்டேட் செய்யப்படுகிறது.
பி.எஃப் இணையதளத்தில் அப்டேட் செய்யப்படும் திருத்தங்கள், மண்டல அலுவலகத்தில் உள்ள சர்வரிலும் உடனடியாக அப்டேட் செய்யப்படுகிறது. இதனால், பணியாளர்களுக்குத் தாங்கள் ஆன்லைனில் செய்த திருத்தங்கள் சரியாக இடம்பெற்றிருக்குமா,  கணக்கு வைத்திருக்கும் மண்டல அலுவலகத்தில் அப்டேட் ஆகியிருக்குமா என்கிற பயம் வேண்டாம்.
சென்னையில் மட்டும் இதுபோன்று 18,000 புகார்கள் வந்துள்ளன. எனவே, பணியாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் வந்தால், அவர் மேற்கொள்ள விரும்பும் திருத்தங்களைக் கண்டிப்பாகச் செய்யப்படும்’’ என்றார்.
எதிர்காலத்தில் பயன்படும் என்கிற நோக்கில் தான் பி.எஃப் கணக்கில் நாம் பணத்தைச் சேர்க்கிறோம். எனவே, நம் பி.எஃப் கணக்கில் எல்லா விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை நாமே சோதித்துப் பார்த்துக்கொள்வதன் மூலம், பிற்பாடு ஏற்படும் தாமதத்தை எளிதில் தவிர்க்க முடியும்!

%d bloggers like this: