Advertisements

இந்த நேரத்தில் போகணுமா?”

டெல்லிக்கு பிரதமர் திரும்பிச்சென்ற பிறகுதான் வருவேன்’’ என்று காலையிலேயே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். பிரதமரின் விமானம், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கழுகார் வந்து சேர்ந்தார்.
‘‘சென்னை விமான நிலையப் பகுதியில் கொந்தளிப்பான நிலையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது, பிரதமர் மோடி வந்து இறங்கினார். அவரை வரவேற்க அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து

காத்திருந்தனர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும். சிரித்த முகத்தோடு அவர்கள் இருவரும் மோடியை வரவேற்றனர். ஆனால், எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து வந்த ரிப்போர்ட், மோடியை மூட் அவுட் ஆக்கியிருந்ததாம். வந்தது முதல் சென்னையிலிருந்து புறப்படும் வரை மோடியின் முகம் மிகவும் இறுக்கமாகவே இருந்தது. இப்படி ஒரு வீரியமான போராட்டத்தைப் பிரதமர் எதிர்பார்க்கவில்லை. வழக்கமான போராட்டங்களாக இருக்கும் என்றுதான் அவர் நினைத்துள்ளார். கடந்த வாரம், மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்திருப்பது பற்றி ஏற்கெனவே உமக்குச் சொன்னேன் அல்லவா?’’
‘‘‘ஆமாம்!’’
‘‘பிரதமரின் பயணம் தள்ளிவைக்கப்பட்டால் நல்லது என்ற தொனியில் மத்திய உளவுத்துறையின் அறிக்கை கடந்த வாரம் போனது. பிறகுதான், தமிழகத்தின் சூடான சூழலைப் பிரதமர் உணர்ந்தார். அதன்பிறகு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவரும் தன் பங்குக்கு சீரியஸை ஏற்றிவிட்டு வந்தார். ‘தமிழ்நாட்டில் இவ்வளவு போராட்டங்கள் நடக்கிறதென்றால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்?’ என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்க, ‘யாரையும் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாகக் கைது செய்ததாகத் தெரியவில்லை’ என்றார் கவர்னர். ‘முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யாமல் ஒரு மாநில அரசு எப்படி இருக்கமுடியும்?’ என ராஜ்நாத் சிங் அவரிடம் கேட்டுள்ளார். அதன்பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு தாக்கீது அனுப்பி வைக்கப்பட்டதாம்.’’
‘‘அது என்ன?’’
‘‘மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கவனிப்பதில் மாநில அரசுகள் கவனமாகச் செயல்பட வேண்டும்; அப்படிச் செயல்படாத அரசுகளுக்கு மத்திய உள்துறை சில எச்சரிக்கைகளை விரைவில் செய்யும் என்றதாம் அந்த அறிக்கை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதமர் சென்னை போக வேண்டுமா’ என்ற விவாதமும் நடந்தது. ‘பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டால், அது இந்திய அளவில் பெரிய விவாதமாக ஆகும். அவருக்கும் கட்சிக்கும் தலைகுனிவாக அமையும்’ என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இதைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கவில்லையாம்!’’

‘‘என்ன சொன்னாராம் அவர்?’’

‘‘நிர்மலா சீதாராமன், தன் துறையின் மைல்கல்லாக இந்தக் கண்காட்சியை நினைத்தார். ‘உலக நாடுகள் பலவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தள்ளிவைக்க முடியாது. பிரதமரும் வந்தாக வேண்டும். ஹெலிகாப்டரில் சென்று தொடங்கி வைக்கலாம்’ என்றாராம் நிர்மலா சீதாராமன். கண்காட்சியை ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்க வருவதாகத் திட்டமிடப்பட்டது. 11-ம் தேதி கறுப்புக்கொடி காட்டினால், அதுதான் ஹைலைட் ஆகும் என்பதால், ‘கண்காட்சியை 11-ம் தேதி தொடங்கிவிடுங்கள். நான் 12-ம் தேதி வருகிறேன்’ என்று பிரதமர் சொன்னாராம். அதனால்தான், 11-ம் தேதி என்பது 12-ம் தேதி என மாறியது.”
‘‘ஓஹோ!”
‘‘எந்தத் தேதியாக இருந்தாலும் கறுப்புக்கொடி காட்டுவதற்குத் தயார் என்று கட்சிகள் தயாராகின. ‘நிலைமை மிக மோசமாக இருக்கிறது’ என டெல்லிக்குச் சொல்லப்பட்டது. அதனால்தான், 11-ம் தேதி மாலை வரை, பிரதமரின் பயணத் திட்டத்தை அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிசெய்யவில்லை!”
‘‘ஏன்?”
‘‘இரண்டு காரணங்கள். பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் வருகையை, ‘உறுதியாகவில்லை’ என்று கடைசிவரை வழக்கமாகச் சொல்வதுண்டு. பாதுகாப்புக் காரணங்களுக்காக அதை மறைத்து வைப்பார்கள். அந்த அடிப்படையில், இப்போது உறுதிப்படுத்தாமல் இருந்தார்கள். மேலும், இந்தச் சூழ்நிலையில் போகலாமா, வேண்டாமா எனப் பிரதமரால் தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை என்கிறார்கள்.’’
‘‘இரண்டாவது காரணத்துக்கு உண்மையான அர்த்தம் என்ன?’’
‘‘ஏப்ரல் 12 அன்று பி.ஜே.பி எம்.பி-க்கள் அனைவரும் காங்கிரஸைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரைக் காங்கிரஸ் எம்.பி-க்கள் தொடர்ந்து நடத்தவிடாமல் முடக்கியதைக் கண்டித்து, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பி.ஜே.பி அறிவித்தது. 12-ம் தேதி பி.ஜே.பி எம்.பி-க்கள் நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும்போது, இரண்டு விழாக்களில் பிரதமர் கலந்துகொள்ளலாமா என்பதுதான் அவரது சந்தேகத்துக்குக் காரணம். இதை யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, ‘நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன்’ என்று திடீரெனச் சொன்னாராம் பிரதமர். இதை பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா ஏற்கவில்லை என்கிறார்கள். ‘பிரதமர் உண்ணாவிரதம் இருப்பது சரியல்ல, விதிமுறைக்கு முரணானது என்று விமர்சிப்பார்கள்’ என்றாராம் அவர். ‘பி.ஜே.பி எம்.பி-க்கள் உண்ணாவிரதம் இருக்கும் நாளில், நான் விழாக்களில் பங்கேற்பது சரியா?’ என நினைத்த பிரதமர், ‘எனது வழக்கமான அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாத வகையில் உண்ணாவிரதம் இருக்கிறேன்’ என்றாராம். சென்னைப் பயணத்தில் அவர் விமானத்திலேயே மதிய உணவு சாப்பிடுவதாகத் திட்டம் இருந்தது. ஆனால், அவர் சாப்பிடவில்லை.’’
‘‘காவிரிச் செயல் திட்டம் பற்றி மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது என மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சொல்லியிருக்கிறாரே?”
‘‘மிகவும் ஜாக்கிரதையான வார்த்தைகளைத்தான் அவர் பயன்படுத்தியுள்ளார். ‘மாநிலங்கள் இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின்படி, ஒரு செயல் திட்டம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதை மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று சொல்லியிருக்கிறார். ‘செயல் திட்டம்’ என்ற சொல்லை அமைச்சர் பயன்படுத்துவதை வைத்துப் பார்க்கும்போது, காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மறந்துவிடுவார்கள் என்றே தெரிகிறது. இது கர்நாடகா தேர்தலில் அவர்களுக்கு உதவும் என டெல்லி நம்புகிறது’’ என்றபடி கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: