Advertisements

இளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது?

இன்றைய இளைய தலைமுறையினரைப் பலவிதங்களில் பெருமையுடன்தான் பார்க்கிறோம். அபாரமான தொழில்நுட்ப அறிவு, கடின உழைப்பு, செயல்திறன், சிறுவயதிலேயே பெரிய சம்பாத்தியம், வீடு, கார் என வேகமாக செட்டில் ஆவது என எல்லாமே மகிழ்ச்சிக்குரியதுதான்.

ஆனால், அதே நேரத்தில் வாழ்வின் எதார்த்தம் புரியாதவர்களாக, சின்னச்சின்ன விஷயங்களிலெல்லாம் உடைந்து நொறுங்கிப் போகிறவர்களாக, சாதாரணமாக கடந்து போகத் தெரியாமல் அதில் வாழ்க்கையைத் தொலைப்பவர்களாக இருப்பது வேதனைக்குரியது.
காதலின் பெயரால் நடக்கும் தற்கொலைகளும், கொடூரமான கொலைகளும் இந்த வேதனைக்குரிய பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்துக் கொண்டே இருக்கிறது. அப்படித்தான் சமீபத்தில் கொல்லப்பட்டாள் அஸ்வினி. அப்படித்தான் கொலைகார பட்டத்துடன் தன்னுடைய வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறான் அழகேசன்.இளைஞர்கள் வாழ்வில் என்னதான் நடக்கிறது? இந்தக் கொடுமைகளுக்கு என்னதான் தீர்வு?
உளவியல் மருத்துவர் அசோகன் பேசுகிறார்.
பாலின பேதம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற நிலை வர வேண்டும். இந்த பாலின சமத்துவத்தை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். ஆண் உயர்வானவன், பெண் அவனுக்குக் கட்டுப் பட்டவள் என்ற தவறான பார்வையே பல குற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நோ சொல்லிப் பழக்குங்கள் தான் விரும்பும் ஒரு பொருளைப் பெற அடம்பிடிப்பது குழந்தைகளின் இயல்புதான். அடம்பிடிக்கிற காரணத்துக்காக அது அக்குழந்தைக்கு நல்லதல்ல என்று தெரிந்தும் வாங்கிக் கொடுப்பது பெற்றோர்கள் செய்கிற தவறு.
இது பின்னாளில் அக்குழந்தை விரும்பும் அனைத்துக்கும் அடம்பிடிக்கிற சூழலை உண்டாக்கும். எனவே, கெடுதல் உண்டாக்கும் பொருட்களுக்கு நோ சொல்வதோடு, அதற்கான காரணத்தையும் அக்குழந்தைக்கு சரியான முறையில் புரிய வைப்பது பெற்றோரின் கடமை.
இல்லாவிட்டால், நாளை அவன் வளர்ந்து பெரியவனான பிறகு, அவனுடைய காதலுக்கு ஒரு பெண் நோ சொல்லும்போது அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. காதல் குழப்பம் விரும்பிய நபரிடம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வது தவறில்லை.
ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் ஏதோ ஒரு காரணத்தால் நிராகரிக்கப்பட்டு ஏமாற்றம் ஏற்படுகிறபோது, அதிலிருந்து மீண்டு வருவதோடு சரியான முறையில் அணுகி அதை கடந்து செல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதைவிட்டுவிட்டு தன்னை வருத்துவது, பிறரை வருத்துவது என்று வன்முறையை நோக்கிச் செல்வது தவறு. நிராகரிப்புகளைக் கையாளும் கலை நிராகரிப்பு, நிறைவேறாத ஆசை, ஏமாற்றம், கிடைக்காத பெண் போன்ற அனைத்துமே பிரச்னைக்குரிய ஒன்றுதான். முழுவதுமாக நம்பிக்கை கொண்டிருந்த நபரே நம்மை ஏமாற்றினாலும், அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது அவசியம். அதற்காக தன் உயிரையோ, பிறர் உயிரையோ மாய்த்துக் கொள்ளத் தேவையில்லை.
வாழ்க்கை மிகப் பெரியது. இதுபோன்ற பிரச்னைகளைக் கடந்து சென்று பார்த்தால் அதைத் தாண்டியும்  ஒரு வாழ்க்கை இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அற்புதம் என்று நினைத்த ஒன்று காலப்போக்கில் சாதாரணமான ஒன்றாகவும், சாதாரணமாக நினைத்த ஒன்று அற்புதமான ஒன்றாகவும் மாற வாய்ப்புள்ளது. ஆத்திரம்… ஆபத்து…
கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகள் சரியானதாக இருப்பதில்லை. உணர்ச்சி வசப்படுகிற தருணங்களில் பகுத்தறியும் திறன் செயலிழப்பதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கிறது. கோபம் கண்களை மறைத்து, நம்மை சிந்திக்கவிடாமல் செய்து பிரச்னையை மேலும் வளர்த்துவிடுகிறது. எனவே, கோபத்தைக் கட்டுப்படுத்த பழகிக்கொள்வது அவசியம்.
எல்லாவற்றிலுமே நேர்த்தி சாத்தியம்இல்லைமிஸ்டர் பர்ஃபெக்ட் என்று ஒருவன் உலகில் இல்லை. அதேபோல் மிஸ் பர்ஃபெக்ட் என்ற ஒருத்தியும் உலகில் இல்லை. எல்லோருமே குறை, நிறைகள் கொண்டவர்கள்தான். எனவே ஒரு நபரை அவருடைய இயல்பான தன்மையில் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் நமக்கு ஏற்பட வேண்டியுள்ளது.
கல்வித்திட்டம் வெற்றிகளைக் கற்றுக்கொடுப்பதோடு தோல்விகள் குறித்தும், அதிலிருந்து மீண்டு வருவது குறித்தும் கல்வித் திட்டத்தின் மூலம் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். வெற்றியை பெரிதாகக் கொண்டாடுவதையும் தோல்வியின்போது துவண்டுவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்கிற நீதிபோதனைகள் அவசியம். அப்போதுதான் வெற்றி, தோல்வியை சமமாகக் கருதும் மனநிலை இளைய தலைமுறையினரிடம் வளரும்!

Advertisements
%d bloggers like this: