Advertisements

அருள் வழங்கும் அட்சயதிரிதியை!

சித்திரை மாதம்- அமா வாசையை அடுத்து வரும் வளர் பிறை திரிதியை நாள், ‘அட்சய திரிதியை’ திருநாளாகக் கொண் டாடப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 18-ம் நாள் புதன் கிழமை (சித்திரை-5) அன்று அட்சய திருதியை வருகிறது.

பலராம அவதாரம் நிகழ்ந் ததும், சிவனருளாலும் திருமக ளின் அருளாலும் குபேரனுக்குச் செல்வங்களின் அதிபதியாகும் வரம் கிடைத்ததும், ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி போன்ற திருமகளின் அவதாரங் கள் நிகழ்ந்ததும் ஓர் அட்சய திரிதியை திருநாளில்தான்.


அதேபோல், கணபதி தன் ஒற்றைத் தந்தத்தை எழுது கோலாகக் கொண்டு பாரதம் எழுதத் துவங்கியது,  பிரம்மன் உலகை  சிருஷ்டித்தது, ஈஸ்வரன் அன்னபூரணியிடம் பிக்ஷை ஏற்றது ஆகிய சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் திருநாளில் தான். 

மேலும், சூரியபகவான் அருளால் திரெளபதி அட்சய பாத்திரம் பெற்றது, ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத் திரத்தால் மகிழ்ந்து மகாலட்சுமி தேவி பொன்மாரி பொழிந்ததும் இந்த தினத்தில்தான்.

திரௌபதி யின் மானம் காக்க கிருஷ்ணர் துகில் தந்து அருளியது,  கிருஷ்ண பரமாத் மாவின் கருணையால் குசேலன் குபேர சம்பத்து பெற்றது… ஆகிய புராணச் சம்பவங்களும் அருள் பொங்கும் அட்சய திரிதியை திருநாளில்தான் நிகழ்ந்தன என்கின்றன புராண நூல்கள்.

மகிமைமிகு திரிதியை

பொதுவாகவே வளர்பிறை 3-வது திதிநாளில் சந்திர உதய நேரத்தில் சந்திரனைத் தரிசிப்பது விசேஷமாகும். அதிலும் அட்சய திரிதியை நாளில் செய்யப்படும் சந்திர தரிசனத்துக்குக் கூடுதல் சிறப்பு உண்டு.

வருடத்தில் யுகாதி, விஜய தசமி, தைப்பூசம் ஆகிய நாள் களுக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த நாட்களில் யோகம் சரியில்லை என்றாலும், முக்கிய மான காரியங்களைச் செய்ய லாம் என்கின்றன ஞானநூல்கள்.  இந்தப் பட்டியலில் அட்சய திரிதியையும் அடங்கும்.

தர்மசாஸ்திரப்படி சுப காரியங்கள் அனைத்தையும் வளர்பிறை திதிகளில் ஆரம்பிப் பது விசேஷம். அதிலும் திரிதியை விசேஷமான திதியா கும். இந்தத் திதிநாளில் நட்சத்திரம், யோகம், லக்னம், துருவம் பார்த்து நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என்பார்கள்.

பொதுவாக திரிதியை திதியில் குழந்தைக்கு அன்னப் பிராசனம் செய்ய, சங்கீதம் பயில, சிற்பக் காரியங்களில் ஈடுபட, சீமந்தம், மாங்கல்யம் செய்ய, விவாகம், நிஷேகம், பும்சவனம், தொட்டிலில் குழந்தையை விட, காது குத்த, பயணம் மேற்கொள்ள என அனைத்து சுப காரியங்களையும்  செய்யலாம்.

வளர்பிறை திரிதியை என்றில்லாமல் தேய்பிறை திரிதியையும் சுபகாரியங்களில் ஈடுபட உகந்தது என்பார்கள் பெரியோர்கள். தேய்பிறை பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி வரை வளர் பிறை போல் பலன் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது இப்படியென்றால், சித்திரையில் வரும் அட்சயதிரிதியை திரு நாளுக்கு இன்னும் அதிகமான பெருமைகள் உண்டு. 

நன்மைகளை வளர்க்கும் அட்சயதிரிதியை

`அட்சய’ என்றால் அழியாத – குறையாமல் பெருகக் கூடியது எனப்பொருள். இந்த நன்னா ளில் செய்யப்படும் நன்மைகள் பன்மடங்காகப் பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும் என்கின்றன ஞானநூல்கள்.

இந்த நாளில் சூரியனும் சந்திரனும் உச்ச ராசியில் இருப்பர். மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நாள் இது. பெரியவர்கள் வாழ்த்தும்போது ‘சூரிய சந்திரர் போல் நிலைத்து வாழ்க’ என்பார்கள். நீடுழி காலம் வாழ ஆத்மகாரகனாகிய சூரியனும் மனோகாரகனாகிய சந்திரனும் வலுப்பெற்றிருப்பது அவசியமாகும். அவ்வாறு சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திரிதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங் கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருள்களும் அழியாது நிலைத்திருக்கும்.

என்னென்ன செய்யலாம்?

தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள். மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளே தர்மம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மனிதர்களுக்கான அறநெறி களில் குறிப்பிடத்தக்கது தானம். அட்சய திரிதியை நாளில் தான தர்மம் செய்பவர்களுக்குப் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.

நம்மால் முடிந்த சிறிதளவு தர்மம் செய்தாலும் அதற்கான பலன் பலமடங்குக்கிட்டும்.செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் பெருக இந்நாளில் தானம் செய்வது விசேஷம்.

குறிப்பாக அன்னதானம், சொர்ண தானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசே ஷம். தங்கத்தைத் தானமாகத் தர இயலாதவர்கள் தங்களால் இயன்றளவு பணத்தை அநாதை கள், ஏழைகள், வயோதிகர்கள், ஆதரவு இல்லாத உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்குத் தர்மம் செய்வது விசேஷமாகும்.  

அதேபோல்,  இந்தத் திருநாளில் புராணக் கதைகளைப் படித்து,  இறை தத்துவங்களை மனதில் ஏற்றி வழிபடுவதாலும் அளவில்லா பலன் கிடைக்கும்.

அவ்வகையில், அற்புதத் தத்துவங்களையும் அறங்களையும் உபதேசிக்கும் சில அருள் சம்பவங் களை – திருக்கதைகளைப் படித்தறிவோம். 

அட்சய திரிதியை நன்னா ளில் நிகழ்ந்த இந்த அருள் சம்பவங்கள் நமக்குத் தரும் போதனைகள் அற்புதம் வாய்ந்தவை.

ருக்மினியின் கேள்வி?

ண்ணனின் நண்பன் சுதாமன் (குசேலன்). வறுமையில் வாடிய அவன், ஒருமுறை ஸ்ரீகிருஷ் ணனைச் சந்தித்ததும், அவன் அருளால் குபேரனா னதும்  எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

ஆனால், சுதாமன்- கண்ணன் சந்திப்புக்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்களும், அப்போது பிறந்த கேள்விகளும், அவற்றுக்குக் கண்ணன் கூறிய பதில்களும்தான் இதில் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சும மான விஷயங்கள். 

சுதாமனுக்கு உபசாரங்கள் நடந்து முடிந்தன. ஆனால், தனது வறுமை நிலை நீங்கியது குறித்து அவனுக்குத் தெரியாது. கண்ணனின் கருணையால் பேரானந்தம் அடைந்திருந்த சுதாமனின் மனம் நிர்மலமாக இருந்தது.

அதில் எந்த ஆசா பாசமும் இல்லை. பரமார்த்த நிலையில் அவன், ‘`போய் வருகிறேன், கண்ணா!’’ என்று கூறி விடை பெற்றுக்கொண்டான்.

கிருஷ்ணன், சுதாமனுக்குச் சகல சௌபாக்கியங்களையும் நிச்சயமாகத் தந்திருப்பான் என்று ருக்மினி யூகித்தாள். இருந்தாலும், அவள் மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது. 

“ஸ்வாமி, வறுமையால் வாடி வந்த உங்கள் அருமை நண்பனுக்கு எத்தனையோ ஐஸ்வர்யங்களை நீங்கள் அளித்திருப் பீர்கள். அதைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரிவிக்கா மல், அவர் திரும்பிப் போக எந்தவித சௌகர்யங்களும் செய்து தராமல், வந்தது போலவே மீண்டும் நடந்தே ஊர்திரும்பச் சொல்லி விட்டீர்களே, ஏன்?’’ என்று கேட்டாள்.

அதற்கு கண்ணன் பதில் கூறினான்:

‘`ருக்மினி! சுதாமன் வாழ்க்கை யில் அமைதியும், ஆனந்தமும், திருப்தியும் நிறைந்திருக்கும் நேரம் இன்னும் சில நாழிகை களே உள்ளன. என்னைத் தரிசித்த பேரானந்தத்துடன் அவன் சென்று கொண்டிருக் கிறான். 

வீட்டுக்குச் சென்று, தான் குபேர செல்வத்தை பெற்றதை அறிந்ததும், பிரச்னை கள் ஆரம்பித்துவிடும்.

செல்வத்தால் ஆசை, பாசம், கர்வம் மற்றும் செல்வத்தை மேலும் சேர்க்க வேண்டும் என்கிற பேராசை, அவற்றால் ஏற்படும் புதிய பிரச்னைகள் ஆகியவற்றில் சுதாமனது வாழ்க்கை முற்றிலும் சுழல ஆரம்பித்துவிடும்.

அப்போது அவன் பரமானந்த நிலை மறைய ஆரம்பித்துவிடும். வாழ்வில் அவன் அனுபவிக்கப்போகும் கடைசி நேர ஆனந்தத்தையும் சச்சிதானந்த நிலையையும் நான் அழிக்க விரும்பவில்லை. அதனால்தான் அவன் வந்தது போலவே திரும்பி வழி அனுப்பி யிருக்கிறேன்’’ என்றான் கண்ணன்.

இந்தப் பதிலைக் கேட்டு ருக்மினி மகிழ்ந்தாள்.

கண்ணன் செய்யும் காரியங்களுக்கெல் லாம் ஒரு காரணம் உண்டு என்பது அவளுக்குத் தெரிந்ததுதானே!

இப்போது கண்ணபிரான் தன் பங்குக்கு, ஒரு கேள்வியை ருக்மினியிடம் கேட்டான்.

‘`சுதாமன் கொண்டு வந்த அவலை, நான் ஒவ்வொரு பிடியாகச் சாப்பிட்டேன்.   முதல் இரண்டு பிடி அவலைச் சாப்பிட்டு விட்டு, மூன்றாவது பிடி அவலை எடுத்தபோது, நீ ஏன் என் கையைப் பிடித்துத் தடுத்தாய்?’’ என்று கேட்டான்.

இப்போது ருக்மினிதேவி அருமையாக ஒரு பதிலைச் சொன்னாள்: ‘`ஸ்வாமி, தங்களுக் குச் சமர்ப்பிக்கப்படும் எந்தப் பொருளும் பிரசாதமாகிறது. சுதாமன் அன்புடன் தந்த அவல், அனைத்தையும் தாங்களே சாப்பிட்டுவிட்டால், அந்தப் பிரசாதத்துக்காகக் காத் திருக்கும் எனக்கும், தங்களின் பரிவாரத்துக்கும் பிரசாதம் இல்லாமல் போய்விடுமே!

அதற்காகத்தான்… ‘எங்களுக் கும் கொஞ்சம் மீதி இருக்கட்டும்’ என்ற பாவனையில் தங்கள் கைகளைப் பிடித்தேன்’’ என்றாள்.

ஆகவே, ருக்மினி தடுத்தது தர்மத்தை அல்ல; தர்ம பலனை அனைவரும் பெறவே அவள் அப்படிச் செய்தாள்.

`கிருஷ்ணா அபயம்! ‘

கவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.  

அவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் கிருஷ்ணர், ‘`உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மை கள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்’’ என்றார்.

அப்போது அவரிடம் உத்தவர் பொன் பொருளையோ, சுகபோகங்களையோ வரமாகக் கேட்கவில்லை. மாறாக, தன் மனதில் இருந்த கேள்விகளுக் கான பதிலைக் கேட்டார்.

அவற்றுக்கு பகவானும் உரிய விளக்கங்களை அளித்து உபதேசித்தார். அதுவே உத்தவ கீதை ஆகும். உத்தவரின் கேள்வி களில் முக்கியமான ஒன்றுண்டு.

“ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்? அப்படியானதொரு நிலையில் பாஞ்சாலிக்கு உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?’’ என்று கண்ணீர் மல்கக்கேட்டார் உத்தவர்.

கெளரவ சபையில் துச்சா தனன் எழுந்துசென்று துகிலு ரிய முற்படுவதற்கு முன்பே அவர்களைத் தடுத்திருக்கலாமே என்பது உத்தவரின் கேள்வி.கண்ணன் பதில் சொன்னார்.

“அண்ணனான துரியோத னனின் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌ பதியின் சிகையைப் பிடித்ததும், அவள் என்னை அழைக்க வில்லை. தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்துகொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிட வில்லை! 

நல்லவேளை… துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், ‘ஹரி… ஹரி… அபயம் கிருஷ்ணா… அபயம்’ எனக் குரல் கொடுத் தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத் ததும் சென்றேன். அவள் மானத் தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?’’ என்றார் கண்ணன். உடனே உத்தவர் ‘`அப்படியானால், பக்தர்கள் கூப்பிட் டால்தான் நீ வருவாயா?’’ எனக் கேட்டார்.

‘`உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்மவினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கி டுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வதர்மம்’’ என்றான் ஸ்ரீகண்ணன்.

‘`அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளை யெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனு பவித்துக் கொண்டே இருக்க வேண்டுமா?’’

உத்தவரின் இக்கேள்விக்குப் புன்னகையுடன் பதில் சொன்னான் கண்ணன்:

‘`உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும்போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது’’ என்றான்.

உண்மையை உணர்ந்த உத்த வரின் கண்கள் பனித்தன!

பொன்மழை பொழிந்தது! 

து வேனிற் காலம். சித்திரை மாதத்து வளர்பிறை திருதியைத் திருநாள். பிக்ஷை ஏற்கப் புறப்பட்டிருந்தான், பாலகன் சங்கரன்.

பொய், பொறாமை, ஆசை, வஞ்சனை… என கொடுமையின் வெம்மையால் தகிக்கும் பூமகளின் துயரம் தீர்த்து, அவளைக் குளிர்விக்க… சாட்சாத் பரமேஸ்வரனின் அம்சமே இங்கே சங்கர பால கனாக  வந்து அவதரித்திருக்கிறது.

அவருக்கு இன்ப -துன்பங்கள் ஏது? வெம்மை- குளிர்ச்சி எனும் பாகுபாடுகள்தான் ஏது? ஆனாலும் காட்டு மரங்களுக்கு அது தெரியாதே! அவை… பாலகனின் மலர்ப் பாதங்கள் வெயிலின் வெம்மையால் நோகக் கூடாதே என்று, இலை களையும் பூக்களையும் உதிர்த்து மலர்ப்பாதை போட்டிருந்தன!

மெள்ள நடந்து வந்த சங்கரனின் கண்களுக்கு தூரத் தில் ஒரு குடிசை தென் பட்டது. நடையை வேகப் படுத்தினான். ஊரின் எல்லையில் தனியே இருந்த அந்த குடிசையின் அருகில் சென்று, குரல் கொடுத்தான்.

‘‘பவதி பிக்ஷாந்தேஹி’’

உள்ளே இருந்து ஒரு மாதரசி வெளிப்பட்டாள். பாலகனைக் கண்டாள். அனிச்சையாகவே அவளது கரங்கள் சேர்ந்து குவிய, சங்கரனை வணங் கினாள். ஏனோ தெரியவில்லை… இந்த பாலகனைக் கண்டதுமே அவள் உள்ளம் விம்மியது; கண்கள் தானாக நீரைச் சொரிந்தன. மனம் ஏதேதோ புலம்ப நினைக்க, அதன் வெளிப்பாடாய் அவள் உதடுகள் துடித்தன.

உள்ளுக்குள் ஒரு தெய்விகச் சிலிர்ப்பு. ஆண்டவனை நேரில் தரிசித்த பரவசம்! கணநேரம் செய்வதறியாது திகைத்து நின்றாள். மறுகணம் தன்னிலை உணர்ந்தவளாக உள்ளே ஓடி னாள். பாலகனுக்கு பிக்ஷையிட ஏதாவது உள்ளதா எனத் தேடிப் பார்த்தாள். விதியின் விளை யாட்டு… குன்றிமணி அரிசி இல்லை. பரிதவித்துப் போனாள். எனினும் முயற்சி யைக் கைவிடாமல், அடுத்தடுத்த அறைகளிலும் தேடத் துவங் கினாள். ஒரு பானையில் நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. 

அகமகிழ்ந்து பயபக்தியோடு அதை எடுத்துவந்து, கை நடுக்கத் துடன் சங்கரனின் பிஷை பாத்திரத்தில் இட்டாள். புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட சங்கரருக்கு, அவளின் தவிப்பையும், கை நடுக்கத்தையும் கண்டு சடுதியில் புரிந்து போனது… அந்த இல்லத்தின் இல்லாமையும் இயலாமையும்!

மெள்ள கண்மூடி, மகாலட்சு மியை தியானித்தான். மனதாரப் பிரார்த்தித்தான்…

அங்கம் ஹரே:
    புளகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ
    முகுளாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகிலவிபூதிரபாங்கலீலா
    மாங்கல்யதாஸ்து
மம மங்களதேவதாயா:

– திருமகளின் கடைக்கண் பார்வை வேண்டும், அந்தக் குடிசையில் சகல மங்கலங்களும் பெருக வேண்டும்… எனத் துதித்துப் பாடினான்.

அலைமகள் கருணை செய்தாள்: அங்கே அந்த இல்லத்தில் பொன்மாரிப் பொழிந்தது! இந்த தெய்விகச் சம்பவம் குறித்து சுவாரஸ்யமான கர்ண பரம்பரைத் தகவல் ஒன்றும் உண்டு.

துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ் ணரின் அருளால் குபேர சம்பத்து பெற்ற குசேல தம்பதியே கலியுகத்திலும் பிறந்து வறுமையை அனுபவித்தனர். முற்பிறவியில் அவர்களுக்குக் கிடைத்த செல்வ போகத்தை முறை யுடன் செலவழிக்காததால், இப் பிறவியில் அவர்களுக்கு வறுமை வாய்த்தது என்று திருமகள் ஆதிசங்கரரிடம் தெரிவித்ததாகவும், அவர் ‘என்பொருட்டு இவர்களுக்கு அருள் செய்ய வேண்டும்’ என்று கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தேவியை வழிபட்டதாகவும் சொல்கிறது அந்தத் தகவல்!

அலைமகளை துதித்து ஆதிசங்கரர் அருளிய ‘கனகதாரா ஸ்தோத்திரம்’, அவர் அருளிய முதல் பாடல்! 

கனகதாரா ஸ்தோத்திரங் களினால் தினசரி எவர் துதிக் கின்றனரோ, அவர்கள் மிகுந்த பாக்கியசாலிகளாகத் திகழ் வார்கள் என்பது ஆதிசங்கரரின் திருவாக்கு.

அட்சய திருதியை தினத்தில் இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அலை மகளை வழிபடுவதால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். கனக தாரா ஸ்தோத் திரம் மட்டுமல்ல… அட்சய திருதியை அன்று துதித்து வழிபட உகந்த வேறுசில தெய்வப் பாடல்களும் உண்டு.

பதினாறு பேறுகளும் கிடைக்கும்

பிராமிப் பட்டர் அருளிய அபிராமியம்மை பதிகத்தில் ஒரு பாடல் பதினாறு பேறு களையும் விவரித்து அவற்றை அருளும் படி வேண்டுகிறது.

கலையாத கல்வியும் குறையாத
வயதுமோர் கபடு வாராத நட்பும்
   கன்றாத வளமையும்
     குன்றாத இளமையும்
       கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத
மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும்
    மாறாத வார்த்தையும்
  தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
   துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
    தொண்டரோடு கூட்டு கண்டாய்:
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
   ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
    அருள்வாமி அபிராமியே!   

அம்பாளுக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து, இந்தப் பாடலைப் பாடி வழிபடவேண்டும். இதனால் கல்வி, நீண்ட ஆயுள், நல்ல நட்பு, குறையாத வளம், அன்பு மிகுந்த மனைவி, குழந்தை பாக்கியம், புகழ், வாக்குத்தவறாத நிலை, தடைகள் இல்லாத கொடைத்தன்மை, அழியாத செல்வம், அறநெறி மிகுந்த அரசாங்கம், துன்பம் இல்லாத வாழ்வு, அம்பாளிடம் குறை யாத பக்தி ஆகிய 16 பேறுகளும் வாய்க்கும்.

திருப்புகழ் பாடல்…

கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகிலுள்ள தலம் கொங்கணகிரி. இங்கு அருளும் முருகப்பெருமானைப் போற்றி அருணகிரியார் அருளிய இந்தப் பாடல்  என்னென்ன வேண்டுகிறது தெரியுமா?

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்
   அந்திபகல் அற்றநினை வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தி  உனை
   அன்பொடுது திக்கமனம் அருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
   சந்திரவெ ளிக்கு வழி அருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
   சம்ப்ரமவி தத்துடனெ அருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதம்என் உற்றமனம்
  உன்றனை நினைத்தமைய அருள்வாயே
மண்டலிகா ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
   வந்தணைய புத்தியினை அருள்வாயே
கொங்கில் உயிர் பெற்றுவளர் தென்கரையில்
அப்பர் அருள்கொண்டு உடல் உற்றபொருள் அருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தன்  என வெற்றிபெறு
   கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே.

கருத்து: யானை முகம் கொண்ட விநாயகருக்கு இளையோனாக விளங்கி, மூன்று உலகங்களையும் தனது வலிமையினால் வெற்றி கொள்ளும்,  ‘கொங்கணகிரி’ எனும் திருமலையின் மீது எழுந்தருளியிருப்பவரே!

ஐந்து திருக்கரங்களைக் கொண்ட விநாயகரைப் போன்று, எல்லா காரியங் களுக்கும் முற்படும் மனமானது ஐந்து புலன்களின் வழியே செல்லும் தொழிலை நீக்கி, மறுப்பு நிலை என்ற கேவல நிலை அகற்றி நினைவற்ற நிலையைத் தந்தருள்வீர்.

செந்தமிழ் பாடலால் அன்புடன் துதி செய்ய அருள்புரிவீர். தவத்தால் வருகின்ற மெய்யுணர்வைத் தந்து சிவகதி பெறுமாறு சந்திர ஒளி வீசுகின்ற மேலைவெளிக்கு வழியை அருள்வீர். எட்டு திசைகளிலும் உள்ளவர்கள் மதிக்குமாறு மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற பெருவாழ்வுக்கு அருள்புரிவீர்.   

பெண்களது இன்பத்தை, மிகுந்த இனிமை என்று எண்ணி சேர்ந்துள்ள மனமானது, உம்மை நினைத்து அமைதியடைய அருள் புரிவீர். இரவும், பகலும் உயிர்களைக் காத்து அருள்புரிந்து சிவநெறியில் வந்து சேர நல்லறிவைத் தந்தருள்வீர்.

அவிநாசி என்ற தலத்தின் தென் கரையில் சுந்தரமூர்த்தியினால், சிவபிரான் துணை கொண்டு, முதலை வாய்ப்பட்ட மகன் உயிர் பெற்று உடம்புடன் வெளிப்பட்ட அற்புதம் நிகழ்ந்தது. அப்படியான ரகசியப் பொருளை எனக்கும் அருள்வீராக என வேண்டுகிறது, அருணகிரியாரின் இந்தத் திருப்புகழ் பாடல்.

லட்சுமி கடாட்சம் பெருகும்! 

அட்சயதிரிதியை அன்று செய்யும் வழிபாடு களுக்கும் இரட்டிப்புப் பலன்கள் உண்டு. அன்று, மகாலட்சுமி தேவியானவள் குபேரன் இருக்கும் இடத்துக்குச் சென்று ஆசி புரிவதாக ஐதீகம்.

இந்நாளில் முழுமுதற் தெய்வமான விநாயகரை வணங்குவதுடன், திருமகளையும் குபேரனையும் வழிபடுவது சிறப்பு. இதனால் திருமகள் நம் வீட்டுக்கும் எழுந்தருள்வாள்; அவள் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நம் இல்லத்தில் பொங்கிப் பெருகும்.

அன்று குபேர லட்சுமி ஹோமம் செய்வதும், ஸ்ரீசூக்தம் படிப்பதும், கேட்பதும் நலம் தரும். மேலும் மகாலட்சுமி அஷ்டகம் சொல்லி, மகா லட்சுமியை வழிபடுவதன் மூலமும் லட்சுமி கடாட்சத்தை தங்குதடையின்றிப் பெறலாம்.
இந்தத் திருநாளில் தன காரகன் குரு பக வானையும் வழிபட்டு வரம் பெறலாம்.

பொன்  பொருள் வாங்க உகந்த நேரம்

ந்த வருடம் அட்சய திரிதியை புதன்கிழமையில் வருகிறது. என்றாலும், அன்று சுக்கிர ஹோரையில் புதிய பொருள்களை வாங்குவது சிறப்பாகும்.

பொதுவாகப் பொருள் வாங்க சுக்கிரனின் காலம் சிறப்பு என்பார்கள். ஆக, அன்று பகல் 12 முதல் 1 மணி வரை; பிறகு மாலை 7.00 முதல் 8.00 மணி வரையிலான நேரம் உகந்தது.

இந்த நேரத்தில் வாங்க முடியாதவர்கள் குரு ஹோரையிலும் வாங்கலாம். அதாவது காலை 9 முதல் 10 மணி வரை; பிறகு மாலை 4 முதல் 5 வரை உள்ள நேரம் சிறப்பானது. தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள் வெண்மை நிறப் பொருள்களை வாங்கலாம். வெள்ளிப் பொருள் கள், பால், உப்பு, வெண்மை நிற ஆடைகள் முதலானவற்றையும் வாங்கலாம்.

இனி, ஒவ்வொரு ராசிக்காரர் களும் அட்சய திரிதியையில் என்ன பொருள்களை வாங்கலாம், என்னென்ன பொருள்களை தானம் வழங் கலாம் என்பது குறித்து விரிவாக அறிவோம்.

பன்னிரு ராசிகளும் அட்சயதிரிதியையும்

பொதுவாக அட்சய திரிதியை திருநாளில் செய்யப் படும் புண்ணிய காரியங்கள் தங்குதடையின்றி வளர்ச்சி பெறும் என்கின்றன ஞான நூல்கள்.  இதையொட்டியே அட்சய திரிதியை அன்று தான, தர்ப்பணங்கள் முதலானவற்றை  செய்யச் சொல்லி பெரியோர்கள் அறிவுறுத்துவார்கள்.  

அன்று அரிசி, கோதுமை முதலான உணவுத் தானியங்கள் தானம் தருவது சிறப்பு.  அன்று அன்ன தானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும்; குடும்பத்தில் வறுமை நீங்கும். தவிர, அன்று பித்ருக் களுக்கு தர்ப்பணம் செய்தபின், பசுக் களுக்கு வாழைப் பழம் கொடுப்பது சிறப்பு.மேலும் இந்த தினத்தில் வீட்டுக்கு வந்து சேரும் பொருள்கள் பல்கிப் பெருகும் என்பது நம்பிக்கை.

மேஷம்:  இந்த ராசிக்காரர்கள் புதிய ஆடை அணிமணிகள், அலங்காரப் பொருள்கள், வெள்ளி, உணவுப் பொருள்களை வாங்கலாம்.

அன்ன தானம், கொள்ளு தானம் செய்வது சிறப்பாகும்.

ரிஷபம்: அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் களையும் பெண்களுக்கு உபயோகப் படும் பொருள்களையும் வாங்கலாம்.

இந்த ராசிக்காரர்கள் கோதுமை, துவரை, பச்சைப் பயிறு சம்பந்த மான பொருள்களைத் தானம் செய்வது நல்லது.

மிதுனம்: இந்த ராசியைச் சேர்ந்த அன்பர்கள், வீட்டுக்கு அழகூட்டும் பொருள்களை வாங்கலாம்.

இவர்கள் பச்சரிசி, மொச்சை ஆகியவற்றை தானம் செய்யலாம்.

கடகம்: நிலபுலன்கள், வீடு, வாகனம் வாங்கலாம். இயந்திரங் கள் வாங்கவும் உகந்த நாள் இது. இவர்கள், எள் மற்றும் எண் ணெய் தானம் செய்வது நல்லது.

சிம்மம்: இந்த ராசிக்காரர்கள், வியாபார அபிவிருத்திக்கான காரியங்களில் ஈடுபடலாம். இயந்திரங்கள் வாங்கலாம்.

இவர்கள் வேத விற்பன்னர் களுக்கு வஸ்திர தானம் அளிப் பது மிகவும் விசேஷம்.

கன்னி:   ஆடைஅணிமணிகள், அலங்காரப் பொருள்களை வாங்கலாம். தங்கம் வாங்கு வதற்கும் உகந்த நாள் இது.

இவர்கள், கோதுமை, துவரை ஆகியவற்றைத் தானம் வழங்கலாம்.

துலாம்: தாதுப் பொருள்கள் இரும்பு மற்றும் எண்ணெய் வாங்கலாம்.

இவர்கள் தானம் செய்வதற்கு, உடைக்கப்படாத கறுப்பு உளுந்து, பாய், தலையணை ஆகியவை உகந்தவை.

விருச்சிகம்: தண்ணீர் சம்பந்தமான பொருள்கள், பூஜையறைப் பொருள்களை வாங்குவது சிறப்பு. இவர்கள் ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு உதவுதல் விசேஷம்.

தனுசு: வீட்டுப் பெண்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கித் தரலாம். எள், நல் லெண்ணெய், இரும்பு ஆகிய வற்றை தானம் செய்யலாம்.

மகரம்: இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களை வாங்கலாம். ஆடை, அணிமணி களை வாங்குவதும் நல்லது.வேதம் படித்தவர்களுக்கு உதவி செய்வது நல்லது. பசு நெய் வாங்கி, அருகில் உள்ள ஆலயத் துக்குக் கொடுக்கலாம்.

கும்பம்: தெய்விகப் பொருள் களை வாங்கலாம். வீடு, நிலம், மனை, வாகனம் வாங்குவதும் நல்லது. எள், கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை தானம் செய்யலாம்.

மீனம்: இயந்திரங்கள், மின்சாதனங்கள் வாங்கலாம். மனை, வீடு போன்ற ஸ்திரச் சொத்துகள்  வாங்குவதற்கும் இந்நாள் சிறப்பானதாகும். இந்த ராசிக்காரர்கள் கோதுமை தானம் செய்வது நல்லது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: