வரலாற்றில் இடம்பெறத்தக்க முரண்பாடான காட்சிகள்தான் கடந்த வாரம் தமிழகத்தில் அரங்கேறின’’ என்ற வசனத்தோடு அலுவலகம் வந்தார் கழுகார். அவரின் தோரணையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து, ‘‘விளக்கமாகச் சொல்லும்’’ என்று கேட்டோம்.
‘‘தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள
திருவிடந்தையில், மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவக் கண்காட்சி நடைபெற்றது. இதற்காக வந்த பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினார்கள். மத்திய அரசு தனது ராணுவத் தொழில்நுட்பத்தை உலகத்துக்குக் காட்டிக்கொண்டிருந்த நேரத்தில், தமிழகம் மத்திய அரசுக்குக் கடும் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. இதைத்தான் முரண்பாடான காட்சிகள் என்றேன். அதேபோல மத்திய-மாநில அரசுகளின் உறவிலும் விரிசல் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன டெல்லி பட்சிகள். ராணுவக் கண்காட்சிக்கு வந்த பிரதமர் மோடியின் முகத்தில் அது அப்பட்டமாகத் தெரிந்தது.”
‘‘கடந்த இதழில் வெளியான புகைப்படத்திலேயே அது தெரிந்ததே?’’
‘‘இறுக்கமான முகத்துடன், வழக்கமான உற்சாகத்தை இழந்தவராகக் காணப்பட்டார் மோடி. அவர் டெல்லி போனதும், அதற்கான ரியாக்ஷன் தெரிந்தது. ‘போராட்டம் எல்லாம் பிரதமர் பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டத்தை ஒருங்கிணைக்கும் யாரையும் ஏன் கைது செய்யவில்லை? விமான நிலையத்தில் அவ்வளவு பலவீனமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன?’ என்று தமிழக அரசிடம் டெல்லியிலிருந்து காட்டமாகக் கேள்வி கேட்கப்பட்டது.’’
‘‘தமிழகத்திலிருந்து என்ன பதில் போனதாம்?’’
‘‘பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப் பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முக்கியத் தலைவர்களைக் கைது செய்தால், அது மத்திய-மாநில அரசுகளுக்கு மக்கள் மத்தியில் மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவே, அதைச் செய்யவில்லை’ என்று பதில் சொல்லப் பட்டதாம். ஆனால், தமிழகத்தில் மோடிக்கு எதிராக நடந்த எல்லாப் போராட்டங்களுக்கும் மறைமுகமாகத் தமிழக அரசு ஆதரவு கொடுத்ததாகவே டெல்லி நினைக்கிறது. இதைவிட பிரதமர் அலுவலகம் கோபப்பட்டது, பத்திரிகை அதிபர்கள் அவமானப்படுத்தப்பட்ட விஷயத்தில்தான்!’’
‘‘அது என்ன?’’
‘‘அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் விழாவில் கலந்துகொண்ட பிறகு மீடியா நிறுவன அதிபர்களைச் சந்தித்துப் பிரதமர் பேசுவார் என்று சொல்லப்பட்டது. குறிப்பிட்ட சில பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். ஆனால், ‘இப்படி ஒரு சந்திப்பு இருக்கிறது’ என முறைப்படி பிரதமருக்குச் சொல்லவில்லையாம். ‘சும்மா ஹாய் சொல்லுங்கள்’ என்று பிரதமரிடமும், ‘உங்களோடு கலந்து பேச இருக்கிறார்’ என்று மீடியா அதிபர்களுக்கும் சொல்லப்பட்டதாம்.’’
‘‘யார் இதைச் செய்தது?’’
‘‘அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் கே.டி.ராகவனைத்தான் சொல்கிறார்கள். பிரதமர் வந்தார். இரண்டே நிமிடங்களில் எல்லோரிடமும் நலம் விசாரித்துவிட்டுப் போய்விட்டாராம். ‘இதற்காகவா இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்தீர்கள்?’ என மீடியா அதிபர்கள் செம கடுப்பு ஆகிவிட்டார்கள். இவ்வளவு முக்கியமான ஆட்களை வரவழைத்துள்ளோம் என்று பிரதமருக்குச் சொல்லப்படவில்லையாம். அதைவிடப் பெரிய பரபரப்பு, பிரதமரைச் சந்திக்க அழைப்பு கொடுக்கப்பட்டவர்களில் ஜெயா தொலைக்காட்சி சி.இ.ஓ விவேக் ஜெயராமனும் ஒருவர். ஆனால், அவர் வரவில்லை.’’
‘‘ஆச்சர்யமாக இருக்கிறதே?’’
‘‘அழைப்பு வந்தபோது விவேக் ஜெயராமனுக்கே அந்த ஆச்சர்யம்தான். ஜெயா டி.வி-யிலிருந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். ‘ஆமாம். விவேக் ஜெயராமனுக்கும் பிரதமரைச் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது’ என்றே தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் பொன்னாரும் உறுதி செய்துள்ளார். ‘மோடியைச் சந்தித்தால், தேவையில்லாத சர்ச்சைகள் எழும். குடும்பத்துக்குள்ளும் வேண்டாத குழப்பத்தை ஏற்படுத்தும். அங்கு போய், கடைசி நிமிடத்தில் மோடி சந்திக்க மறுத்தாலும் தர்மசங்கடம்’ என்று யோசித்துள்ளார் விவேக். இதையடுத்து, தான் வெளிநாட்டில் இருப்பதாகத் தகவலைக் கொடுத்து விட்டு, அந்த நிகழ்ச்சியிலிருந்து கழன்று கொண்டார். அப்போதும், ‘அவர் இந்தியாவில் தானே இருக்கிறார். ஏன் வரத் தயங்குகிறார்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து கேட்டிருக்கிறார்கள். அவர் ஏன் பிரதமரைச் சந்திக்கத் தயங்குகிறார் என்று தெரியாமல் பாதுகாப்புத்துறை அமைச்சகம் குழம்பிவிட்டது.’’
‘‘விவேக் ஜெயராமனின் பெயர் எப்படி இடம்பெற்றது?’’
‘‘பி.ஜே.பி-க்கும் தினகரனுக்கும் ஏதோ ஒரு பேச்சுவார்த்தை நடக்கிறது என்று முன்பே சொல்லியிருந்தேனே. ‘பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவது சரியானதல்ல; நான் அதை ஆதரிக்கவில்லை’ என்று தினகரன் கடந்த வாரம் குறிப்பிட்டார். இதையெல்லாம் முடிச்சுப் போட்டுப் பாரும்.’’
‘‘ஆளும்கட்சித் தலைமையுடன் மைத்ரேயனுக்கு ஏதோ மோதல் என்கிறார்களே?’’
‘‘கடந்த முறை பிரதமர் தமிழகம் வந்தபோது, விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார் மைத்ரேயன். பிரதமரும் அப்போதுத் தனிப்பட்ட முறையில் மைத்ரேயனிடம் சில நிமிடங்கள் பேசினார். மேலும், பி.ஜே.பி தரப்புடன் மைத்ரேயன் நல்ல உறவில் இருக்கிறார். இதை எல்லாம் கூட்டிக் கழித்து கணக்குப் போட்ட எடப்பாடி தரப்பு, இந்த முறை விமான நிலைய வரவேற்புப் பட்டியலில் மைத்ரேயன் பெயரை எடுத்துவிட்டார்கள். ராணுவக் கண்காட்சி அழைப்பிதழும் அவருக்குப் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். இதனால், மிகவும் அப்செட் ஆகிவிட்டார் மைத்ரேயன். அதனால்தான், சிறப்பு அழைப்பாளராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டும் அங்கு மைத்ரேயன் செல்லவில்லை. தன்னை ஓரம் கட்டுவதின் பின்னணியில் ஓ.பி.எஸ் இருப்பதாகவும் அவர் நினைக்கிறார்.’’
‘‘தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கவர்னரைச் சந்தித்தபோது என்ன நடந்ததாம்?’’
‘‘கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் தீர்மான நகலைக் கொடுத்தார். ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அவசியம் அமைக்க வேண்டும்’ என்ற பேச்சை ஸ்டாலின் ஆரம்பித்ததுமே குறுக்கிட்ட கவர்னர், ‘நான் தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்தில், மத்திய அரசு கவர்னர்கள் மாநாட்டை நடத்தியது. அதில், அப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பேசினேன்’ என்றாராம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ‘ஆளும்கட்சி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால், பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை’ என்றாராம். உடனே கவர்னர் ‘நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், நானே நேரம் வாங்கிக் கொடுத்திருப்பேனே! அதில் என்ன தயக்கம்?’ என்று சமாளித்துள்ளார். உடனே எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், ‘இனியாவது இந்தப் பிரச்னையில் பிரதமரை தமிழக நலன் சார்ந்து நடந்துகொள்ள வலியுறுத்துங்கள்’ என்றார்களாம்.’’
‘‘கவர்னர் என்ன பதில் சொன்னாராம்?’’
‘‘கவர்னர், ‘நான் ஒரு போஸ்ட்மேன். மத்திய அரசுக்குத் தகவல் தெரிவிக்கும் பணி மட்டுமே என்னுடையது. அதே நேரம் தமிழகத்தின் நலன்களிலும் அக்கறையாகவே இருக்கிறேன்’ என்று மட்டும் சொன்னாராம். ஆனால், கவர்னர் வாயிலிருந்து, ‘மத்திய அரசு நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்’ என்ற உறுதியான வார்த்தை கடைசிவரை வரவில்லை என்ற வருத்தம் அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் இருக்கிறது’’ என்ற கழுகார் பறந்தார்.