லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனம்..!

அப்பார்ட்மென்ட்களில் லிஃப்ட், ஷாப்பிங் மால்களில் எஸ்கலேட்டர் என்று படி ஏறுவதை நாம் மறந்து பல காலமாகிவிட்டது. நம்முடைய வேகத்துக்கு எஸ்கலேட்டரும், லிப்டும்தான் கால் கொடுக்கிறது என்பதுதான் நிதர்சன உண்மை.

சமீப காலங்களாக எஸ்கலேட்டரில் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. இவற்றில் பயணம் செய்யும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதைச் சிறுவன் நவீன் மரணம் உணர்த்திச் சென்றிருக்கிறது. வேடிக்கை பார்த்தவாறு முதல் தளத்திலிருந்து இரண்டாவது தளத்துக்கு எஸ்கலேட்டரில் சென்றுகொண்டிருந்த நவீனின் தோள் பை, எதிர்பாராமல் எஸ்கலேட்டரில் மாட்டிக்கொண்டுள்ளது. இதனால், இரண்டாவது தளத்திலிருந்து தரைக்குத் தூக்கி வீசப்பட்டான். சிகிச்சை அளிக்கப்பட்டும் காப்பாற்ற முடியவில்லை. லிஃப்ட் மற்றும் எக்ஸ்லேட்டர் பயன்படுத்தும்போது, எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார், ‘ஷார்ப் டெக் எலிவேட்டர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர், ராஜசேகர்.

ஆபத்து ஏற்படுவதற்கான காரணங்கள்…

* லிஃப்டில் ஆபத்து ஏற்படுவதற்கு முதல் காரணம், கவனக்குறைவு. எந்தவொரு மெஷினரியையும் 45 நாள்களுக்கு ஒருமுறை அதன் இயக்கத்தைப் பரிசோதிக்க வேண்டும். வருடத்துக்கு இரண்டு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். ஆனால், சர்வீஸ் செய்வதற்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவாகும் என்பதால், பல நிறுவனங்களும், வணிக வளாகங்களும் இதைக் கண்டுகொள்வதே இல்லை. லிஃப்ட் பார்ப்பதற்குப் புதிதாக  இருக்கும். ஆனால், அதன் இணைப்புகளில் சிறிய அளவில் பழுது இருக்கலாம். அதைக் கண்டுபிடித்து சரிசெய்யாமல், அப்படியே பயன்படுத்தும்போது பிரச்னை உண்டாகிறது. கிட்டத்தட்ட டூவீலரின் பிரேக் ஒயர் போலத்தான் இதுவும்.

* லிஃப்டைவிட எஸ்கலேட்டரில் ரிஸ்க் அதிகம். படிக்கட்டுகள் சரியாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 அல்லது 20 பேர் அதில் சென்றாலும் தாங்கும் திறன் இருக்க வேண்டும். படிக்கட்டுகளில் இருக்கும் பற்களில் ஏதாவது ஒன்று லேசாக உடைந்திருந்திருந்தாலும், சின்னப் பிள்ளைகளின் கால் விரல்கள் சிக்கிக்கொள்ளும். எஸ்கலேட்டரையும் 45 நாள்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். வருடத்துக்கு இரண்டு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். நிறுவனங்கள் இந்த விஷயத்தில் செலவுக்கு அஞ்சக்கூடாது. பரிசோதிக்கும் டெக்னீஷியன்களும் அலட்சியமாகவோ, அரைகுறையாகவோ இருக்கக் கூடாது. இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா?

எதிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

*  லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் ஏறும்போது, எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பிள்ளைகளுக்குத் தெரியாது. எனவே, குறிப்பிட்ட வயது வரை அவர்களின் கைகளைப் பிடித்தபடியே செல்லுங்கள். 

* லிஃப்ட் கதவுகள் மூடும்போது அதன் நடுவே பிள்ளைகள் கையைவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எஸ்கலேட்டர் என்றால், அதைவிட்டு இறங்கப்போகும் நேரத்தில், படிக்கட்டுகளின் பக்கவாட்டில் இருக்கும் கைப்பிடியைப் பிடித்திருக்கிறார்களா என்று கவனியுங்கள். அப்படிப் பிடித்திருக்கும்போது, எஸ்கலேட்டரிலிருந்து இறங்க முயற்சி செய்தால், நகரும் படிக்கட்டுகளின் மீதே விழுந்துவிடலாம்.

* லிஃப்டோ, எஸ்கலேட்டரோ, அதில் பிள்ளைகளுடன் ஏறும்போது முழு கவனம் அவர்களிடம் இருக்கட்டும். போனில் பேசிக்கொண்டோ, மற்றவர்களுடன் பேசியவாறே செல்வதைத் தவிர்க்கவும்.

* குழந்தைகளைத் தனியாக லிஃப்டிலும் எஸ்கலேட்டரிலும் ஏறவோ, விளையாடவோ அனுமதிக்காதீர்கள்.

* லிஃப்டில் திடீரென மின்சாரம் நின்றுவிட்டால், பதற்றமடையாதீர்கள்; கதவுகளைத் திறக்க முயற்சி செய்யாதீர்கள்.

* லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தால் காத்திருங்கள். அல்லது படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக, சினிமா தியேட்டர் இருக்கும் ஷாப்பிங் மால்களில் படம் முடிந்ததும் ஒரே நேரத்தில் பலரும் லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரைப் பயன்படுத்துவார்கள். அந்த நேரத்தில் பொறுமை மிக அவசியம். எடை அதிகம் என்பதையும் தாண்டி, கூட்டத்தில் பிள்ளைகள் மீதான கவனம் குறைந்துவிடும்.

* எஸ்கலேட்டரில் செல்லும்போது சுடிதார் துப்பட்டா புடவை ஆகியவற்றின் மீது கவனம் இருக்கட்டும். அதேபோல ஷாப்பிங் செய்த பைகளை மிகவும் தாழ்வாக தொங்கவிட்டுச் செல்லாதீர்கள்.

%d bloggers like this: