Advertisements

கவர்னரை மிரட்டும் கவர்ன்மென்ட்? – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்!

யாரை மிரட்டுவதற்காக அந்த ஆடியோ வெளியானது’ என்ற கேள்விதான் அதிகார மட்டத்தில் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலோ, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலோ முக்கியப் பதவியைக் கைப்பற்றுவதற்காக சில காரியங்களைப் பார்த்து வந்தார். அந்தப் பதவியைக் குறிவைத்து

இருக்கும் மற்றவர்கள் நிர்மலாதேவியை மாட்டிவிடுவதற்காக இந்த ஆடியோவை லீக் செய்தார்கள்’’ என்கிறது ஒரு தரப்பு. ‘‘மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசும் ஆடியோ வெளியானால் அதிகம் அவமானப்படப் போவது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித். கவர்னரை அவமானப்படுத்த வேண்டும் என்று அதிகார மட்டத்தில் இருக்கும் சிலர் நினைக்கிறார்கள். அதனால் அவர்கள்தான் பரப்பிவிட்டார்கள்’’ என்று இன்னொரு தரப்பு சொல்கிறது. மொத்தத்தில் தமிழகமே நாறிக் கொண்டிருக்கிறது.
‘‘அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டு வாருங்கள்!’’
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதத் துறையின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி. அவர் அக்கல்லூரியில் பி.எஸ்ஸி இறுதியாண்டு படிக்கும் நான்கைந்து மாணவிகளிடம் பேசும் ஆடியோ சில நாள்களுக்கு முன் வெளியானது. மேல் மட்டத்தில் இருக்கும் சிலர் எதிர்பார்க்கும் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று அந்த மாணவிகளிடம் அவர் சொல்கிறார். அதனால் கிடைக்கும் பலன்களையும் பட்டியல் போடுகிறார். அதாவது, அதிகாரத்தில் இருக்கும் சிலரை குஷிப்படுத்த இந்த மாணவிகளை அனுப்பி வைக்கும் வேலையை நிர்மலாதேவி பச்சையாகச் செய்யப் பார்த்துள்ளார்.
என்ன நோக்கத்துக்காக அந்த மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசுகிறார் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது. ‘‘இதைப் பத்தி இதுக்கு மேல பேசாதீங்க மேடம்” என்று அந்த மாணவிகள் சொல்கிறார்கள். ‘‘உங்களுக்குப் பணம் தருகிறேன், படிப்புக்கு உதவி செய்கிறேன், வேலை வாங்கித் தருகிறேன், வேலை பார்த்துக்கொண்டே படிக்கலாம்’’ என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவிடும் நிர்மலாதேவி, ‘‘இந்தக் காரியத்தை உங்கள் அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தே செய்யுங்கள்’’ என்கிறார்.
இறுதியாக அவர் சொல்வதுதான், உயர்கல்வித் துறை எத்தகைய நாற்றத்தில் இருக்கிறது என்பதற்கு உதாரணம்!

‘‘கவர்னர் … தாத்தா இல்ல!’’
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை குறிப்பிடும் விதமாக சில வரிகளை நிர்மலாதேவி பேசுகிறார். ‘‘…ரொம்ப ரொம்ப ஹையர் ஆபீசர்ஸ். கவர்னர் விழா வீடியோவை அனுப்பியிருந்தேனே… பார்த்தீங்க இல்லையா? நான் எந்த அளவுக்கு பக்கத்துல இருந்து எடுத்திருக்கேன்னு தெரிஞ்சுக்கங்க! நீங்க படிச்சு முடிச்சபிறகு, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குப் போனாக்கூட என்னால கவனிக்கமுடியும். அரசாங்கம் தொடர்பான எதுலேயும் ஓவர் கம் பண்ணி வரமுடியும்… புரிஞ்சுக்கங்க’’ என்கிற ரீதியில் சொல்லிவிட்டு திடீரென்று, ‘‘கவர்னர்… தாத்தா இல்ல’’ என்கிறார். இந்த வார்த்தைகளிலேயே அவரது நோக்கமும் அதன் பின்னால் இருக்கும் ஆபாசமும் வெட்டவெளிச்சம் ஆகிவிடுகிறது. ஆடியோவில் பேசி இருப்பது நான்தான் என்று நிர்மலாதேவி ஒப்புக்கொண்டு விட்டார். ‘ஆனால், அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று சமாளித்து வருகிறார்.
வெளியிட்டது யார்?
‘‘கவர்னர் மாளிகையில் சமீபகாலமாக செய்யப்பட்டு வரும் சில மாற்றங்களின் மூலமாகப் பாதிக்கப்பட்ட சிலர் இந்த ஆடியோவை வெளியிட்டு விட்டார்கள்’’ என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், இன்னொரு தகவல்தான் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. ‘‘இன்றைய ஆளும்கட்சிக்கும் கவர்னருக்கும் கடந்த ஒரு மாத காலமாக மோதல் நடக்கிறது. தமிழக அரசு மட்டத்தில் நடக்கும் பல முறைகேடுகளையும் அப்படியே டெல்லிக்குச் சொல்லிவிடும் மனிதராக பன்வாரிலால் இருக்கிறார். அவரை மாட்டிவிடுவதற்கு நேரம் பார்த்தார்கள். அந்த நேரத்தில் இப்படி ஓர் ஆடியோ சிக்கியது. அதை ஆளும்கட்சியினர்தான் போலீஸ் பின்னணியுடன் லீக் செய்தார்கள்’’ என்று சொல்லி அதிர வைக்கிறார்கள் சிலர்.
‘‘நிர்மலாதேவியை மிரட்டுவதற்காக ஆடியோவை லீக் செய்திருந்தால் கட் செய்யவோ ம்யூட் செய்யவோ மாட்டார்கள். அரசியல்ரீதியான பின்னணி உள்ளவர்கள் கையில் இந்த ஆடியோ சிக்கியதால்தான் முக்கியமான சொற்களை ம்யூட் செய்துள்ளார்கள். கவர்னரைப் பற்றிய விஷயங்கள் அப்படியே இருக்குமாறு கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்’’ என்றும் சொல்லப்படுகிறது.
கவர்னர் – அரசு மோதல் ஏன்?
கவர்னராக பன்வாரிலால் புரோஹித் வந்ததிலிருந்தே ஆளும்கட்சிக்கும் அவருக்கும் ஆகவில்லை. ‘நமக்கு மோடி தயவு இருக்கிறது” என்று கவர்னரைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆளும்கட்சி இருந்தது. ஆனால், கவர்னர் அப்படி நினைக்கவில்லை. நிர்வாக விஷயங்களில் தலையிடத் தொடங்கினார். ஊர் ஊராகக் கிளம்பினார். தன்னிடம் அனுப்பி வைக்கப்பட்ட கோப்புகள் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்டார். அடிக்கடி தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரை அழைத்து விசாரணை செய்தார்.  தலைமைச் செயலகத்தை பைபாஸ் செய்து, கவர்னர் மாளிகையிலிருந்தே  பல மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவுகள் பறந்தன. ‘மாநில அரசின்மீது மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. இவர்கள்மீது அதிகமான ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது’ என மத்திய அரசுக்குப் புகார் சொன்னார். சில பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசின் பரிந்துரைகளைக் கேட்கவில்லை. சமீபத்தில் நடந்த காவிரி போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு எதுவும் செய்யவில்லை என்று அறிக்கை கொடுத்தார். மத்திய அரசு இதனால் கோபமானது. ‘‘அவர்களது ஆட்சி மே மாதம் வரைக்கும்தான்” என்கிறரீதியில் மத்திய அரசும் சொல்லிவிட்டதாக கவர்னர் இங்கு வந்து சொன்னார். இன்னொரு பக்கம் கவர்னரின் செயலாளர் ராஜகோபால், தான் ஒரு தலைமைச் செயலாளர் போல நினைத்துக்கொண்டு எல்லா அதிகாரிகளிடமும் அதிரடியாகப் பேசினார். ‘‘இதனால் கவர்னர்மீது கடுமையான கோபத்துடன் மாநில அரசு இருந்த நேரத்தில் இப்படி ஒரு ஆடியோ கிடைக்க, அதை ஆர்வமாக ரிலீஸ் செய்து விட்டார்கள்’’ என்கிறார்கள்!
இதன் தொடர்ச்சியாக, கவர்னர் இனி எங்கும் ஆய்வுக்குப் போகாமல் ராஜ்பவனுக்குள்ளேயே முடக்கி வைக்கப்படலாம். ஒருவேளை அதைமீறி எங்காவது போனால், ‘சர்ச்சை புகாரில் சிக்கிய கவர்னரே, திரும்பிப் போ’ என சில அமைப்புகள் போராட்டம் நடத்தும். கவர்ன்மென்ட் இப்படி எல்லா ஆயுதங்களையும் சேகரித்துக்கொண்டு கவர்னரை மிரட்டுகிறது.
இன்னொரு பக்கம், ‘கவர்னரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழக அரசியல் இப்படிப்பட்ட சர்ச்சையில் சிக்குவது இதுதான் முதல் தடவை.


கவர்னர் விழாவில் இருந்தாரா?
ப்ரல் 16-ம் தேதி இந்த விவகாரம் பரபரப்பாகப் பரவிய நேரத்தில், கல்லூரிமுன் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினார்கள். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி வழக்கறிஞர் நிர்மலாராணி, ‘‘இதுவரை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் புரோக்கர்கள் ஒரு மாதிரியான தோற்றத்தில் இருப்பார்கள் என்று சொல்லப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பேராசிரியர் தோற்றத்திலும் இருப்பார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இக்கல்லூரியில் மிகவும் ஏழ்மையான கிராமப்புற மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி இப்படிப் புதைகுழியில் தள்ள இந்த பேராசிரியர் நினைத்துள்ளார். அதிலும் தான் கவர்னர், பெரிய அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கம் என்று அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார். இதுபோல வெளியே தெரியாமல் பல கல்லூரிகளில் பெண்களுக்கு எதிராகக் கொடுமைகள் நடந்து வருகின்றன. நிர்மலாதேவிமீதும், அவருக்கு  உதவியாக இருந்தவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
கல்லூரி மாணவிகளிடம் நிர்மலாதேவியைப் பற்றி விசாரித்தோம், ‘‘அவங்க கணவரைப் பிரிஞ்சு தனியா இருக்காங்க. 10 வருஷமா இங்க வேலை பார்க்கிறாங்க. உதவிப் பேராசிரியராக இருந்தாலும், பிரின்சிபல் மாதிரியே நடந்து கொள்வார். வி.ஐ.பி-க்களுடன் அவர் இருக்கும் படங்களை செல்போனிலிருந்து காட்டி, ‘எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும்’ என்று பேசுவார்’’ என்றனர்.
புத்துணர்வு வகுப்புக்காக மார்ச் ஒன்பதாம் தேதியிலிருந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தார் நிர்மலாதேவி. அந்த நேரத்தில்தான் இந்த ஆடியோ பேச்சு பேசப்பட்டுள்ளது. மார்ச் 15-ம் தேதி அவர் பேசியிருக்கிறார். இடையில் மார்ச் 13-ம் தேதி தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதற்கு கவர்னர் புரோஹித் வந்திருந்தார். அந்த விழாவின்போது நிர்மலாதேவி என்ன செய்தார் என இப்போது ரகசிய விசாரணை நடக்கிறது.
நிர்மலாதேவி இப்போது சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளார். அவர்மீது துறைரீதியாக விசாரணையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏப்ரல் 16-ம் தேதி இரவு, நிர்மலாதேவி வீட்டு வாசலில் காத்திருந்த மீடியாவினரை ஏமாற்றிவிட்டு, சாமர்த்தியமாக அவரைக் கைது செய்தது போலீஸ். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளார் கவர்னர் புரோஹித். போலீஸ் விசாரணை நடக்கும்போது, எதிர்க்கட்சிகள் சி.பி.ஐ விசாரணை கேட்கும்போது, இப்படி ஒரு விசாரணையை கவர்னர் அவசரமாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements
%d bloggers like this: