புதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்?

மத்திய பட்ஜெட் 2018-ல் அடிப்படை வருமான வரி வரம்பு அதிகரிக்கப்படவில்லை. ஆனால், வருமான வரி விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், சில வரிதாரர்களுக்குச் சாதகமாகவும் சில பாதகமாகவும் இருக்கின்றன.

என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

   நிலைக் கழிவு


பட்ஜெட் 2018-19-ல் நிலைக் கழிவு (Standard deduction) மீண்டும் கொண்டு வரப்பட்டு அதன் உச்ச வரம்பு ரூ.40,000 என  அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், போக்குவரத்துப்படி ரூ.19,200 மற்றும் மருத்துவச் செலவு ரூ.15,000 விலக்கிக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில், ஏற்கெனவே, போக்குவரத்துப்படி, மருத்துவச் செலவு சலுகை பெற்று வருபவர்களுக்குப் புதிய சலுகை மூலம், வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5,800 மட்டுமே குறையும். ஒருவரின் அடிப்படை வரி வரம்புக்கு ஏற்ப, வரி மிச்சமாகும். இந்தச் சலுகை பென்ஷன்தாரர்களுக்கும் உண்டு.
இந்த நிலைக் கழிவு, வரிச் சலுகைக்கான தொகையை நேரடியாகச் சம்பளத்திலிருந்து கழித்துக்கொள்ளலாம். இந்தச் செலவுகளுக்கான ஆதாரங்கள் மற்றும் ரசீதுகள் (Proof/Bills) கொடுக்கத் தேவையில்லை.
   ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வை
கல்வித் தீர்வை 3 சதவிகிதம் என்பது ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வை என மாற்றப்பட்டு 3 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், வரிக்குச் செல்லும் தொகை சிறிது அதிகரிக்கும். இதனையடுத்து, 5%, 20% மற்றும் 30 சதவிகித வருமான வரம்பில் வருபவர்கள், 5.2%, 20.8% மற்றும் 31.2% வரி செலுத்த வேண்டும்.
   மூத்த குடிமக்களுக்கு வரிச் சலுகைகள்
பொதுப் பிரிவினருக்கு வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்.டி),   தொடர் வைப்பு (ஆர்.டி) வட்டி எல்லாம் சேர்ந்து ஓராண்டில் ரூ.10,000 வரிச் சலுகை அனுமதிக்கப் படுகிறது. மூத்த குடிமக்களுக்கு (section 80TTB) இது ரூ.50,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு டி.டி.எஸ் என்கிற மூலத்தில் வரிப் பிடித்தமும்  இருக்காது.
மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேல் 80 வயது வரை) ஹெல்த் இன்ஷூரன்ஸ் (பிரிவு 80டி) பிரீமியத் தொகையில் வரிச் சலுகை 30,000 ரூபாயிலிருந்து ரூ.50,000-ஆக அதிகரிப்பட்டுள்ளது.
மிகவும் மூத்த குடிமக்களுக்கு (80 வயதுக்கு மேல்) பொதுவான மருத்துவச் செலவுகளுக்கு ஓராண்டில் ரூ.50,000 வரிச் சலுகை அளிக்கப் படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு குறிப்பிட்ட நோய்களுக்கான (Specified Critical Illnesses) மருத்துவச் செலவுகளுக்கு, வரித் தள்ளுபடி ரூ.60,000-லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
மிகவும் மூத்த குடிமக்களுக்கு குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கு, வரித் தள்ளுபடி ரூ.80,000-லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி பென்ஷன் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.7.5 லட்சத்திலிருந்து இரு மடங்காக ரூ.15 லட்சம் என  அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் மொத்தமாகக் கணக்கில் எடுத்துக்கொண்டால், மூத்த குடிமக்கள்/ மிகவும் மூத்த குடிமக்களுக்கு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சத்துக்கு கூடுதல் வரித் தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம் 5%, 20% மற்றும்  30% வருமான வரி வரம்பில் உள்ளவர்களுக்கு, முறையே  ரூ.7,500, ரூ.20,000 மற்றும் ரூ.45,000 வரி மிச்சமாகும்.
   என்.பி.எஸ் வரியில்லா முதிர்வுத் தொகை
நேஷனல் பென்ஷன் சிஸ்டத்தில் (என்.பி.எஸ்.)  முதலீடு செய்துள்ள சம்பளதாரர்களுக்கு  முதிர்வு அல்லது கணக்கை ரத்து செய்யும்போது, மொத்தத் தொகையில் 40% வரிச் சலுகை  அளிக்கப்பட்டது.
இந்தச் சலுகை இப்போது சுய தொழில் செய்பவர்களுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுயதொழில் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் அதிகமாக முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
   மூலதன ஆதாய பாண்டுகள்
ரியல் எஸ்டேட் சொத்துகளை வாங்கி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விற்பது மூலமான ஆதாயத்தை, சிறப்பு வகை பாண்டுகளில் (பிரிவு 54EC) முதலீடு செய்வதன் மூலம் வரிச் சலுகை பெறலாம்.
இந்த பாண்டுகளின் முதிர்வுக் காலம் மூன்று ஆண்டுகள் என இருந்தது. இது ஐந்தாண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் அரசுக்கு லாபம் என்றாலும் வரிதாரருக்கு லாபமில்லை.
   ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் : புதிய வரிகள்
பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% மற்றும் டிவிடெண்ட் விநியோக வரி 10% கொண்டு வரப்பட்டுள்ளது. (பார்க்க பெட்டிச் செய்தி)
புதிய வரி விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு, வரியைச் சேமிக்க இன்றே நடவடிக்கையில் இறங்குங்கள்.

%d bloggers like this: