இந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…

அகந்தை அறு

ஈகோ என்று நாம் பரவலாக அறியும் வார்த்தையும் தமிழ் சொல்லே அகந்தை. இப்படி ஒரு வார்த்தை இருக்கிறது என்பதே சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த வார்த்தயை மறந்ததை காட்டிலும், இந்த வார்த்தையின் பொருளும், அதன் தன்மையும் நாம் மறக்க வேண்டும், மனதில் இருந்து அழிக்க வேண்டும் என்பதே முக்கியம்.

தொழிலாக இருக்கட்டும், உறவாக இருக்கட்டும் எதிலும் உயர்வை தடுத்து நம்மை ஒரே நிலையில் அடைப்பட செய்வது இந்த அகந்தை தான். இந்த அகந்தையின்

வெளிப்பாட்டால் நாமும் வளரப் போவதில்லை, நம்மை சுற்றி இருப்பவரையும் நாம் வளரவிட போவதில்லை. இந்த அகந்தை காரணமாகவே ஒருவர் மனதில் கோபம், பொறாமை போன்றவை வளர்கின்றன. அகந்தை மூலம் பிறக்கும் இவை இரண்டும் உறவையும், நல்ல நட்பையும் கொல்லும் கருவிகளே!

எனவே, அகந்தை அறுத்தெறிவோம், நல்வாழ்க்கை பெறுவோம், உறவுகளை வளர்ப்போம்.

ஆற்றல் பெருக்கு

ஒரு மனிதனிடம் நிலம் அதிகம் இருக்கிறதா? பொன் அதிகம் இருக்கிறதா? பொருள் அதிகம் இருக்கிறதா? பணம் அதிகம் இருக்கிறதா? என்பதை காட்டிலும், அவனிடம் ஆற்றமல் அதிகம் இருக்கிறதா? என்பது தான் அவசியம்.

இவை அனைத்தும் இருந்தும் ஆற்றல் இல்லை எனில், ஒரு கட்டத்தில் இவை அனைத்தையும் அவன் இழந்துவிடுவான். இவை எதுவும் இல்லை எனிலும் கூட, ஆற்றல் மட்டும் இருந்தால் போதும், ஒரு நாள் இதர அனைத்தையும் அவன் சம்பாதித்து விடுவான். ஆற்றல் இன்றி இருப்பதும், ஒரு ஊரில் மக்கள் ஆறு இன்றி இருப்பதும் ஒன்றே.

ஆற்றல் பெருக்குவோம், உழைத்து உயர்வோம்.

இகழ்வதை நிறுத்து

இகழ்ச்சி… ஒரு நோய்! யாரை கண்டாலும், எதற்கு எடுத்தாலும் நீ என்னை விட தாழ்ந்தவன், நான் உன்னை விட உயர்ந்தவன் என்ற மனப்பான்மை கொண்டு மற்றவரை இகழ்வது என்பது எந்த மனிதரிடமும் வந்துவிட கூடாத பெரும் நோயாகும்.

நாம் நமக்கு கீழே இருப்பவர்கள் என்று கருதும் மக்களின் உழைப்பு இன்றி நல்ல உடை உடுத்த முடியாது, நல்ல உணவு உண்ண முடியாது, நல்ல சுகாதாரமான வாழ்க்கை வாழ முடியாது. ஒருவரின் மனதில் ஏற்றத்தாழ்வு எண்ணத்தை விதைப்பது இந்த இகழும் மனப்பான்மை தான்.

இகழ்வதை நிறுத்துவோம், மகிழ்ச்சியுடன் அனைவரையும் அரவணைத்து வாழ்வோம்.

ஈகை கொள்

அகந்தை போலவே எத்தனை பேருக்கு ஈகை என்ற சொல்லுக்கு பொருள் தெரியுமென அறியவில்லை. ஈகை என்பது கொடை, கருணை, தானம் தரும் தன்மை என்று கொள்ளலாம். தனக்கு மிஞ்சியது தான் தானமும் தரமும் என்பார்கள். ஆனால், தனக்கு மிஞ்சி ஏழேழு தலைமுறைக்கு சொத்து இருந்தாலும், மீண்டும், மீண்டும் கொளையடித்து சேர்க்கும் குணம் இருக்கிறதே அது ஒரு பாவ மூட்டை.

தானம் என்பது பொருளாக மட்டும் அளிப்பதல்ல, பணமா வாங்காமல் செய்யும் ஒரு சிறு உதவி கூட தானம் தான். இரத்த தானம் செய்கிறேன் என்று கூறிவிட்டு அதற்கு பணம் வாங்குவது எப்படி தானமாகவும். அப்படியாக தான் ஈகை குணம் பணக்காரர்களை காட்டிலும் ஏழைகளிடம் அதிகம் இருக்கிறது.

ஈகை உங்களை ஒரு போதும் சோர்வடைய செய்யாது, மனம்தளர விடாது.

ஊன் உழைத்து உண்

இன்று நம்முள் பெரும்பாலான உடல்நலக் கோளாறுகள் இருக்க, பெருக காரணம் நாம் அதிக நேரம் வேலை செய்கிறோம், அதே அளவு சாப்பிடுகிறோம், அதிகமாக சம்பாதிக்கிறோம். இவற்றில் எங்கே நமது உழைப்பு பெருகியது முக்கியமாக ஊன் உழைப்பு. உடல் உழைப்பு இல்லாத வேலை மனித சமூகத்திற்கு அவசியமற்றது. அது எங்கோ உலகில் இருக்கும் ஒருவனை செல்வந்தனாக்கி, உன்னை அடிமையாக்கி, முன்னேற்றம் என்ற பெயரில் பலரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஊன் உழைப்பு இன்று அதிகம் உண்பதே நோய் பெருக காரணம்.

எண்ணம் நேர் செய்

உடல் ஆரோக்கியமாக இருக்க ஊன் உழைத்து உண் என்றோம், மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் எண்ணம் நேர் செய்ய வேண்டும். எதையும் சுயநலம் இன்றி சிந்திக்க வேண்டும். எனக்கு லாபம் வந்தால் போதும், யார் ஏமார்ந்து போனால் நமக்கென்ன என்ற எண்ணம் கூடாது. நேற்று உழைப்பை திருடினார்கள், இன்று ஒருவனின் அறிவையும், அவனது திறனையும் திருடுகிறார்கள். நாளை ஒருவனது ஆயிளும் திருடப்படும். இதற்கு எல்லாம் காரணம் எண்ணம் கோணலாக இருப்பதும்,, எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி வாழலாம் என்ற சிந்தனையும் தான்.

எண்ணம் நேர் செய்தால், வாழ்க்கையும் நேரான பாதையில் பயணிக்கும்.

ஏன், எதற்கு கேள்

அது வேலையாக இருக்கட்டும், எதுவாக இருக்கட்டும் ஒரு விஷயத்தை செய்வதற்கு முன் அதை ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம், அதன் தாக்கம் என்பதை கேட்டறிந்து செய். நீ செய்வது எவ்வளவு பெரிய நன்மை அல்லது தீமை என்பதை அது உனக்கு உணர்த்தும். மூளை தவறுகளை ஏற்கலாம். ஆனால், மனம் ஏற்காது. இது தனிப்பட்ட வாழ்க்கையை கடந்து பொது வாழ்வில் அதிகமாக இருக்க வேண்டும்.

ஒரு அரசியல்வாதி இலவசம் தருகிறேன் என்று கூறினால், எப்படி சாத்தியம், எப்படி வருமானம் ஈட்டுவாய், எதற்கு இலவசம் தருகிறாய் என்று நாம் கேட்டிருந்தால், இன்று பொம்மலாட்ட ஆட்சியின் கீழ் கேலி சித்தரமாகி இருக்க மாட்டோம்.

ஐயம் விடு

அச்சம் உன்னை மட்டுமல்ல, உன்னை சார்ந்து இருப்பவர்களையும் கொல்லும். கெட்டது செய்ய தான் அச்சப்பட வேண்டும். நல்லதை செய்யவோ, கெட்டதை எதிர்க்கவோ அச்சம் தேவையில்லை. அச்சப்படாமல் இருந்திருந்தால் நட்டு நடுரோட்டில் ஒரு ஆனவக்கொலை சர்வசாதாரணமாக நடந்திருக்காது. எத்தனையோ பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்திருக்காது. இன்று எட்டு வயது, ஏழு வயது சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள்.

ஒருவரிடம் எத்தனை பெரிய அறிவு இருந்தாலும், அவன் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், அவன் பெரும் செல்வந்தனாக இருந்தாலும், அவனிடம் அச்சம் இருந்தால், அவை அனைத்தும் வீண்.

ஒப்பீடு ஒழி

ஒருவரின் வளர்ச்சியை தடுப்பது ஒப்பீடு. பள்ளியில் முதல் புள்ளி வாங்கும் மாணவனுடன் கடைசி புள்ளி பெரும் மாணவனை ஆசான் ஒப்பிடுகிறார். ஒருவேளை அவர்கள் இருவருக்கும் நடுவே ஓட்டப்பந்தயம் அல்லது கால்பந்தாட்டம் வைத்திருந்தால் அந்த கடைசி மதிப்பெண் பெற்ற மாணவன் முதலாவதாகவும், முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் கடைசியாகவும் கூட வந்திருக்கலாம்.

இங்கே முதல், கடைசி என்று வகை பிரிக்க மதிப்பெண் மட்டுமே முன்வைக்கப்படுகிறதே தவிர, அவர்கள் எதில் சிறந்து இயங்குகிறார்கள் என்பதை யாரும் கணிப்பது இல்லை. ஒப்பீடு பலரது திறமையை குழிதோண்டி புதைத்து விடுகிறது.

ஓட்டம் பயில்

ஓட்டம், ஓட்டப்பயிற்சி பயில். மற்ற அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும், ஓடுதல் பயிற்சி தான் உடலின் அனைத்து தசைகளும் இயங்க செய்கிறது. இதனை மூலம் உடலின் அத்தனை தசைகளும் வலிமை பெறுகின்றன. தினமும் ஓடுதல் பயிற்சி மேற்கொள்வதால் இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், கொழுப்பு கரைதல், உடல் தகுதி மேலோங்குதல் என உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது.

எனவே, ஓட்டம் பயில மறக்க வேண்டாம்.

ஔரப்பிரகம் ஆகாதே!

ஔரப்பிரகம் என்பதன் பொருள் ஆட்டுமந்தை எனப்படுகிறது. அன்று மட்டுமல்ல, இன்றும் நாம் ஒரு ஆட்டு மந்தையாக தான் இருந்து வருகிறோம். பிஎஹ்டி படித்த ஒருவனும் கூட ஃபேஸ்புக்கில் மேகத்தில் இயேசு, சிவன் தோன்றினார், இந்த படத்தை பகிர்ந்தால் நல்லது நடக்கும், லைக் செய்தால் வரம் கிடைக்கும் என்று கூறினால் கண்ணை மூடிக் கொண்டு செய்கிறோம். நாம் ஆட்டு மந்தை தானே.

இதில் மட்டுமா, ஒருவர் கூறும் கருத்தில் இருந்து… தலைவனாகவே ஏற்றாலும் ஒரு பிரச்சனையில் அவர் எடுக்கும் முயற்சி சரியா, தவறா என்பதில் ஆராயாமல் இருப்பது வரை நாம் அனைத்திலும் ஆட்டு மந்தையாக தான் இருக்கிறோம். என்று நாம் ஆட்டு மந்தியாக அல்லாமல், சுய சிந்தனை பெறுகிறோமோ அன்று தான் வாழ்வில் முன்னேறுவோம்.

<span>%d</span> bloggers like this: