கவர்னருக்கு கல்தா? – தமிழக அரசை மிரட்டிய டெல்லி!

நிர்மலாதேவி – கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே… பார்த்தீர்களா?’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம். 

‘‘கவர்னர் மாளிகையைச் சூழ்ந்திருக்கும் நிர்மலாதேவி சர்ச்சையில், பல ஆதாரங்களையும் ஆவணங்களையும் தமிழக அரசு எடுத்து வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். நிர்மலாதேவி பேசிய ஆடியோ கசியத் தொடங்கிய மார்ச் முதல் வாரத்திலேயே, அவருடைய போன் உரையாடல்கள், எதிர்முனையில் பேசியவர்களின் விவரங்கள், யார் யாருடன் எவ்வளவு நேரம் பேசினார் என்ற கணக்கு என அனைத்தையும் ரகசியமாக அள்ளி பத்திரப்படுத்திவிட்டது மாநில உளவுத்துறை. அதனால், இந்த விவகாரம் வெடிக்கப்போகிறது என்பதையும், வில்லங்கமாகப் போகிறது என்பதையும் கவர்னர் மாளிகையும் மோப்பம் பிடிக்கவில்லை; மத்திய உளவுத்துறையும் கொஞ்சம் கோட்டை விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்’’
‘‘அப்புறமும் ஏன் மாநில அரசு அமைதியாக இருக்கிறது?’’
‘‘உள்ளங்கையை மூடியே வைத்திருக்கும்வரை தான், ‘உள்ளே என்ன இருக்கிறதோ’ என்ற பீதியில் எதிர்த் தரப்பு இருக்கும். அதைச் சட்டென திறந்து காட்டினால், ஒன்றுமில்லாமல் போகவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த விளையாட்டைத் தான் தற்போது தமிழக அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. ஆதாரத்தைக் காட்டிச் சிக்க வைப்பது ஒரு விஷயமே அல்ல. ஆனால், ஆட்டம் அதோடு முடிந்துவிடும்; அதில் யாருக்குப் பலன்? எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கும்போது, அதைப் பற்றியே செய்திகள் சுற்றிச் சுற்றி வந்து, பெயர் நாறிக் கொண்டிருக்கும். அதுதான் தமிழக அரசுக்கு வெற்றி. அதுவே போதும் என ஆளும்கட்சி நினைக்கிறது.’’

‘‘நிர்மலாதேவி வழக்கைத் தமிழக அரசு அவசரமாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குத் மாற்றியுள்ளதே?’’
‘‘எதிர்க்கட்சிகள் இதில் சி.பி.ஐ விசாரணை கேட்டன. சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு. ஏப்ரல் 18-ம் தேதி அமைச்சர் ஜெயக்குமார், ‘சி.பி.ஐ-க்கு இணையானது சி.பி.சி.ஐ.டி’ என்று புன்சிரிப்புடன் பேட்டி கொடுத்தார். ஆனால், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதை, டெல்லி ரசிக்கவில்லை என்றே சொல்கிறார்கள். ‘யாரைக் கேட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டீர்கள்?’ என்று  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை டெல்லியிலிருந்து கேள்விக்கணைகளால் துளைத்தார்களாம்!’’
‘‘ஏன்? சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறதே!’’
‘‘அதைத்தான் தலைமைச் செயலாளரும் டெல்லிக்குச் சொல்லியிருக்கிறார். ‘சர்ச்சைக்குரிய வழக்குகளை இப்படி மாற்றுவது வழக்கம்தான்’ என்றிருக்கிறார். ஆனால், ‘இந்த வழக்கின் சர்ச்சை கவர்னர் மாளிகையைச் சுற்றிக் கொண்டிருக்கிறதே… எங்களைக் கேட்க வேண்டாமா?’ என்று மிரட்டலாகக் கேள்வி வந்ததாம். ‘கவர்னரை மிரட்ட நினைக்கிறீர்களா’ என்பதுதான் அவர்களது கோபத்துக்குக் காரணமாம்!’’
‘‘அடடா!’’
‘‘அடுத்ததாக டெல்லி போட்ட உத்தரவால்தான், போலீஸ் அதிகாரிகள் ட்ரான்ஸ்ஃபர் நிகழ்ந்தது. சி.பி.சி.ஐ.டி பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக இருந்த ஜெயந்த் முரளியை மாற்றிவிட்டு, உடனே அந்த இடத்துக்கு குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி-யான அம்ரேஷ் பூஜாரியை நியமிக்கும்படி டெல்லி யிலிருந்து உத்தரவு வந்தது. சில மணி நேரங்களில் அதைச் செய்துமுடித்துவிட்டார்கள். தனியாகச் செய்தால் சர்ச்சை எழும் என ஐந்து பேரை ட்ரான்ஸ்ஃபர் செய்தார்கள். ‘அம்ரேஷ் பூஜாரியாக இருந்தால், விசாரணையை நம் நோக்கத்துக்கு மாற்றலாம்’ என்றும் நினைத்துத் தான் இந்தப் பணிமாறுதல் செய்யப்பட்டதாம்.  இதில், தங்களுக்கு வேண்டிய ஒன்றையும் செய்துகொண்டார்கள், தமிழக ஆட்சியாளர்கள்.’’
‘‘என்ன அது?’’
‘‘லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.ஜி.பி-யான மஞ்சுநாதாவின் பணி மாறுதல்தான் அது. காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவுக்கு அவர் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். 2017 மார்ச் மாதம்தான் அவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தார். சில அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்தார். குறிப்பாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தியவர் மஞ்சுநாதா. முன்னாள் துணைவேந்தர்கள் வணங்காமுடி, ராஜாராம் ஆகியோர்மீது வழக்குகளைப் பதிவு செய்தவர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கையும் களவுமாகப் பிடிபட ஸ்கெட்ச் போட்டவர் இவர்தான். மஞ்சுநாதா இந்தத் துறைக்கு வந்த பிறகு, 50-க்கும் மேற்பட்ட ரெய்டுகள் நடந்துள்ளன. சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்ட பெரிய கைகள் சம்பந்தப்பட்ட குட்கா விவகாரத்தைக் கிளற முயற்சி செய்ததால் மஞ்சுநாதா தூக்கியடிக்கப் பட்டதாகச் சொல்கிறார்கள்.’’
‘‘அடப் பாவமே!’’
‘‘லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆணையராக இருந்த ஜெயக்கொடியை, பதவிக்கு வந்த ஆறே மாதங்களில் மாற்றிவிட்டு மோகன் பியாரேவை நியமித்தது தமிழக அரசு. குட்கா விவகாரம் புதைக்கப்படும்வரை, லஞ்ச ஒழிப்புத் துறையில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் எந்த அதிகாரி வந்தாலும் பிரச்னைதான். ‘இத்தனை நாள் மஞ்சுநாதா இருந்ததே பெரிய அதிசயம்’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்’’ என்ற கழுகாரை, மீண்டும் கவர்னர் மேட்டருக்குத் திருப்பினோம்.
‘‘கவர்னரின் அறையில் சமீபத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாமே?’’ என்றோம்.
‘‘கவர்னர் மாளிகை பணியாளர்கள் பெயரில் ஒரு புகார்க் கடிதம் சமீபத்தில் டெல்லிக்குப் போனது. அந்தக் கடிதத்தின் நகல், பி.ஜே.பி-யின் டாப் வி.ஐ.பி-க்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. டெல்லி சென்ற கவர்னர் புரோஹித்திடம் இது சம்பந்தமாகக் கேட்டதாகவும் சொல்கிறார்கள். இதையடுத்து சென்னை வந்ததும் அவர், தன் அறையை ஆய்வு செய்துள்ளார். அங்கு ஏதாவது பதிவுசெய்யும் கருவிகள் உள்ளனவா என்று சோதனை நடந்ததாகக் கூறுகிறார்கள். இதையடுத்து, கவர்னரின் படுக்கை அறை மற்றும் அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் சில அறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிய ஃபர்னீச்சர்கள் சிலவற்றையும் கவர்னர் மாளிகைக்குள் கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால், படுக்கை அறையில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு ‘வாஸ்து’ என்று காரணம் சொன்னார்கள்.’’
‘‘புதிதாகப் பொறுப்பு ஏற்பவர்கள் தங்களது ‘டேஸ்ட்’க்கு ஏற்றமாதிரி மாறுதல் செய்வது இயற்கைதானே?”
‘‘கவர்னராக புரோஹித் பதவியேற்றபோது, ‘தரையில் படுத்துத்தான் தூங்குகிறார், சைவ உணவை மட்டுமே கவர்னர் மாளிகைக்குள் அனுமதிக்கிறார்’ என்றெல்லாம் தகவல்கள் பரப்பப்பட்டன. ‘தரையில் படுத்து உறங்கும் கவர்னரின் படுக்கை அறையை, எதற்காக அடியோடு மாற்ற வேண்டும்’ என்ற கேள்வியை நக்கலாக எழுப்புகிறார்கள் கவர்னர் மாளிகை ஊழியர்கள். மேலும், தற்போது சிக்கலில் மாட்டியிருக்கும் நிர்மலாதேவி இரண்டு முறை சென்னைக்கு விசிட் அடித்துள்ளதற்கான ஆதாரங்களைத் தோண்டிவருகிறது கவர்னருக்கு எதிரான டீம் ஒன்று. இந்தச் சம்பவங்களை யெல்லாம், தங்களுக்கு வந்த புகார்க் கடிதத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்க்க ஆரம்பித்துவிட்டது டெல்லி.’’

‘‘அப்படியா?’’
‘‘மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையை டெல்லிக்கு அழைத்து, சில விஷயங்களை விளக்கமாகக் கேட்டு அறிந்துகொண்டுள்ளார். இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னையில் உள்ள ஐ.பி உயரதிகாரி வர்மாவிடம் பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். இவர்களின் ஸ்டேட்மென்ட்களை வைத்து, சில கேள்விகளை கவர்னரிடம் கேட்டுள்ளனர். சென்னையில் உள்ள ஐ.பி உயரதிகாரி வர்மா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் ஆலோசனை செய்யாமல் கவர்னர் புரோஹித், நிருபர்களைச் சந்தித்ததாகவும் சொல்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் டென்ஷனாகி விட்டார்களாம். ‘டெல்லி    பி.ஜே.பி-யில் புரோஹித்துக்கு ஆகாத கோஷ்டியும் ஒன்று இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் செல்வாக்குடன் வலம் வரும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு புரோஹித்தைப் பிடிக்காது. புரோஹித் தொடர்பான பல சர்ச்சைகளை ஊதிப் பெரிதாக்கியதில் அந்த கோஷ்டிக்கு கணிசமான பங்கு உண்டு. எல்லாவற்றையும் தாண்டி பிரதமர் மோடியின் ஆதரவுக்கரம் புரோஹித்தைக் காப்பாற்றிவந்தது’ என்கிறார்கள் டெல்லியில்!’’
‘‘இனி நடவடிக்கைகள் பாயுமோ?”
‘‘நிர்மலாதேவி விவகாரத்துக்கு விளக்கம் கொடுப்பதற்காக நடத்திய பிரஸ் மீட்டில் பெண் நிருபர் லக்ஷ்மி சுப்பிரமணியனின் கன்னத்தைத் தட்டி அடுத்த சிக்கலில் மாட்டிக் கொண்டார் கவர்னர். இந்த விவகாரமும் டெல்லி பறந்துள்ளது. கவர்னர் மாளிகை வாசலில் அடுத்தடுத்து நடந்த போராட்டங்களைத் தொடந்து கவர்னருக்கு கல்தா கொடுக்க முடிவெடுத்துவிட்டார்களாம். ‘மே மாதத்துக்கு பிறகு இவரை வைத்துத்தான் ஆட்சியை நேரடியாக நடத்த திட்டமிட்டோம். அதற்குள் இவர் இவ்வளவு கெட்ட பெயர் சம்பாதித்து விட்டார். வேறு ஒருவரை வைத்துத்தான் இனி நமது நகர்வுகளைச் செய்ய முடியும்’ என்று இப்போதே டெல்லியில் பேச ஆரம்பித்து விட்டார்களாம். இன்னொரு தரப்போ,  ‘மதுரை காமராசர் பல்கலைக்கழக அதிகாரிகள் இரண்டு பேரை மட்டும்  முக்கியக் குற்றவாளி ஆக்கி விவகாரத்தை முடித்து விடலாம்’ என்று சொல்கிறதாம். ‘கவர்னரை வேறு மாநிலத்துக்கு மாற்றலாமா, அல்லது ராஜினாமா செய்ய வைக்கலாமா’ என்று பிரதம ரிடம் கேட்கப்பட்டதாகவும், பிரதமர் இரண்டாவது யோசனையை ‘டிக்’ செய்ததாகவும் சொல்லப் படுகிறது. இதையடுத்து, பொறுப்பு கவர்னராக மீண்டும் வித்யாசாகர் ராவையே மகாராஷ்டிராவிலிருந்து தமிழகத்துக்குப் போடலாமா, அல்லது வேறு யாரையாவது கொண்டுவரலாமா என்றும் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார்கள்’’ என்ற கழுகார் அடுத்த செய்திகளுக்கு நகர்ந்தார். 
‘‘பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு வலதுகரமாக இருப்பவர் காடுவெட்டி குரு. நான்கு ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். சில மாதங்களாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு நுரையீரல் காற்றுப்பை திசுக்கள் பாதிப்பு நோய் தாக்கியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். சில நாள்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ‘என் மூத்த பிள்ளையைப் போன்று நான் கருதும் குரு வெகுவிரைவில் முழுமையான உடல்நலம் பெற்று நம்முடன் இணைந்து பணியாற்றுவார்’ என்று உருக்கமாக ராமதாஸ் கூறியுள்ளார்.’’
‘‘உணவுத்துறையில் நடைபெற்ற முறைகேட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் சிக்குகிறாராமே?’’
‘‘ஆமாம்! உணவுத்துறையின் கிடங்கு பிரிவில் முக்கிய அதிகாரி ஒருவர், சில தினங்களுக்கு முன்பு ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரைத் தன்னிச்சையாக, தனக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். இந்த டெண்டர் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதை அந்தத் துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவரே துறையின் முதன்மைச்செயலாளர் கவனத்துக்குக் கொண்டுபோனார். மோசடி நடைபெற்றதைக் கண்டறிந்த செயலாளர், பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை வைத்து விசாரணை செய்து, அந்த அறிக்கையைத் தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளார். தனது முறைகேடு குறித்த ஃபைலை க்ளோஸ் செய்வதற்கு சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி பலகட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளார். இன்னும் மூன்று மாதங்களில் ஓய்வு பெற இருப்பதால், அதில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்ற பதற்றம் அதிகாரியிடம் தெரிகிறது. இந்த அதிகாரிமீது வருமானவரித் துறை வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து முறைகேடுகளில் சிக்கியவருக்கு எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கினார்கள் என்ற புலம்பலும் கோட்டையில் எழுகிறது.’’

‘அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?’’
‘‘டெண்டர் விவகாரத்தில் அந்த அதிகாரியும் புத்திசாலித்தனமாகவே செயல்பட்டுள்ளார். எந்த ஃபைலிலும் தான் கையெழுத்திடாமல், தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளை வைத்தே ஃபைலை நகர்த்தியுள்ளார். விஷயம் சிக்கலானதும், தன்மீது நடவடிக்கை பாயக்கூடாது என்பதற்காக அதிகார மட்டத்தை அணுகியுள்ளார். அதன்பின் அமைச்சர் ஒருவர் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். சில செட்டில்மென்ட்களுக்கு அதிகாரி ஓகே சொன்னதால், தற்காலிகமாக அவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வில்லங்க அதிகாரிக்கு ஆதரவாக நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் களத்தில் நின்றுள்ளார்கள். எல்லாம் ‘பங்கு’ படுத்தும் பாடு என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்’’ என்றபடி எழுந்த கழுகார், கொசுறாக ஒரு தகவல் சொல்லிவிட்டுப் பறந்தார்…
‘‘ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில் அ.ம.மு.க சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினார் தினகரன். ‘அம்மாவின் சிலை என ஒரு பாட்டியின் சிலையை வைத்துள்ளனர். அது எடப்பாடியின் பாட்டியா, பன்னீரின் பாட்டியா என்பது தெரியவில்லை. சமீபத்தில் நான் விமானத்தில் சென்றபோது, மூன்று எம்.பி-க்கள் என்னிடம் வந்து பேசினர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி ஒருவர், என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும். தீர்ப்புக்கு பிறகு அனைத்து எம்.பி-க்களும், எம்.எல்.ஏ-க்களும் எங்கள் பக்கம்தான்’ என்றார் தினகரன். அந்த மூன்று எம்.பி-க்கள் யார் என்று இப்போது அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் பட்டிமன்றம் நடக்கிறது.’’

%d bloggers like this: