மாத்திரைகள் – அறியாதவை ஆயிரம்

காய்ச்சலோ, தலைவலியோ, அரசு மருத்துவமனைக்குப் போனால் நீண்ட வரிசை  நிற்கும். தனியார் மருத்துவமனையில், ‘அந்த டெஸ்ட் எடு’, ‘இந்த டெஸ்ட் எடு’ என்று பெரிதாக இழுத்து விடுவார்கள்… இருக்கவே இருக்கிறது மெடிக்கல் ஷாப்… ரெண்டு மாத்திரையை வாங்கிப்போட்டால் முடிந்தது…’- இப்படித்தான் இருக்கிறது, நம்மில் பெரும்பாலானோரின் எண்ணம். கை, கால் வலியா, காய்ச்சலா,

தலைவலியா, வாய்வுக்கோளாறா… எதுவாக இருந்தாலும் தட்டையாக இருக்கும் அந்த வெள்ளை மாத்திரை இடம் பெற்றுவிடுகிறது. சிலர், உடம்பில் எந்தப் பிரச்னை என்றாலும், ‘அந்த வெள்ளை மாத்திரையைக் கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
சிலர் பல வருடங்களுக்கு முன்னால் காய்ச்சல் என்று மருத்துவரிடம் சென்றிருப்பார்கள். அப்போது அவர் எழுதித்தந்த மருந்துச் சீட்டைப்  பத்திரமாக வைத்துக்கொண்டு, எப்போது காய்ச்சல் வந்தாலும் அதையே கொண்டுபோய் நீட்டி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவார்கள். பிறருக்குக் காய்ச்சல் வந்தால்கூட அந்த மருந்தைச் சீட்டைக் கொடுத்துக் கருணை காட்டுவார்கள்.
* இப்படி, மருத்துவரின் குறிப்பில்லாமல், ஆலோசனை இல்லாமல் நேரடியாக மருந்துக் கடைகளில்  மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடலாமா?
பழைய மருந்துச் சீட்டைப் பயன்படுத்தி மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாமா?
சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் என்று மருத்துவர்கள் தெளிவாக எழுதிக் கொடுத்தாலும்கூட, ‘அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது’, ‘மறந்துட்டேன் தப்பில்லை’ என்று மாத்திரைகளை மாற்றி மாற்றிச் சாப்பிடலாமா?
‘எனக்கு டீயோடு மாத்திரை போட்டாதான் உடனே கேக்கும்’, ‘என் மகனெல்லாம் வெறும் வாயிலயே மாத்திரையை மிட்டாய் மாதிரி கடிச்சுத் தின்பான்…’ – இது போன்று நம் இஷ்டத்துக்குக் குளிர்ந்த நீர், டீ, காபி போன்றவற்றுடன் மாத்திரைகளைச் சாப்பிடலாமா?
மாத்திரைகளைப் போட்டுக்கொண்டால் போதும், வழிமுறைகள் எல்லாம் அவசியம் இல்லையென்று அலட்சியமாக இருக்கலாமா?
இப்படி மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில் நமக்குள்ள அத்தனை சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் தருகிறார் பொது மருத்துவர் தேவராஜன்.

ப்ரிஸ்க்ரிப்ஷன் அவசியம்
மருத்துவரின் பரிந்துரையில்லாமல் நேரடியாக மருந்துக்கடைகளில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவது மிகவும் ஆபத்து. சாதாரணப் பிரச்னைதானே என்று நினைத்துத் தம் விருப்பத்துக்கு மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதால் தேவையில்லாத பல பக்கவிளைவுகள் உண்டாகும். இதுவே வழக்கமாகும் பட்சத்தில் கிட்னி பாதிப்பு, குடல் பாதிப்பு ஏற்பட்டு மரணம் நிகழவும் வாய்ப்புள்ளது.

சாப்பாட்டுக்கு முன்… சாப்பாட்டுக்குப் பின்…?
குறிப்பட்ட ஒரு மாத்திரையை எந்த வேளை, எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பது முக்கியம். இதை நோயின் தன்மை கருதி மருத்துவர் தீர்மானிப்பார். சாப்பாட்டுக்கு முன்னதாகச் சாப்பிடவேண்டிய மாத்திரைகள், சாப்பாட்டுக்குப் பின்னர் சாப்பிட வேண்டிய மாத்திரைகள் இருக்கின்றன. உடலியல் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு எந்த வேளையில் சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கப்படும்.
உதாரணமாக, ஸ்டீராய்டு மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் எல்லாம் மிகவும் வீரியம் மிக்கவை. இவற்றை ஏதேனும் உணவு சாப்பிட்ட பின்னர்தான் விழுங்கவேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதுபோல, வாந்தி, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்னைகளுக்காகக் கொடுக்கப்படும் மாத்திரை, மருந்துகளை வெறும் வயிற்றில்தான் சாப்பிடவேண்டும். வீக்கங்களைக் குறைப்பதற்கான மாத்திரைகளைச் சாப்பாட்டுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால்தான் வேலை செய்யும்.
சாப்பாட்டுக்குப் பின்னர் எடுத்துக் கொண்டால் அவை என்சைமாக மாறிவிடும். சில நேரங்களில் மாத்திரைகளைச் சாப்பிட்ட பின் நெஞ்செரிச்சல், வயிற்றெரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதைத் தடுப்பதற்காக மருத்துவர்களே சில துணை மாத்திரைகளை வழங்குவார்கள். உதாரணமாக, ஆன்டிபயாக்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது ‘ஆன்டாசிடு’ (Antacid) போன்ற மாத்திரைகளைச் சேர்த்து வழங்குவார்கள். மருத்துவர் வழங்காத பட்சத்தில் நாமே மருத்துவரிடம் பிரச்னையைச் சொல்லிப் பரிந்துரைக்கச் சொல்லலாம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதுபோன்ற மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது, பிரச்னைக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் வீரியத்தைக் கெடுத்துவிடும்.
பாலிபார்மசி
பல உடல்நலக் கோளாறுகள் இருக்கும்பட்சத்தில் மாத்திரைகளை மொத்தமாக எடுத்துக் கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இதை ‘பாலிபார்மசி’ (Polypharmacy) என்பார்கள். இப்படிப் பல நோய்களுக் கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் சேர்த்துச் சாப்பிடுவது சில சமயம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். காம்பினேஷன்கள் ஏற்றுக் கொள்ளாமல் போய், மாத்திரையின் வீரியம் அதிகமாகிவிடும். அல்லது குறைத்துவிடும்.

காலாவதியில் கவனம்!
மாத்திரைகளைச் சாப்பிடுவதற்கு முன், அதன் எக்ஸ்பைரி தேதியைக் கவனிக்க வேண்டும். எப்போதோ வாங்கிய மாத்திரைகளையெல்லாம் வீணாகிவிடுமே என்று சிலர் பயன்படுத்துவார்கள். இது மிகப்பெரும் விபரீதம். சில நேரங்களில் மாத்திரை அட்டையில் தேதி தெரியாது. அப்படி, தயாரித்த தேதி தெரியாத மாத்திரைகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது. காலாவதி ஆன மாத்திரைகளைச் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிப்படையும். மாத்திரை அட்டைகளைப் பிரிக்கும்போதே தேதி அச்சிடப்பட்டுள்ள பாகத்தை விட்டு மற்ற பகுதிகளை முதலில் பயன்படுத்த வேண்டும். அல்லது காலாவதித் தேதியை டைரிகளில் குறித்து வைத்துக்கொள்ளலாம்.
ஆன்டிபயாடிக் அலர்ட்!
ஆன்டிபயாக்டிக் மாத்திரைகள் மூன்று நாள்களுக்குக் கொடுக்கப் பட்டால் மூன்று நாள்களுக்கான மாத்திரைகளையும் சாப்பிடவேண்டும். உடல்நிலை சரியாகிவிட்டது என்று மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தி விடக்கூடாது. அப்படிப் பாதியிலேயே நிறுத்தினால், அடுத்தமுறை அதே ஆன்டிபயாக்டிக் மாத்திரைகள் பயன்தராது. வீரியமுள்ள வேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இப்படி அடிக்கடி ஆன்டிபயாக்டிக் மருந்துகளை மாற்றி எடுத்துக்கொள்வது நல்லதல்ல. அப்படி மாற்றினால், இரண்டு, மூன்று ஆன்டிபயாக்டிக் சேர்த்து எடுத்துக் கொள்ளவேண்டிய சூழல் வரும். உதாரணத்துக்கு, காசநோய் பாதிப்புள்ளவர் ஒன்பது மாதங்களுக்கு மூன்று மாத்திரைகளைச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். பாதியில் நிறுத்தினால் பாதிப்பு அதிகமாகிவிடும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
ஒரு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துவிட்டு, வேறொரு மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்வதாக இருந்தால், பழைய ரிப்போர்ட்டுகள், மாத்திரைச் சீட்டுக்களை அவசியம் எடுத்துச் செல்லவேண்டும். ஒருவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை மற்றவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுமட்டுமல்ல, எப்போதோ மருத்துவரிடம் பெறப்பட்ட குறிப்புகளை வைத்தும் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடக்கூடாது. குழந்தைகள் விளையாடும் இடங்களில் மருந்து மாத்திரைகளை வைக்கக்கூடாது. அலமாரிகள், பீரோக்களில் பூட்டி வைக்கவேண்டும்.
சிலருக்கு சில மருந்து, மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அந்த மாதிரியான மாத்திரை, மருந்துகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு முறை அந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை செய்தால் மருத்துவரிடம் முன்னெச்சரிக்கையாகச் சொல்லிவிடவேண்டும். குளிர்ந்த நீர், டீ, காபி, சுடுநீரோடுச் சேர்த்து மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. சாதாரணத் தண்ணீரில் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். மாற்று மருந்து எடுத்துக் கொள்பவர்கள் அதனுடன் அலோபதி மருந்துகள் எடுத்துக்கொள்ள லாம், எந்தப் பாதிப்பும் இல்லை.
மாத்திரைகள் வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?
தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் சிவபாலன்

“மருந்துகளைப் பொறுத்தவரை, ‘பாதுகாப்பானது’ என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு மருந்துக்குமே ரிஸ்க், பெனிஃபிட் என்ற இரண்டு நிலைகள் உள்ளன. பயன்படுத்தும் விதத்தையும், அளவையும் பொறுத்துதான் ரிஸ்க்கா, பெனிஃபிட்டா என்பது தெரியும். மாத்திரை, மருந்துகளில் ‘பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸ்’ (Prescription drugs) ‘நான் பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸ்’ (Non Prescription drugs) என்று இருவகைகள் உள்ளன. ‘நான் பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸ்’ மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமலே மருந்துக்கடைகளில் பெறமுடியும். ஆனால், அவற்றையும்கூட மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வழங்கவேண்டாம் என்று மருந்துக்கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
மக்கள், மாத்திரை, மருந்துகள் வாங்கும்போது கண்டிப்பாக அதற்கான ரசீது பெறவேண்டும். தவறான ஒரு மாத்திரை விற்கப்பட்டால் ரசீது இருந்தால்தான் அதை ஆதாரப்பூர்வமாகக் கண்டறிய முடியும். எக்ஸ்பைரி டேட்டை பார்த்துதான் மாத்திரைகள் வாங்கவேண்டும். அதுபோல மருந்துக்கடைகளில் சில மாத்திரைகளை ஒட்டுமொத்த ஸ்டிரிப்பாகத்தான் வழங்குவார்கள். அது முழுக்க மக்களின் மீதுள்ள அக்கறையினால் மட்டுமே.
இரண்டு, மூன்று மாத்திரைகளை மட்டும் தனியே பிரித்துக் கொடுக்கும்போது மாத்திரைகளின் பெயர், காலாவதித் தேதி ஆகியவை அதில் இல்லாமல் போக வாய்ப்புள்ளது. மேலும், இரண்டு, மூன்று மாத்திரைகளை மட்டும் தனியாக வெட்டியெடுக்கும்போது மற்ற மாத்திரைகளில் விரிசல் ஏற்பட்டு அதனுள் காற்று உட்புகுந்துவிடும். மாத்திரைகளின் வீரியம் குறைந்துவிடும். எனினும், மொத்தமாக விலை கொடுத்து வாங்குவது மக்களுக்குச் சிரமமாக இருக்கிறது. அதனால், இதற்கான மாற்றுவழியை தற்போது யோசித்துவருகிறோம்” என்கிறார்.


குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை
விளக்குகிறார் குழந்தை நல மருத்துவர் செல்வம்

“குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்துவிட்டால் பெற்றோர் பதறிப் போவார்கள். காய்ச்சல் உடனே சரியாக வேண்டும் என்பதற்காக மாத்திரை, மருந்துகளைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அது தவறு. நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறைதான் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஐந்துமுறை கொடுக்கலாம். அடிக்கடி மருந்துகள் கொடுத்தால் குழந்தையின் சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. பெரியவர்களுக்காக வாங்கிய மாத்திரைகளைக் குழந்தைகளுக்கு, பாதியாக்கிச் சிலர் கொடுப்பார்கள். அதுவும் ஆபத்து. மருத்துவர் பரிந்துரைத்த வீரிய அளவில் மாத்திரை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொடுக்கவேண்டும்.’’


மாத்திரைகள் சாப்பிடும்போது பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
விளக்குகிறார் மகளிர் நல மருத்துவர் ஸ்ரீகலா

“மருந்துக் கடைகளையே மருத்துவமனையாகப் பயன்படுத்தும் வழக்கம் அதிகளவில் இருக்கிறது. டெங்கு காய்ச்சல் பரவியபோது, பலர் மருத்துவமனைக்குச் செல்லாமல் தங்கள் விருப்பத்துக்கு மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டார்கள். அதனால் உயிரிழப்புகள் அதிகமாயின.  உதாரணமாக, நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வாயுக்கோளாறு என்று மருந்துக்கடையில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவார்கள். சிலர் குளிர்பானங்கள் வாங்கிக் குடிப்பார்கள். அது வேறு பிரச்னைகளுக்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். வலி வித்தியாசமாக இருந்தால், காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுக வேண்டும். விருப்பத்துக்கு மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது.

தலைவலியோ, வயிற்றுவலியோ… எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அடிக்கடி தலைவலி வந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். அதேபோல வயிற்று வலி தொடர்ந்தால் அது குடல்வால் பிரச்னையாக இருக்கலாம். காய்ச்சல் என்பது கூட ஏதோ ஒரு பிரச்னைக்கான அறிகுறிதான். எனவே அதற்கு மருந்தகத்தில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டு சாதாரணமாகக் கடந்துவிடக்கூடாது.
பெண்களைப் பொறுத்தவரைக் காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, உடல்வலி ஆகிய பிரச்னைகளுக்கு நேரடியாக மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சிலர் அதைச் தினசரி வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். அடிக்கடி மாத்திரை சாப்பிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் சாப்பிடுவார்கள். அதையும் மருத்துவரின் பரிந்துரையின்றி அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். மாதவிடாய் தள்ளிப்போனால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆபத்து என்பதை உணர வேண்டும்.

%d bloggers like this: