கவலையால் வலியும் வரும்!

ந்த உலகத்துல யாருக்குத்தான் கவலை இல்லை…’ `கவலையே இல்லாத ஒரு மனுஷனை உன்னால அடையாளம் காட்ட முடியுமா? என்பதுபோன்ற உரையாடல்களை நாம் அவ்வப்போது ஆங்காங்கே கேட்டிருப்போம்.
மகிழ்ச்சி, கோபம், ஆச்சர்யம், பயம், அருவருப்பு போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் கவலையும் ஒன்று. கவலையைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாவிட்டால், அது பல்வேறுவிதமான நோய்களுக்குக்

கதவைத் திறந்து வைக்கிறது. மனதில் தொடரும் கவலைகளாலும் அதனால் மூளையில் சுரக்கும் ரசாயனங்களாலும் ஏற்படும் மாற்றங்கள் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளில் பிரச்னைகளை உருவாக்குகிறது. இந்த உலகில் வாழத்தகுதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் தற்கொலை எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும். மனக்கவலை ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும்? அதிலிருந்து விடுபட என்ன வழி? விளக்குகிறார் மனநல மருத்துவர் பாபு.

“மனதில் தோன்றும் எண்ணங்களை எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமக்கான வாழ்க்கைச் சூழல் மகிழ்ச்சியானதாகவோ, துக்கம் நிறைந்ததாகவோ, சாதாரணமாகவோ, சாதனையாகவோ இருக்கும்.

கவலை, எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. அன்றாட வாழ்க்கையில் வழக்கமாக டீ, காபி போடும் காலை வேளையில் பால் கிடைக்காமல் போனால் கவலை சூழும். பள்ளி சென்ற குழந்தை குறிப்பிட்ட நேரத்தில் வீடு திரும்பாமல் போனால் கவலை உண்டாகும். இவையெல்லாம் சிறிது நேரத்தில் மாறக்கூடிய கவலைகளே. ஆனால், இந்தக் கவலையின் அளவு அதிகரிப்பதையே `பய வியாதி’ என்கிறோம். `பய வியாதி’ உள்ளவர்கள் எல்லா விஷயத்துக்கும் காரணம் கண்டுபிடித்துக் கவலைப்படுவார்கள். இதன் அடுத்த கட்டமே மன அழுத்தம். மன அழுத்தம் என்பது காரணமே இல்லாமல் கவலையை உணரக்கூடிய நிலை.

மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் மனநிலையில் மாற்றம் உண்டாகும். முக்கியமாக மூளையில் செரட்டோனின் என்ற அமிலம் சுரப்பதில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் நம்மால் மகிழ்ச்சியை உணர முடியாது. இதனால் கவலை நம்மைப் பற்றிக்கொண்டு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இதுபோன்று மனநிலையில் ஏற்படும் மாற்றங்களால் மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் கவலை ஏற்படலாம். கவலை அதிகரிப்பதால் இதய பாரம், அதிக வியர்வை, தூக்கமின்மை, எதிலும் விருப்பமில்லாமை, பசியின்மை, தற்கொலை எண்ணம் போன்றவை வரலாம்.
கவலை மட்டுமல்லாமல், ஒருவருக்குத் தொடர்ந்து மனஅழுத்தம் இருந்தால் அவருக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதயத் துடிப்பு அதிகமாவதுடன் உடலின் வெப்பநிலை கூடும். இதுபோன்ற சூழலில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதுடன், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

மனக்கவலையால் சரியாக உணவு உண்ணாமலிருப் பவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் அவர்களுக்குத் தீராத தலைவலி, கை கால் வலி, இடுப்பு வலி என்று ஏதாவது ஒரு வலியால் அவதிப்படுவதாகச் சொல்வார்கள். இவர்களைப் பரிசோதித்துப் பார்த்தால் அவர்களது உடலில் எந்தவிதப் பிரச்னைகளும் இருக்காது. மாறாக மன அழுத்தமே முக்கியக் காரணமாக இருக்கும்.
மன அழுத்தத்தால் குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். Irritable Bowel Syndrome எனப்படும் இந்தப் பிரச்னையால் அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனால் அடிக்கடி மலம் கழிப்பது, பசியின்மை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுக் குடல் நோய் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவார்கள். ஆனாலும் அவர்களுக்கு நோய் சரியாகாமல் பிரச்னை தொடரும். மன அழுத்தத்தைச் சரி செய்வதன்மூலமே இதற்குத் தீர்வுகாண முடியும்.
மன அழுத்தத்துக்குப் பன்முகங்களும், நிறைய பரிமாணங்களும் உண்டு. பலூனில் காற்றை ஊதிக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் அது வெடித்துவிடும். அதுபோல மன அழுத்தத்தையும் குறிப்பிட்ட அளவே தாங்கிக்கொள்ள முடியும். அது முடியாமல்போனால் வேறு உடல் நோய்களாக வெளிப்படும்.
இன்றைய சூழலில் மனிதர்களின் வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்கள் காணப்படுகின்றன. வாழ்க்கையின் நெறிகள் மாறியுள்ளன. இப்படிப் பட்ட சூழலில் மனதை நேர்கோட்டில் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். நான் யார்? என்னுடைய பலம், பலவீனம் என்ன? என்பது குறித்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல வாழ்க்கைமுறையை மாற்றிக் கொண்டு, என்னால் இது முடியும், இது முடியாது என்பதில் தெளிவான ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். 

சரியான தூக்கம், சரியான உணவுப்பழக்கம், குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது, ஓய்வெடுத்துக் கொள்வது, அந்த ஓய்வைத் தனக்காகப் பயன்படுத்திக் கொள்வது போன்றவை மனக்கவலையில் இருந்து வெளிவர உதவும். தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை இதற்கு உதவும். இவை நம் மனம் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்கும். மனக் கவலையானது மன அழுத்த நிலைக்குச் சென்றுவிட்டால் அதிலிருந்து வெளிவர மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து எடுத்துக் கொள்ளலாம். இதில் பெரிதாகப் பக்க விளைவுகள் வராது; நன்றாகத் தூக்கம் வருவதுடன் பசியின்மைப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். தீராத மன அழுத்தத்துக்கு மின் அதிர்வு சிகிச்சைகள் கொடுக்கப்படும்.
குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் வரும். அதிலும் விடலைப்பருவத்தில் வரும் மனஅழுத்தம் அபாயகரமானது. மன அழுத்தத்துக்கு ஆளான குழந்தைகள் பள்ளியில் மயக்கம் போட்டு விழுவது, நெஞ்சு படபடப்பு, வயிற்றுவலி என அவதிப்படுவார்கள். இதுபோன்ற பிரச்னைகளுக்குப்  பள்ளிச்சூழலோ அல்லது வேறு காரணங்களோ இருக்கலாம். மேலும் மனக் கவலையில் இருந்து வெளிவர போதைப்பழக்கம், தவறான தொடர்புகள் எனத் தடம் மாறிப் போகவும் வாய்ப்புள்ளது.
பெரியவர்களைப் பொறுத்தமட்டில் மனஅழுத்தம் காரணமாக வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சந்தேகப்படுவது, செய்வினை போன்ற மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுவது என இருப்பர். அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மனக்கவலை, மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கான முயற்சிகள் செய்வதோடு வாழ்க்கைச்சூழலை மாற்றிக் கொள்ள வேண்டும்.’’

%d bloggers like this: