டென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க !

யோகா, தியானம், மூச்சுப்பயிற்சிகள் செய்தால் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இதில் சுதர்சன க்ரியா என்னும் புதிய வழிமுறையைக் கையாண்டால் மன அழுத்தத்திலிருந்து வேகமாக விடுபட முடியும் என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று இப்போது பரிந்துரைத்திருக்கிறது. Journal of Traumatic Stress மருத்துவ இதழிலும் இந்த ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது.

அதென்ன சுதர்சன க்ரியா?

வேறு ஒன்றும் இல்லை. நம்முடைய சுய சிந்தனை இல்லாமல் நிகழ்ந்துகொண்டிருக்கும் சுவாசத்தை கொஞ்சம் உற்று கவனிக்கும் முறைக்குப் பெயர்தான் சுதர்சன க்ரியா. புத்தர் சொன்னாரே உங்கள் மூச்சை கவனியுங்கள் என்று… அதே டெக்னிக்தான்.இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. நம்முடைய தோற்றத்தையும், மனநிலையையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கக்கூடிய திறன் கொண்டது சுவாசம். அதனால்தான் உயிர்க்காற்று என்று சுவாசத்தைக் குறிப்பிடுகிறோம்.

அத்தகைய சுவாசம் நம்மிடம் இயல்பாக இருப்பதில்லை. உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றை பாதி நுரையீரலிலேயே நிறுத்திவிடுகிறோம். உள்வாங்காமலேயே அப்படியே வெளியேற்றியும் விடுகிறோம்.இது தவறான சுவாசிக்கும் முறை. இப்படி இல்லாமல் அடிவயிற்றிலிருந்து சுவாசிக்க வேண்டும். அதேபோல் நிறுத்தி நிதானமாக மூச்சை வெளிவிட வேண்டும்.

இப்படி செய்யும்போது மனப்பதற்றம் குறைந்து மனதுக்கு ஆழ்ந்த அமைதி கிடைக்கும். இதன்மூலம் ரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். ஒரே நேரத்தில் மனம், உடல் இரண்டும் புத்துணர்வு பெறும்.

‘தியானம் செய்ய முடியவில்லை, பிராணாயாமா செய்யத் தெரியவில்லை என்று சொல்கிறவர்களும், இன்றைய அவசர வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருப்பவர்களும் இந்த சுதர்சன க்ரியாவை முயற்சி செய்தால் நல்ல மாற்றங்களை கண்முன்னே காண்பார்கள்’ என்று உத்தரவாதம் தருகிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள்!

%d bloggers like this: