Advertisements

பாலூட்டுவதில் பல கேள்விகள்

புத்தம் புதிதாக ஒரு பிஞ்சு உயிரைக் கைகளில் ஏந்தும்போது, இளம் அம்மாக்களுக்கு அந்தப் பாப்பாவுக்குப் பாலூட்டுவதில் பல சந்தேகங்கள் எழும். பாலூட்டச் சரியான பொஸிஷன் எது,  படுத்துக்

கொண்டு பாலூட்டலாமா, காம்பில் புண்ணாகிவிட்டால் மருந்திடலாமா, பால் கட்டிக்கொண்டால் அதைப் பிள்ளைக்குக் கொடுக்கலாமா… இப்படி நீளும் சந்தேகங்களைக் களைகிறார், மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தர்.

* பிரசவத்துக்குப் பின் அம்மாவுக்கு மயக்கம் தெளிந்தவுடன் குழந்தைக்குப் பாலூட்ட ஆரம்பித்துவிடலாம். என்றாலும், அப்போது அம்மா சோர்ந்துபோய் இருப்பார் என்பதால், அவரை நிமிர்த்தி அமரவைத்து, யாராவது குழந்தையைக் கைகளில் ஏந்திக்கொண்டு, அம்மாவின் மார்புக்கருகில் கொண்டுசென்று பாலூட்ட வேண்டும். சிசேரியனான அம்மாக்களுக்கு இது வசதியாக இருக்கும். குழந்தையின் நாசி தாயின் மார்பில் அழுந்தும்போது அதற்கு மூச்சுவிட முடியாத சூழல் ஏற்படாதபடி கவனமாகப் பாலூட்டுவது மிக மிக முக்கியம்.

மருத்துவனையிலிருந்து வீட்டுக்குச் சென்றவுடன், இரண்டு பக்கமும் கைப்பிடி வைத்த சேரில் 90 டிகிரியில் (முடிந்தவரை) நிமிர்ந்தவாறு அமர்ந்து, மடியில் மார்பு உயரம்வரை தலையணைகள் வைத்து, அதன்மேல் குழந்தையைக் கிடத்தி, தலையை மட்டும் சற்று உயர்த்திப் பாலூட்ட வேண்டும்.

அம்மாவால் குழந்தையை ஏந்திப்பிடித்துக் கொள்ள முடியுமெனில், தலையணை தேவையில்லை. குழந்தையின் தலையை முழங்கையின்மேல் வைத்து, உடம்பை மற்றொரு கையால் சற்றுக் கீழாகத் தாங்கிப்பிடித்தவாறு அம்மா பாலூட்டலாம்.

பச்சிளம் குழந்தைகளுக்கான பொருள்களை விற்கிற கடைகளில், குழந்தையை நெஞ்சோடு அணைத்துப் பாலூட்டுவதற்கான ‘பேக்ஸ்’ கிடைக்கின்றன. வீட்டில் பெரியவர்கள் இல்லாத சூழலில், குழந்தையை மடியில்வைத்தோ, நெஞ்சோடு சேர்த்தோ பாலூட்டத் தடுமாறுகிற அம்மாக்களுக்கு இவை உதவியாக இருக்கும். 

படுத்த நிலையில் குழந்தைக்குப் பாலூட்டும்போது, பால் மூச்சுக்குழாயில்போய் புரையேறினால் பிள்ளைக்கு ஆபத்தாகிவிடும் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும்.

பிரசவத்துக்குப்பின் குழந்தைக்கு முதல் முறையாகப் பாலூட்டும் முன்னர், அழுக்குகள் சேர்ந்திருக்கும் அம்மாவின் காம்புப் பகுதியை நன்கு சுத்தம்செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை குழந்தைக்குப் பாலூட்டும் முன்னரும், ஈரத்துணியால் காம்பு, மார்பகத்தை வியர்வை, அழுக்கு இல்லாமல் துடைத்தெடுக்க வேண்டும். காம்பில் உள்ள அழுக்கு, பாப்பாவுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம் ஜாக்கிரதை.

 

காம்பை மட்டுமல்லாது, அதைச் சுற்றியுள்ள பகுதி முழுவதையும் முடிந்தளவு குழந்தையின் வாய்க்குள் செலுத்திப் பாலூட்ட வேண்டும். அப்போதுதான் குழந்தை நன்கு உறிஞ்சிக் குடிக்கும். அதற்குத் தேவையான அளவு பால் கிடைக்கப்பெறும். இதுவே காம்புப்பகுதியை மட்டும் சப்பிப் பால்குடித்தால், குழந்தைக்கும் பால் சரிவரக் கிடைக்காது, அம்மாவுக்கும் காம்பு புண்ணாகிவிடும். 

நிப்பிளில் வெடிப்பு அல்லது புண் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையுடன் அதற்கான ஜெல்லைப் பயன்படுத்தலாம். பின்னர் ஜெல்லை சுத்தமாகக் கழுவிய பிறகு, மூன்று மணி நேரம் கழித்தே அந்தப் பக்க மார்பில் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்.

சில பெண்களுக்கு மார்புக் காம்புகள் உள்ளாழ்ந்துபோன நிலையில் இருக்கும். அவர்கள்,  உள்ளழுந்தி இருக்கிற நிப்பிளை கருத்தரித்த ஆறாம் மாத்திலிருந்தே நீவி வெளியே எடுக்க வேண்டும். நிப்பிளை வெளியே இழுத்து விடுவதற்கான சிறிய ரப்பர் உபகரணமான நிப்பிள் புல்லர் இருக்கிறது. அதையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

பால் கட்டிக்கொள்ளும் சூழலில், அந்தப் பாலை குழந்தைக்குப் புகட்ட வேண்டாம். வெந்நீர் பேக் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைக் கரைத்து, பீய்ச்சி வெளியேற்றிவிட்டே, பிள்ளைக்குப் பாலூட்ட வேண்டும்.

Advertisements
%d bloggers like this: