பதவி பறிக்கும் குட்கா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறேன். மதியத்துக்குள் வந்துவிடுவேன்’ என மெசேஜ் அனுப்பியிருந்தார் கழுகார். மதிய வெயிலில் வியர்வையோடு வந்த அவரிடம், ‘‘காவிரிப் பிரச்னை, கவர்னர் விவகாரத்தால் பின்னுக்குப் போனது. கவர்னர் விவகாரம், தினகரன்-திவாகரன் மோதலில் அடிபட்டுப் போனது. இப்போது குட்கா

விவகாரம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டதே’’ என்றோம்.  
‘‘தினகரனுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. மோடியின் ஆலோசகராக உள்ள அதிகாரி ஒருவர் தினகரனை சென்னையில் வந்து சந்தித்துவிட்டுப் போனார் என பல வாரங்களுக்கு முன்பே நமது நிருபர் எழுதியிருந்தார். அதற்கும், நீர் மேலே சொல்லி இருக்கிற எல்லா விவகாரங்களுக்கும் ஏதோ ஒரு புள்ளியில் சம்பந்தம் இருக்கிறது.’’
‘‘என்ன சம்பந்தம்?’’
‘‘பி.ஜே.பி-யைக் கடுமையாக எதிர்ப்பவராகத் தன்னைக் காட்டிக்கொண்டவர் தினகரன். இப்போது அவர் அப்படி இல்லை. அதேநேரத்தில், பி.ஜே.பி-யோடு அறிவிக்கப்படாத கூட்டணியில் இருப்பதாகக் கருதப்படும் அ.தி.மு.க-வின் ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழில் பி.ஜே.பி-யைக் கடுமையாக விமர்சித்துக் கவிதை வெளியானது. அந்தக் கவிதையை எழுதிய ஆசிரியர் மருது அழகுராஜ்மீது எந்த நடவடிக்கையையும் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் டீம் எடுக்கவில்லை. ஆனால், அதே நாளிதழில்,
‘பி.ஜே.பியும் அ.தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகச் செயல்படும்’ என்று கட்டுரை வெளியானதால், இருவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆக, எதிரிகளாக வெளியில் தெரிந்தவர்கள், சமீபமாக உள்ளுக்குள் கூட்டாளிகளாக மாறியுள்ளனர். கூட்டாளிகளாக இருந்தவர்கள், உள்ளுக்குள் எதிரிகளாக மாறியிருக்கின்றனர்.’’
‘‘குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஒரு நீதிமன்ற உத்தரவுதானே… தமிழக அரசுக்கு மத்திய அரசு வைத்த ‘செக்’ என்று இதை எப்படிக் கருதமுடியும்?’’

‘‘நிச்சயமாக இது நீதிமன்ற உத்தரவுதான். ஆனால், இதை வைத்து மத்திய அரசு என்ன செய்யமுடியும் என்பது, அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும். மத்திய பி.ஜே.பி அரசின் எதிரிகளுக்கு வருமானவரித் துறை மற்றும் சி.பி.ஐ மூலம்தானே தகுந்த பாடம் கற்பிக்கப்படுகிறது. அதில் ஒளிவுமறைவு என்ன இருக்கிறது? தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பி.ஜே.பி-யைக் கடுமையாக விமர்சிப்பவர்களை, ‘வருமானவரி சோதனை வரும், ஜாக்கிரதை’ என்று சொல்லித்தானே எச்சரிக்கிறார். ‘குட்கா விவகாரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். அதுதொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களைத் தமிழகத் தலைமைச் செயலாளருக்கு வருமானவரித் துறை தந்தது. ஆனால், அந்த ஆவணங்கள் தொலைந்துவிட்டன என்று தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் சொன்னார். இந்த விசாரணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விசாரணை அமைப்புகளால் நடத்தப்பட்டால், அது நேர்மையாக நடக்காது. எனவே, இதை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில்தான், ‘சி.பி.ஐ விசாரிக்கட்டும்’ என்று உத்தரவு வந்துள்ளது. இது தற்போதைய தமிழக அரசின் போலீஸ் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பதவிகளைப் பறிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.’’ 
‘‘சி.பி.ஐ விசாரணை இனிமேல்தான் ஆரம்பிக்கும். அதற்குள் எப்படி பதவிக்கு ஆபத்து வரும்?’’
‘‘டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் தற்போது பதவி நீட்டிப்பு மூலம் டி.ஜி.பி பதவியைப் பெற்றுள்ளார். ஓய்வுபெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகத்தான் அவருக்கு டி.ஜி.பி பதவி கிடைத்தது. பதவி உயர்வு மூலம் டி.ஜி.பி-யாக வருகிறவர்களுக்குத் தனியாகவும், பதவி நீட்டிப்பு மூலம் டி.ஜி.பி-யாக வருகிறவர்களுக்கும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களைக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி பதவி நீட்டிப்பு மூலம் டி.ஜி.பி-யாக வருகிறவர்கள்மீது இதுபோன்ற சர்ச்சைகள், சி.பி.ஐ வழக்குகள் வந்தால், அவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டுமாம். குட்கா விவகாரத்தை ஆரம்பத்திலிருந்தே அதிக கவனம் செலுத்தி, தொடர்ந்து லைம்லைட்டில் வைத்திருப்பவர் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். ‘டி.ஜி.பி பதவி விலகவில்லை என்றால், சும்மா இருக்கமாட்டோம். ஒரு வாரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த ஜெ.அன்பழகனை மனுதாரராகப் போட்டே உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்வோம்’ என தி.மு.க தரப்பில் சொல்கிறார்கள். அதனால், எப்படிப் பார்த்தாலும், டி.ஜி.பி  ராஜேந்திரனுக்கு நேரடியாகச் சிக்கல்தான். அவருக்குச் சிக்கல் என்றால், அது தமிழக அரசுக்கும் சிக்கல்தான்.’’

‘‘விஜயபாஸ்கர் விவகாரம் எப்படிப் போகும்?’’
‘‘தார்மிக அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பிரச்னையைக் கிளப்பும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சி.பி.ஐ அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் வீட்டில் நுழையலாம். அது தமிழக அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும். அதை எடப்பாடி எப்படி சமாளிப்பார் என்பதுதான் தெரியவில்லை.’’
‘‘முதல்வர் எடப்பாடி மே 2-ம் தேதி டெல்லி போகிறாரே?’’
‘‘ஆமாம். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தை மே 1-ம் தேதிதான் மோடி ஆரம்பிக்கிறார். எடப்பாடி டெல்லி போகும் நேரத்தில் மோடி டெல்லியில்தான் இருப்பார். மறுபடியும் 3-ம் தேதி கர்நாடகா வந்துவிடுவார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் எடப்பாடியைச் சந்திப்பது சந்தேகம்தான். ஒருவேளை சந்தித்தால், அது கர்நாடக தேர்தலில் எதிராகப் போய்விடும் எனக் கவலைப்படுகிறது பி.ஜே.பி. இந்நிலையில் விவசாயச் சங்கத் தலைவர்கள் செல்லமுத்து, இளங்கீரன் உள்ளிட்டவர்கள் ஏப்ரல் 25-ம் தேதி முதல்வர் எடப்பாடியை சந்தித்தனர். ‘நீங்கள் பிரதமர் அலுவலகத்துக்குப் போய் ‘பிரதமரைப் பார்த்தே ஆக வேண்டும்’ என உட்காருங்கள். நாங்கள் டெல்லிக்குத் திரண்டுவந்து வெளியில் உட்கார்கிறோம். அவர் எப்படி சந்திக்காமல் தவிர்ப்பார் என்பதைப் பார்த்துவிடலாம்’ என்றார்களாம் அவர்கள். எடப்பாடி திகைத்து, அவர்களைச் சமாளித்து அனுப்பி வைத்திருக்கிறார்.’’

‘‘குஷ்புவுக்கு எதிராக தமிழக காங்கிரஸில் போர்க்கொடி தூக்கியுள்ளார்களே?’’
‘‘ஆமாம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை காங்கிரஸ் அளித்த போது, ‘தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது கடினம்’ என்ற குரல் ஒன்று தமிழகத்தி லிருந்து எழுந்தது. அது, மூத்த வழக்கறிஞரும் மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான மோகன் பராசரன் குரல்தான். அதுகூட ஆச்சர்யமில்லை. அவர் அப்படிச் சொல்லும்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு உடன் இருந்ததுதான் ஷாக். காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு அந்தப் பேட்டியில் பங்கேற்றதை அரசியலோடு முடிச்சுப் போடுகிறார்கள்.’’
‘‘என்ன அது?’’
‘‘பொதுக்குழு உறுப்பினர் விவகாரத்தில் குஷ்புவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் கராத்தே தியாகராஜன். அதன்பிறகு திருநெல்வேலி காங்கிரஸ் அலுவலகத்துக்கு குஷ்பு வந்தபோது அலுவலகத்தைப் பூட்டிவிட்டார்கள். இப்படி தமிழக காங்கிரஸ் கமிட்டியோடு மல்லுக்கு நிற்கும் நிலையில், ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் குஷ்பு. ஆனால், ராகுல் நேரம் ஒதுக்கவில்லை. இப்படியான சூழலில் மோகன் பராசரன் பேட்டியின்போது, குஷ்புவும் உடன் இருந்திருக்கிறார். ‘தீர்மானம் நிறைவேறாது’ என்று சொல்லும் இடத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு ஏன் போனார்? இதற்குப் பின்னணியில் இருப்பது யார் என டெல்லி காங்கிரஸ் தலைமைக்குப் புகார் போயிருக்கிறதாம். அமலாக்கத்துறையோடு மகன் விவகாரத்தில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் மூத்த தலைவர் ஒருவர்தான் இதற்கு ரகசிய சப்போர்ட் என்பது புகார்’’ என்ற கழுகார் பறந்தார்.


%d bloggers like this: