பொறுத்தது போதும்… திவாகரன் பொங்குவதற்கு காரணமே தினகரன் மனைவியின் "கிண்டல்" தானாம்!

சசிகலா பரோலில் வந்த போது தினகரன் மனைவி வெறுப்பேற்றும் வகையில் திவாகரனை நேருக்கு நேராக நக்கலடித்துக்கொண்டிருந்ததுதான் பிரதான காரணம் என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள். தினகரனுக்கு எதிராக திவாகரன் உயர்த்திய

போர்க்கொடியால், சசிகலா குடும்பமே இரண்டு பிரிவுகளாக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. ‘ திவாகரன் பக்கம் இருந்த இரண்டு பேரும் டி.டி.வி பக்கம் வந்துவிட்டனர். அனுராதா பேசிய சில வார்த்தைகள்தான் திவாகரனைக் கொதிக்க வைத்தன’ என்கின்றனர் டெல்டா பிரமுகர்கள். எடப்பாடி பழனிசாமி-ஓபிஎஸ்க்கு ஆதரவு என திவாகரன் பேசிய வார்த்தைகளை, டி.டி.வி தரப்பினர் ரசிக்கவில்லை. ‘ அவர் ஏற்கெனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர். அமைதியாக இருப்பது அவருக்கு நல்லது’ என நேற்று பேசினார் தினகரன். இதற்குத் திவாகரன் தரப்பினரும் பதிலடி கொடுத்தனர். இந்தநிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளுக்குத் தூது அனுப்பியிருக்கிறார் திவாகரன். அவர்களில் பலரும், ‘ மக்கள் செல்வாக்கு சின்னம்மாவுக்குத்தான். டி.டி.வி பக்கமே நாங்கள் நிற்போம்’ என உறுதியாகக் கூறிவிட்டனர்.

தினகரனிடம் தஞ்சமடைந்த திவாகரன் தரப்பு

இந்தப் பதிலை திவாகரன் எதிர்பார்க்கவில்லை. இதைவிடக் கொடுமை, இத்தனை நாட்களாக திவாகரனுக்குப் பக்கபலமாக இருந்த சிவராஜமாணிக்கம், காமராஜ் ஆகிய இருவரும், திவாகரனுக்கு எதிராகத் திரும்பிவிட்டனர். ‘ டி.டி.வியின் செயல்பாடுகளுக்கு சின்னம்மா எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வரும் நேரத்தில் இப்படிச் செய்வது சரியல்ல’ என அவர்கள் கூறியுள்ளனர்.

அதிர்ச்சியில் உறைந்த திவாகரன்

மற்றவர்கள் சென்றதைவிடவும் இந்த இரண்டு பேர் சென்றதை திவாகரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதைப் பற்றி நம்மிடம் பேசிய மன்னார்குடி பிரமுகர் ஒருவர், ” திவாகரனை இயக்குபவர்களின் நோக்கம் என்னவென்று தெரிந்ததால்தான் தினகரனும் ஆவேசப்பட்டார். ஒருகட்டத்தில், ‘ அவர் தனியாகப் பேசிக் கொண்டிருக்கட்டும். நமக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. யார் தனிமைப்படுவார்கள் என்பதை காலம் முடிவு செய்யும்’ என உறுதியாகக் கூறிவிட்டார் தினகரன். திவாகரன் பக்கம் எந்த எம்.எல்.ஏக்களும் இல்லை. நேற்று விவேக் ஜெயராமன் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவும், திவாகரனுக்குக் கருத்து சொல்வதுபோலவே அமைந்துவிட்டது” என்றவர்,

உங்க பாஸ் எப்படி இருக்காரு?

“தினகரனின் தன்னிச்சையான செயல்பாட்டால், தன்னை ஒதுக்குகிறார்கள் என்பதை அறிந்து சில வாரங்களாகவே புகைச்சலில் இருந்தார் திவாகரன். பரோலில் சசிகலா வந்தபோது, இந்த உரசல் அதிகமானது. இதில், திவாகரன் காதுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார் அனுராதா. இதுதான் திவாகரனைக் கோபப்படுத்தியது. ஒவ்வொருமுறை அனுராதா பேசும்போது, ‘ எப்படி இருக்கார் உங்க பாஸ்?’ எனக் கேட்டுவிட்டு, அதில் ‘பாஸ்’ என்ற வார்த்தையைக் கிண்டல் தொனியில் கேட்டதுதான் திவாகரனை எரிச்சல்படுத்தியது. இதனையடுத்து, ‘ பத்து ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை நடத்திய தினகரனுக்கு அரசியல் பதவி கொடுத்தது எங்க அக்கா. அவர் இல்லாவிட்டால், இந்த ஆட்டம் போட முடியுமா? அவரைச்(சசிகலா) சொல்ல வேண்டும்’ என ஆவேசப்பட்டார் திவாகரன்.

சண்டை போடாதீங்கப்பா

இதையெல்லாம் அறிந்துதான், தினகரனுக்கு எதிரான முக்கிய ஆயுதமாக திவாகரனைப் பயன்படுத்தலாம்’ என்ற முடிவுக்கும் ஆளும்தரப்பில் உள்ளவர்கள் வந்தனர். இந்த விவகாரத்தை நீட்டிக்கவும் தினகரன் தரப்பினர் விரும்பவில்லை. ‘ அது மக்கள் மத்தியில் நம்மைப் பற்றிய தவறான மதிப்பீட்டுக்கு வழிவகுத்துவிடும்’ என நினைக்கிறார். அதனால்தான், முக்கியமான சில கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுத்துவிட்டு நகர்ந்து கொள்கிறார். கடந்த சில நாட்களாக நடக்கும் இந்த மோதல்களை அறிந்த சசிகலா, குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரே ஒரு தகவலை மட்டும் அனுப்பியிருக்கிறார். ‘ தயவு செய்து சண்டை வேண்டாம். எல்லோரும் அமைதியாக இருங்கள்’ என்பதுதான் அது. இந்த வார்த்தைகளை திவாகரனும் தினகரனும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை” என்றார் விரிவாக.

https://tamil.oneindia.com/news/tamilnadu/why-divakaran-revolt-against-dinakaran-318253.html

%d bloggers like this: