எல்லா எம்.எல்.ஏ-க்களும் என்னிடம்தான்!”

முதலமைச்சர் பதவி என்பது பெரிய பதவி. ஒரு காலத்திலும் தினகரனால் அந்தப் பதவியை அடைய முடியாது. அவர் ஜாதகத்திலும் அப்படித்தான் உள்ளது. நான்கு கைத்தடிகளை வைத்துக்கொண்டு இந்தப் பதவிக்கு ஆசைப்படலாமா? ராக்கெட் மாதிரி மேலே போன வேகத்திலேயே மண்ணில் விழுந்து விடுவார். எண்ணம் நன்றாக இருந்தால்தான் எல்லாம் நன்றாக நடக்கும்’’ என்று கொந்தளிக்கிறார் திவாகரன்.

மன்னார்குடியிலிருந்து மதுக்கூர் செல்லும் சாலையில் இருக்கிறது சுந்தரக்கோட்டை. சசிகலாவின் தம்பி திவாகரன் பண்ணை வீடு இங்குதான் இருக்கிறது. எப்போதும் அமைதியாகக் காணப்படும் அந்தப் பண்ணை வீடு, திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையே நடக்கும் உச்சகட்ட மோதலால் பிஸியாகிவிட்டது. ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் இருந்த நேரத்தில் திவாகரனைச் சந்தித்தோம். அவரிடமிருந்து அனலாகத் தெறித்து விழுந்தன வார்த்தைகள்…

‘‘திடீரென ஏன் மோதல்?’’

‘‘தினகரன் புதிதாகத் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பணம் வாங்கிக்கொண்டு நிர்வாகிகளை நியமிக்கிறார்கள். தினகரன் வீட்டு வாசலில் நிற்பதற்கே தொண்டர்களுக்குப் பணம் கொடுக்கும் நிலை வந்து விடும் போல் தெரிகிறது. என்னிடம் தொண்டர்கள் பலரும் குமுறலோடு சொல்லவே, இதுபற்றி தினகரனிடம் நான் பேசினேன். உடனே என்னையும் என் மகனையும் அசிங்கப்படுத்தும் விதமாக வெற்றிவேலைத் தூண்டிவிட்டுப் பேசச் சொல்லியிருக்கிறார்.’’

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் உங்களுக்கு கீ கொடுப்பதாகப் பேசப்படுகிறதே?’’

‘‘தினகரன் இப்படிப் பேசித் தன் தவறை மறைக்கப் பார்க்கிறார். ஜெயலலிதாவிடம் செல்லப் பிள்ளைகளாக இருந்த ஓ.பி.எஸ்-ஸின் முதல்வர் பதவியை காலி செய்தார். எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவியையும் காலி செய்யப் பார்த்தார். நினைத்தது நடக்கவில்லை. இவர்கள் இரண்டு பேரும் சசிகலாமீது ஆயிரம் மடங்கு அனுதாபத்தோடுதான் இப்போதும் இருக்கிறார்கள். நான்தான் எல்லோருக்கும் கீ கொடுப்பேன்; எனக்கு யாரும் கீ கொடுக்க முடியாது.’’

‘‘குடும்பத்தினர் யாரும் கட்சியில் தலையிட முடியாது என தினகரன் சொல்லியிருக்கிறாரே?’’

‘‘சசிகலா குடும்பத்தின் பெயரைச் சொல்லித்தான் எம்.பி பதவியெல்லாம் பெற்றார் தினகரன். அவர் வானத்திலிருந்து நேராக ஜெயலிதா வீட்டில் குதித்து விடவில்லை. அவருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதைவிட அதிகமான பங்கு எனக்குக் கட்சியில் இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டனாக எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இருந்தவன் நான். தினகரனுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவன் நான். என் மகன் ஜெயானந்த் இன்றைக்கும் அ.தி.மு.க-வில்தான் உறுப்பினராக இருக்கிறார். அ.தி.மு.க-வின் சுவடே கட்சியில் இருக்கக்கூடாது; தானும் தன் குடும்பமும் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தினகரன் தனிக்கட்சியை ஆரம்பித்திருக்கிறார். நானும் என் மகனும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராகவே இல்லை. அந்தக் கட்சியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. என்னை அந்தக் கட்சியுடன் இணைத்துப் பேசினால், தினகரன்மீது வழக்கு தொடரப்படும்.’’

‘‘சசிகலாமீது இருக்கும் கோபத்தால்தான் நீங்கள் தினகரனை விமர்சிப்பதாக அவர் சொல்கிறாரே?’’

‘‘தினகரனை அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக அறிவித்ததற்காக சசிகலாமீது எனக்குக் கோபம்தான். அதில் ஒன்றும் தப்பில்லை. சசிகலாவின் பல நடவடிக்கைகளை நான் ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா ஆனதையும், முதல்வர் ஆவதற்கு முயற்சி செய்ததையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தினகரனின் சூழ்ச்சியால்தான் இத்தனையும் நடந்தது. தினகரனுக்கு நன்றாகவே தெரியும், ‘சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சீக்கிரமே சிறை சென்று விடுவார்’ என்று. சசிகலா முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை கண்ணைக் கட்டி அழைத்துக்கொண்டு சென்றது ‘தினகரன் அண்டு கோ’தான். ‘சசிகலா சிறைக்குச் சென்றுவிடுவார்,  நாம் அந்த இடத்தில் உட்காரலாம்’ என சதுரங்க விளையாட்டில் காய்கள் நகர்த்துவது போல் நகர்த்திக் கச்சிதமாகச் செய்து விட்டனர்.

சசிகலா சிறை செல்வதற்காக காரில் கால் வைக்கும் நேரத்தில், தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டவர் தினகரன். சசிகலா மறுத்தபோது, ‘துணைப் பொதுச்செயலாளர் பதவியாவது கொடு’ எனக் கேட்டார். ஜெயிலுக்குச் செல்கிறவரிடம் யாராவது பதவி கேட்பார்களா? தினகரன் கேட்டார். அப்போது எங்களோடு செங்கோட்டையன் இருந்தார். அவர்தான் சாட்சி. ஜெயலலிதா இறந்த சமயத்தில் ஓ.பி.எஸ்-ஸை முதல்வராக ஆக்கியிருக்கவில்லை என்றால், அப்போதே கட்சி உடைந்திருக்கும். அந்த சமயத்தில்கூட தினகரன் முதலமைச்சராகப் பொறுப்பேற்க முயற்சி செய்தார். அவரின் பேராசைதான் இன்றைக்கு நடக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். கட்சிக்காக உழைத்து சிறை சென்றவர்கள் ஏராளம். அவர்களின் தியாகத்தில் கோட்டை கட்டப் பார்த்தார் தினகரன். அவர் ஃபிராடு செய்து சிறைக்குச் சென்றவர். அரசியல் போராட்டத்தில் ஒன்றும் சிறைக்குச் செல்லவில்லை.’’

‘‘சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவோம் என தினகரன் சொல்லியிருக்கிறாரே?’’

‘‘அவர் சூதுக்காரர். அதனால்தான் ஜெயலலிதா அவரை விரட்டி வைத்திருந்தார். ஜெயலலிதா இருந்தபோது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தினகரன் எங்கே இருந்தார்? ஆர்.கே நகர் தேர்தலில் இரட்டை இலைக்கு எதிராக நின்று, அதற்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டு ஜெயித்திருக்கிறார். எப்படி ஜெயித்தார் என எனக்குத் தெரியும். அதையெல்லாம் சொன்னால் அசிங்கம். இப்போதே அவரிடமிருந்த பாதி பேர் மீண்டும் அ.தி.மு.க-வுக்குச் சென்று விட்டார்கள். தாய்மாமனிடம் கூட சரியாக நடந்துகொள்ளாதவரிடம் எப்படி இருப்பார்கள்? தினகரனின் துரோகங்களை தோலுரித்துக் காட்டுவேன். தினகரன் என்ற அழிவு சக்தி தலைமைக்கு வரக்கூடாது; வரவும் விடமாட்டேன்.’’

‘‘சிறைக்குச் சென்றபிறகு சசிகலாவைச் சந்தித்தீர்களா?’’

‘‘மூன்று முறை பார்த்தேன். தினகரனும் உடன் இருந்தார். ஒருமுறை சசிகலாவை வைத்துக்கொண்டே, ‘திவாகரன் அரசியலுக்கு வரமாட்டார்’ என என்னைப் பற்றி மீடியாவில் பேசுவதற்கு நீ யார், என தினகரனிடம் கேட்டேன். ‘சசிகலாதான் சொல்லச் சொன்னாங்க’ என அவர் முன்பே பொய் பேசினார் தினகரன். அதைக் கேட்டு என்ன செய்வதென புரியாமல் சசிகலா விழித்தார். தினகரனின் செயல்பாடுகள் குறித்து யாராவது தபால் போட்டால், அதை தினகரனிடமே கொடுத்து விடுவார் சசிகலா. அந்த அளவுக்குப் புத்திசாலி என் அக்கா. அவருக்கே தெரிகிறது, ‘தினகரன் கையை மீறிச் செல்கிறார்’ என. ஆனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். இப்போதும், நடக்கிற பிரச்னைகளையெல்லாம் பார்த்துவிட்டு என்னை சசிகலா கூப்பிடுவார். ஆனால், அவரை சந்திக்கவிடாமல் செய்துவிடுவார் தினகரன். இதுபோல் பல தடவை நடந்திருக்கிறது.’’

‘‘தினகரனுடன் நீங்கள் சமாதானமாகப் போக வேண்டும் என குடும்பத்தில் பேச்சு நடக்கிறதா?’’

‘‘நான் தினகரனுடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை. பலவிதங்களில், பல கால கட்டங்களில், குடும்பரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல துரோகங்கள் செய்தவர் அவர். சசிகலாவின் கணவர் நடராசன் சிகிச்சையில் இருந்த சமயத்தில் மருத்துவமனை பக்கமே வராதவர் தினகரன். அவர் இறக்கப் போகிறார் எனத் தெரிந்துகொண்டு மருத்துவமனைக்கு வந்தார். அப்படிப்பட்ட தினகரன், நடராசன் இறந்தபிறகு சசிகலா தஞ்சாவூரில் இருக்கிறார் என்பதற்காக தாடி வைத்துக்கொண்டு திரிந்தார். ‘என்னடா இவன் இப்படி நடிக்கிறானே’ என அப்பவே மனசு உடைஞ்சு போச்சு. துக்க வீட்டுக்கு வரும்போதுகூட ஜெயா டி.வி ஆட்களோடுதான் வருவார். அவரும் அவர் மனைவியும் நிற்பதை மட்டும் டி.வி-யில் காட்டுவார்கள்.

பரோலில் வந்த சசிகலா தஞ்சாவூரில் தங்கியிருந்தபோது, எப்போதும் பக்கத்தில் தினகரன் மனைவி அனுராதா இருப்பார். சசிகலாவோடு யாரும் பேசிவிடக் கூடாது என உள்நோக்கத்தோடு செயல்பட்டவர் தினகரன். அனுராதா என் அண்ணன் மகள். அவர் எங்கோ ஜாதகம் பார்த்திருக்கிறார். அதில், ‘தினகரனுக்குப் போட்டியாக திவாகரன்தான் வருவார்’ என்றிருக்கிறார்கள். அதனால் கணவனும் மனைவியும் சேர்ந்துகொண்டு என்னை அசிங்கப்படுத்துகிறார்கள். அனுராதா என்னை ‘பாஸா… இல்லை, லூஸா?’ என்றுகூட பேசி வருகிறார்.’’

‘‘எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி எப்படி இருக்கிறது?’’

‘‘அவருக்கு எல்லோரும் கொடுக்கிற குடைச்சலை எல்லாம் தாங்கிக்கொண்டு நன்றாகவே ஆட்சி செய்கிறார். மத்திய பி.ஜே.பி அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு எந்த அனுசரணையும் கிடைக்கவில்லை. அதனால் இப்போது எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்திருக் கிறார்கள். எடப்பாடியிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. அவருக்கு சில பிரச்னைகள் இருக்கின்றன. அதையெல்லாம் சமாளித்து, நெளிவு சுளிவோடு சிறப்பாக ஆட்சி செய்கிறார் அண்ணன் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு மட்டும் இல்லை, எல்லோருக்கும் துரோகம் செய்கிறவர் தினகரன்தான்.’’

‘‘முதல்வர் எடப்பாடிக்கும், மத்திய அரசுக்கும் ஆதரவாக நீங்கள் செயல்படுவதாக தினகரன் தரப்பு சொல்கிறதே?’’

‘‘ஆதரவாகச் செயல்பட்டால் ஏன் என் வீட்டில் வருமானவரித் துறை ரெய்டு நடந்தது? 152 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. ஏன் தினகரன் வீட்டில் மட்டும் ரெய்டு நடத்தப்படவில்லை? என் சம்பந்தி ஏ.டி.எஸ்.பி பதவியில் இருக்கிறார். அவரை எடப்பாடி தரப்பினர் பனிஷ்மென்ட் டிரான்ஸ்பர் செய்து கரூரிலிருந்து வேலூருக்கு மாற்றியிருக்கிறார்கள். இதிலிருந்தே தெரியும், யார் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்று!’’

‘‘மகாதேவன் இறுதிச் சடங்குக்கு வந்த அமைச்சர்கள் சிலரை நீங்கள்தான் தூண்டிவிட்டதாக வெற்றிவேல் குற்றம் சாட்டுகிறாரே?’’

‘‘அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர்கள், பல எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் தினகரனின் செயல்பாடுகள் குறித்து என்னிடம் மனக்குமுறல்களைக் கொட்டினார்கள். ‘நீங்கள் ஏன் தினகரனுக்கு அடிமையாக இருக்கிறீர்கள்? எதிர்த்து செயல்படுங்கள்’ என்று சொன்னேன். முதலில் ஆர்.கே நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தினகரனுக்காக முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் ஓட்டுக் கேட்டார்கள். ‘ஏன் எல்லோரும் அவர் பின்னால் சென்றீர்கள்? அவர் இருக்கும் இடம் உருப்படாது. உள்நோக்கத்தோடுதான் எதையும் செய்வார். நீங்கள் எல்லோரும் விழித்துக்கொள்ளுங்கள்’ என அந்த சமயத்திலேயே சொன்னேன். இதில் மறைக்க எதுவும் இல்லை.’’

‘‘இப்போது தனிக்கட்சி ஆரம்பிப்பீர்களா?’’

‘‘தனிக்கட்சி ஆரம்பிக்கவேண்டிய அவசியமே இல்லை. அ.தி.மு.க அம்மா அணியில் செயல்படுவேன். தினகரன்தான் தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருக்கிறார். அவர் இல்லாமல் கட்சி நடத்த முடியாது’ என நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கம் செய்தார் தினகரன். இப்போது அவர் ஆரம்பித்துள்ள அ.ம.மு.க-வுக்கு யார் பொதுச்செயலாளர்? அவர் எங்கே இருக்கிறார்?’’

‘‘எத்தனை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கிறது?’’

‘‘அ.தி.மு.க-வில் இருக்கிற எம்.எல்.ஏ-க்கள் எல்லோரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள். எடப்பாடி அண்ணன்கிட்ட இருக்கிற எம்.எல்.ஏ-க்களும் என்னிடம்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், நான் யாரிடமும் பேரம் பேச மாட்டேன். ஆனால் தினகரனோ, முதல் நாள் எடப்பாடியை எதிர்ப்பார்; அடுத்த நாள், ‘என்னைப் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களிடமே வந்து விடுகிறேன்’ என பேரம் பேசுகிறார். நான் இருக்கிறது மன்னார்குடியில். ஆனால், என் காது உலகம் பூராவும் இருக்கும். எனக்கு எந்த எல்.எல்.ஏ ஆதரவும் இல்லை என்கிறவர்கள், ஏன் என்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும்?’’

‘‘மோதலுக்குப் பிறகு ஆளும்தரப்பிலிருந்து உங்களிடம் யாராவது பேசினார்களா?’’

‘‘அண்ணன் எடப்பாடி, அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ் என பலரும் என்னிடம் எப்போதும் பேசுவார்கள். நலம் விசாரிப்பார்கள். அரசியல் என்பது வேறு; நட்பு என்பது வேறு.’’

‘‘உங்கள் மகன் ஜெயானந்த் போஸ் மக்கள் பணியகம் என்ற பெயரில் அமைப்பு நடத்துகிறாரே?’’

‘‘அது ஒரு டிரஸ்ட். அதன்மூலம் பல சமூக சேவைகள் செய்யப்படுகின்றன. சின்னப் பையன்கள் சேர்ந்து நல்லது செய்ய நினைப்பதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? அது எந்தக் காலத்திலும் அரசியல் இயக்கமாக மாற்றப்படாது என ஜெயானந்தே தெரிவித்திருக்கிறார்.’’

‘‘சசிகலாவை  சிறையிலிருந்து  வெளியே கொண்டுவர முயற்சி எடுக்கப்படுகிறதா?’’

‘‘சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், அந்த முயற்சிக்குத் தடை ஏற்படுத்தப்படுகிறது. சசிகலாவை தினகரன், அனுராதா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் மட்டும்தான் சந்திக்க முடியும். உண்மையைச் சொல்லி விடுவார்கள் என்பதால், வேறு உறவினர்கள் யாரையும் பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை. இதற்காகக் கைத்தடிகள் சிலரை பெங்களூரிலேயே வைத்திருக்கிறார்கள் இவர்கள். அதிகாரங்கள் அனைத்தையும் தினகரன் கையில்தான் கொடுத்துவிட்டுச் சென்றார் சசிகலா, ஆனால், சசிகலாவை வெளியே எடுப்பதற்கு அவர்கள் எதையும் செய்யவில்லை. சசிகலா உள்ளே இருந்தால்தான் நல்லது என இவர்கள் நினைக்கிறார்கள்.’’

‘‘குடும்பத்திலேயே மோதிக்கொண்டால் இழப்பு யாருக்கு?’’

‘‘போருக்குச் சென்றால் உயிர் போகும். இழப்புகளுக்குப் பயந்தால் நல்ல மனிதராக இருக்க முடியாது.

நன்றி -விகடன்

%d bloggers like this: