டிஷ் வாஷ் & ஹேண்ட் வாஷ் செலவும் குறைவு… கைகளுக்கும் பாதுகாப்பு!

நீங்களும் செய்யலாம்

‘`வாழ்க்கையில தோற்றுப்போனாலோ, கையில நாலு காசு பார்க்கணும்னாலோ மட்டும்தான் வேலை பார்க்கணும்னு இல்லையே… என்னுடைய ஒவ்வொரு நாள் பொழுதையும் சுறுசுறுப்பாகவும் உபயோகமாகவும் கழிக்கணும்னு ஆசை. எனக்கு ரெண்டு மகள்கள், ஒரு மகன். எல்லாரையும் நல்லபடியா செட்டில்

பண்ணிக்கொடுத்துட்டேன். பேரன் பேத்திகள் பார்த்துட்டேன். அன்பான, அனுசரணையான கணவர் இருக்கார். 63 வயசுல இதையெல்லாம் தாண்டி என்ன வேணும்னு மத்தவங்களுக்குத் தோணலாம். ஆனா, உழைக்காத நாள் உபயோகமான நாளா கழியாதுங்கிறது என் எண்ணம். மனசுலயும் உடம்புலயும் தெம்பிருக்கிறவரைக்கும் உழைக்கணும்…’’ – உற்சாகமாகப் பேசுகிறார் புஷ்பாவதி தீனதயாளன். இந்த வயதிலும் ஹேண்ட் வாஷும் டிஷ் வாஷும் செய்வதில் செம பிஸி.

‘`எனக்கு எப்போதும் புதுசு புதுசா ஏதாவது கத்துக்கணும்னு ஆசை. ஏற்கெனவே ஐந்து வகையான இன்ஸ்கர்ட் தச்சு விற்பனை பண்ணிட்டிருந்தேன். சமீபத்துலதான் டிஷ் வாஷ், ஹேண்ட் வாஷ் செய்யக் கத்துக்கிட்டேன். கடைகள்ல கிடைக்கிற இந்த அயிட்டங்கள்ல கெமிக்கல்தான் பிரதானமா இருக்கும். அதனால நிறைய பேருக்கு ஸ்கின் அலர்ஜி வருது. நான் வேப்பிலை, எலுமிச்சை, புதினா உட்பட இயற்கையான பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கிறேன். கடைகளில் வாங்கறதைவிட செலவும் குறைவு; கைகளுக்கும் பாதுகாப்பு…’’ என்கிறவர் இவற்றை ஹோட்டல்கள், கடைகள், ஆஸ்பத்திரிகளுக்கு சப்ளை செய்கிறார்.

என்னென்ன தேவை… எவ்வளவு முதலீடு?

அடிப்படையான கெமிக்கல்கள், தேவையான பழங்கள், மூலிகைகள், ஃபுட் கலர்ஸ், வாசனை, பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பாட்டில்கள். பாத்திரம் துலக்கும் திரவத்தில் லெமன், வேப்பிலை மற்றும் புதினா ஃபிளேவர்களும், ஹேண்ட் வாஷில் விருப்பமான ஃபிளேவர்களும் செய்ய முடியும். ஆரஞ்சுப் பழத்தின் சதைப் பற்றுடன் வேண்டுமானாலும் செய்ய முடியும். பழங்களையும் மூலிகைகளையும் சீஸனில் மொத்தமாக வாங்கிப் பதப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். இரண்டும் தலா மூன்று லிட்டர் தயாரிக்க ஆயிரம் ரூபாய் முதலீடு தேவை.

லாபம்?

கடைகளில் விற்பதைவிடக் குறைவான விலையில் தரலாம். பாதிக்குப் பாதி லாபம் கிடைக்கும். ஆரம்பத்தில் 50 மில்லி அளவு நிரப்பி, சாஷேவாக விற்கலாம். ஆர்டர் அதிகரித்த பிறகு பாட்டில்களுக்கு மாறலாம். வீடுகள்தான் உங்கள் முதல் இலக்கு. கடைத் தயாரிப்பு களைவிடவும் இவை விலை குறைவு, கைகளுக்குப் பாதுகாப்பு என்கிற நம்பிக்கை அவர்களுக்கு வந்துவிட்டால், அவர்களே உங்களுக்கு விளம்பர வேலைகளைப் பார்த்து, பிசினஸை வளர்த்துவிடுவார்கள். அதைத் தொடர்ந்து அலுவலகங்கள், கேன்டீன்கள், ஹோட்டல்கள் போன்ற இடங்களில் ஆர்டர் பிடிக்கலாம்.

கடன் உதவி?

ஒரு லிட்டர் தயாரிப்பிலிருந்து தொடங்க லாம். அக்கம்பக்கத்தினர் இரண்டு, மூன்று பெண்களாகச் சேர்ந்து ஆளுக்குக் கொஞ்சம் முதலீடு போட்டு ஆரம்பிப்பது சுலபமாக இருக்கும். அதில் வரும் லாபத்தை வைத்து அதிகளவில் தயாரிக்கலாம். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருப்பவர்கள் என்றால் உள்கடன் வசதி பெற்றும் தொழில் தொடங்கலாம்.

பயிற்சி?

அரை நாள் பயிற்சிக்குத் தேவையான பொருள்களுடன் சேர்த்துக் கட்டணம் 750 ரூபாய்.

One response

  1. ஜெயகுமார் சக்கரவர்த்தி

    sir mobile no kidaikkuma for purchasing the dish liquid bar sir

%d bloggers like this: