உழவன் செயலி’யில் உள்ளது என்ன?

விவசாயிகளுக்கு வேளாண் தகவல் சேவை வழங்கும் வகையில் தமிழக அரசு வேளாண்மைத்துறை சார்பில் துவக்கப்பட்ட இணையதளம், 7 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் போன்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் பயன்படுத்தும் வகையில் ‘உழவன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலம், வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

வேளாண் மானியத் திட்டங்கள் பற்றி அறிதல்

தமிழக அரசின் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்கள், இன வாரியாக வழங்கப்படும் மானிய சதவிகிதம் குறித்தான விவரங்கள் மற்றும் பயனாளிகளின் தகுதிகள் பற்றி அறிந்துகொள்ளலாம்.

பயனாளி திட்ட முன்பதிவு

விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உயர் மதிப்புள்ள இடுபொருள்கள், டிராக்டர், பவர்டில்லர் போன்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் நிழல்வலைக் குடில், பசுமைக் குடில் போன்ற தோட்டக்கலை சார்ந்த திட்டப் பயன்களை மானியத்தில் பெறுவதற்கு, இச்சேவை மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தபின் மூதுரிமை எண் ஆகியவை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இச்சேவையின் மூலம் திட்டப் பயன்கள் சில விவசாயிகளுக்கு மட்டுமே செல்வது தவிர்க்கப்படும்.

பயிர் காப்பீட்டு விவரம் அறிதல்

அகில இந்திய அளவில் முதல் முயற்சியாகப் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளும், தாங்கள் பயிர் காப்பீடு செய்த நிலையினை இழப்பீடு பெறும் வரையில், தொடர்ந்து இச்சேவையின் மூலம் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். இதற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் (அல்லது) நிலப் புல எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

உரம் இருப்பு அறிதல்

கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகளில் முக்கிய உரங்களின் இருப்பு விவரங்களை, நிகழ்நிலை முறையில் உடனுக்குடன் தெரிந்து, அதனைப் பெற்று காலத்தே பயிர் சாகுபடி பணிகளை மேற் கொள்ளலாம். இதன் மூலம், உர விற்பனையில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்தப்படுகிறது.

விதை இருப்பு விவரம் அறிதல்

விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கடைகளில் உள்ள விதை இருப்பினை நிகழ்நிலை முறையில், இச்சேவையின் மூலம் தெரிந்துகொள்ளலாம். அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் பயிர் மற்றும் இதர வாரியான விதை இருப்புத் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். சம்பந்தப் பட்ட நிறுவன மேலாளரின் கைப்பேசி மற்றும் முகவரி இச்சேவை வாயிலாக அளிக்கப்படுவதால், விவசாயிகள் பயிர் பருவ காலத்தில் உடனடியாக விதை வாங்குதல் எளிதாகிறது.

வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள்

வேளாண் இயந்திர மயமாக்கல் முறை பரவலாகி வரும் இத்தருணத்தில், விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை வாடகைக்குப் பயன்படுத்திக் கொள்ள அரசு மற்றும் தனியார் மையங்களை இச்செயலி மூலம் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

விளைபொருள்களின் சந்தை விலை அறிதல்

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருள்களுக்கேற்ற தகுதியான விலை பெறும் பொருட்டு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், ஏலத்தில் அன்றைய தேதியில் விற்பனையான விளை பொருள்களின் விலையை நிகழ்நிலை முறையில் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்றாற்போல் தங்கள் விளைபொருள்களைக் கூடுதல் விலை கிடைக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்துச் சென்று பயனடையலாம்.

வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதல்

விவசாயிகள் தங்களது பகுதியில் அடுத்த 4 நாள்களுக்கான வானிலை நிலவரங்கள்-மழை மற்றும் தட்பவெப்ப அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பயிர் சாகுபடி பற்றிய அறிவுரைகளை அறிந்து கொள்ளலாம். இந்த அறிவுரைகள் ஒவ்வொரு 4 நாள்களுக்கு ஒருமுறை செயலி மூலம் வழங்கப் படுகிறது.

வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் வருகை

கிராம அளவிலான வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் விவசாயிகளைச் சந்தித்து ஆலோசனை வழங்கும் பொருட்டு நிரந்தரப் பயணத் திட்டம் ஒன்றை உருவாக்கி வேளாண் துறை செயலாற்றி வருகிறது. இச்சேவையினை விவசாயிகள் மேலும் துரிதமாகப் பெறும் வகையில், சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரின் பெயர், கைப்பேசி எண், அலுவலரின் அடுத்த கிராம வருகை இடம் மற்றும் தேதியினை இச்செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இதன் மூலம் விவசாயிகள் மற்றும் துறை அலுவலர்களின் நடப்பு பலப்படுத்தப் படுகிறது. இச்சேவையில் சுமார் 40 வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் ஒரு கிராமத்திற்கு மாதம் இருமுறை சென்று விவசாயிகளைச் சந்தித்து வருகிறார்கள்.

தற்போது செயலி வெளியிடப்பட்டுள்ளதால், விவசாயிகளின் பயன்பாடுகள் மற்றும் தேவைகளுக்கு தக்கபடி மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

இச்செயலியை

https://bit.ly/2HfRyLu என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.

%d bloggers like this: