Advertisements

சித்ரா பெளர்ணமி

சித்திரைத் தொடங்கி ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியையொட்டி வரும் நாள் விசேஷமாகத் திகழும். அவ்வகையில், சித்ரா பெளர்ணமியும் உன்னதமானது. அம்பாள் வழிபாட்டுக்கும் சித்த புருஷர்களை வணங்கித் தொழவும் உகந்த திருநாள் இது. சித்ரா பௌர்ணமி அன்றுதான் மீனாட்சியம்மை சொக்கநாதரை மணந்துகொண்டாள். 

சித்திரை மாத வளர்பிறை அல்லது தேய்பிறை சப்தமி அன்று, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது, சித்ரகுப்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு முதல் நாளான சஷ்டி அன்று விரதம் இருந்து, அன்று இரவு கலச ஸ்தாபனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். விரத நாளன்று அதன் மகிமையைச் சொல்லும் (முருகனுக்கு சிவனாரால் அருளப் பெற்ற) திருக்கதையைப் படிப்பது விசேஷம். இதனால் நம் பாவச்சுமைகள் குறையும் என்பது ஐதீகம்.
குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்று கூறப்படுகிறது.
நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டுக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.
காஞ்சிபுரம் – கலவை சாலையில் உள்ள ஐயங்கார் குளம் எனும் ஊரில் உள்ள சஞ்சீவிராயர் கோயில் அருகே நடவாவிக்கிணறு உள்ளது. இதனுள்ளே மண்டபம் ஒன்று உண்டு. சித்ரா பௌர்ணமியன்று மட்டும் இக்கிணற்றிலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள் . அன்று மாலை, அடியில் உள்ள மண்டபத்தில் காஞ்சிவரதராஜப் பெருமாள் எழுந்தருள்வார்.

Advertisements
%d bloggers like this: