Advertisements

அழியும் தவளைகள், அதிகரிக்கும் கொசுக்கள்… உணவுச்சங்கிலியில் இன்னுமொரு விரிசல்!

ன்றைக்குக் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோடிக்கணக்கில் பணம் செலவழித்துக்கொண்டிருக்கிறோம். இன்னும்கூட நம்மால் அதில் வெற்றியடைய முடியவில்லை. ஆனால், இந்தப் பணியை நமக்காகக் காலங்காலமாக இலவசமாகவே செய்து வந்தவை தவளைகள்.

உலகம் முழுவதும் பலவகையான தவளை இனங்கள் இருக்கின்றன. இவை உயிர்ச்சங்கிலியில் மிக முக்கியமான அங்கம். ஆனால், பல்வேறு செயல்பாடுகளால் இன்றைக்கு அந்த உயிர்ச்சங்கிலி உடைந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. தவளைகளின் அழிவும் உயிர்ச்சங்கிலி உடைந்ததற்கு முக்கியமான காரணம். இந்தப் பூமியில் ஒரு செல் உயிரியான அமீபா முதல் யானை வரை அனைத்தும் தேவையின் அடைப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன. தேவையற்றது என எதுவுமே இல்லை. அனைத்து உயிர்களும் தேவைக்கு ஏற்ற அளவில் இருப்பதுதான் உயிரியல் சமநிலை. ஆனால், தற்போது பல உயிரினங்கள் அழிந்தும், குறைவான எண்ணிக்கையிலும் இருப்பதால் உயிரியல் சமநிலை சிதிலமடைந்து கிடக்கிறது.

தவளை

தவளைகளின் அழிவால் மனித இனம் இன்றைக்குப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது. கோடிக்கணக்கில் செலவழித்தாலும், இன்றைக்கும் கொசுக்களை ஒழிக்க நம்மால் முடியவில்லை. இந்தக் கொசுக்கள் மூலமாகப் பல்வேறு விதமான நோய் பாதிப்புக்குத் தொடர்ந்து ஆளாகி வருகிறோம். ஆனால், எந்தச் செலவும் இல்லாமல் கொசுக்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தன தவளைகள். கொசுக்கள் நீர்நிலைகளில்தாம் முட்டையிடும். அந்த நீர்நிலைகளில் உள்ள தவளைக்கு (தலைப்பிரட்டை) இந்த முட்டைகள்தாம் பிரியாணி. லட்சக்கணக்கான முட்டைகளை இந்தத் தலைப்பிரட்டைகள் அழித்து வந்தன. ஆனால், நீர்நிலைகளில் சாக்கடை கலந்தது, தவளைகள் வசிக்கத் தோதான இடங்கள் இல்லாமல் போனது போன்ற பல்வேறு காரணங்களால் தவளைகளும், தலைப்பிரட்டைகளும் அழிந்து வருகின்றன. இதனால் கொசுக்களின் கொட்டம் அதிகமாகி வருகிறது.

இப்படி இயற்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த உயிரினமான தவளையைக் காக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தவும், மக்களிடம் இதுதொடர்பாக விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை ‘தவளையைக் காக்கும் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதுதவிர ஏப்ரல் கடைசி சனிக்கிழமையில் உலகக் கால்நடை மருத்துவதினமும், தேசியப் பறவையியல் தினமும் கொண்டாப்பட்டு வருகிறது.

உலகக் கால்நடை மருத்துவ தினம்

கால்நடைகளுக்கு அறிவியல்ரீதியான பாதுகாப்பான மருத்துவத்தை உறுதி செய்வதுதான் இந்த நாளின் நோக்கம். 2000-ம் ஆண்டு தொடங்கிய இந்தத் தினத்துக்கு இந்த ஆண்டோடு பதினெட்டு வயது. கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுபவை கால்நடைகள். ஆடு, மாடு, கோழி போன்றவை கிராமப்புற பெண்களின் நடமாடும் ஏ.டி.எம் ஆக இருக்கின்றன. இரண்டு பால் மாடுகள் இருந்தால் ஒரு நடுத்தரக் குடும்பம் நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டலாம் என்ற நிலையிருக்கிறது.

கால்நடைகள்

கால்நடைகள் மூலமாக நல்ல வருமானம் ஈட்டும் பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது கால்நடை பல்கலைக்கழகங்களும், அதில் பணியாற்றும் கால்நடை மருத்துவ வல்லுநர்களும்தாம். கால்நடை மருத்துவம் மூலமாகக் கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படுகின்றன. கிராமப்புறங்களில் இன்றைக்கும் கால்நடைகளுக்குக் கைவைத்தியம் பார்க்கிறார்கள். இதன் மூலம் சின்ன சின்னப் பிரச்னைகளை வேண்டுமானால் சரிசெய்யலாம்.

ஆனால், பல நேரங்களில் கைவைத்தியம் கால்நடைகளை மேலும் மோசமாக்கி விடுகிறது. உதாரணமாக மாடுகளின் கொம்புகளில் அடிபட்டால் கருப்பட்டியுடன் சுண்ணாம்பு கலந்து கொம்பில் தடவி விடுவார்கள். இது ஒருவகையில் சரியானதுதான் என்றாலும் சிலர், சுண்ணாம்புக் கலவையின் மீது தலைமுடியையும் வைத்துக் கட்டி விடுவார்கள். காயம் ஆறியவுடன் முடிகளை எடுக்கும்போது மாடுகளுக்கு அதிக எரிச்சலும், வலியும் ஏற்படும். சரியாகத் தீவனம் எடுக்காத மாடுகளின் நாக்கை வெளியே இழுத்து சிலர், உப்பை வைத்துத் தேய்ப்பார்கள். இது மாடுகளுக்குக் கடுமையான வலியை ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற முரட்டு வைத்தியங்களைச் செய்யாமல், முறையான வைத்தியத்தைச் செய்து கால்நடைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதுதான் உலகக் கால்நடை மருத்துவ தினத்தின் நோக்கம். நமது ஊரில் போதுமான கால்நடை மருத்துவர்கள் இல்லை என்பதாலும், கிராமப்புறங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் சரியாக வருவதில்லை என்பதாலும் வேறு வழியில்லாமல் கைவைத்தியத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தநிலை வருங்காலத்திலாவது மாறவேண்டும்.

தேசியப் பறவையியல் தினம்

சிறகடிக்கும் சிட்டுக்கள், தோகை விரித்தாடும் வண்ண மயில்கள், தேன்சிட்டுக்கள், கரிச்சான்கள், காடை, கவுதாரிகள், மரங்கொத்திகள் என இந்தப் பூவுலகில் சிறகடித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற பறவைகளைக் கொண்டாடுவதுதான் இந்தத் தினத்தின் நோக்கம். பறவைகளைப் பார்ப்பது, புகைப்படங்கள் எடுப்பது, பறவைகளின் செயல்பாடுகளைக் கவனிப்பது எனப் பறவை ஆர்வலர்கள் வெவ்வேறு விதமாக இந்தத் தினத்தைக் கொண்டாடுவார்கள். தவளைகளைப் போலவே, உயிர்ச்சங்கிலியில் முக்கியத்துவம் வாய்ந்தவை பறவைகள். காட்டில் வாழும் ஒவ்வொரு பறவையும், அந்தக் காட்டின் வளர்ச்சியில் ஏதாவதொரு வகையில் பின்னிப்பிணைந்திருக்கும்.

Advertisements
%d bloggers like this: