14 அண்டங்கள் மோதிய பிரமாண்ட நிகழ்வு… விண்வெளி அறிவியலில் புதிய மைல்கல்!

பிரபஞ்சம்; வானவியலின் பிரமிப்பான பிரமாண்டமான தலைப்பு. அதை ஆராய ஆராய பல்லாயிரக்கணக்கான வித்தைகளை நமக்கு காட்டிக்கொண்டு இருக்கிறது. அதில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்பது போல் அனைத்து அதிசயங்களுமே ஏதோவொரு விதத்தில் நம்மை விழிவிரிய வைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. அதற்கு ஏற்றாற்போல் தற்போதைய நிகழ்வொன்று நம்மைக் கடந்த காலத்துக்கு இட்டுச்செல்லக் காத்திருக்கிறது. அண்டமாக்கம் பற்றி நாம் புரிந்துகொள்ள உதவும் ஒரு நிகழ்வு அது.

பெருவெடிப்புத் தேற்றத்தின் அடிப்படையில் பிரபஞ்சம்  வெடித்துச் சிதறிய பிறகு பல்வேறு நட்சத்திரக் கூட்டங்களாக தனித்தனி அண்டங்களாகப் (Galaxy) பிரிந்த கூறுகள், பிறகு பல மாற்றங்களுக்கு உட்பட்டன. அந்தந்த அண்டங்களுக்கே உரித்தான ஈர்ப்புவிசைக்குத் தகுந்தவாறு அவற்றைச் சுற்றி நட்சத்திரங்கள், விண்கற்கள் போன்றவை சுழலத் தொடங்கின. இவையெல்லாம் நாம் அறிந்ததே. ஆனால், வெடித்துச் சிதறிய மூலக்கூறுகள் அண்டமயமாக்கலில் ஈடுபட்டபோது அவற்றின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பது நமக்குப் புரியாததால் பேரண்டத்தின் செயற்பாடுகளை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தோம்.

சுமார் 12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்வில் இருந்து சில சிறுசிறு அண்டங்கள் கூட்டமாக ஒரே இடத்தில் ஈர்க்கப்பட்டு அவை மொத்தமாக இணைந்து ஒரே பெரிய அண்டமாக உருவாகிய செயல்பாடுகள் பற்றி நமக்குப் புரியாமல் இருந்தது. ஆனால், பேரண்டத்தின் நமது பூமியில் இருந்து பல பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருந்த ஒரு அண்டக்கூட்டம் மொத்தமாக இணைவதை நாம் இப்போது காண முடிகிறது. அது நடந்து பல மில்லியன் ஆண்டுகள் கடந்து அதன் ஒளி நமது பூமியைத் தற்போதுதான் வந்தடைந்தது. அதே நட்சத்திரக் கூட்டம் தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால், அண்டமாக்கச் செயற்பாடு குறித்துப் புரிந்துகொள்ள அதன் இப்போதைய நிலவரம் உதவியாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அண்டமாக்கம்

Photo Courtesyt: M. Kornmesser/ESO

விஞ்ஞானிகள் மொத்தம் 14 அண்டங்கள் பிரமாண்டமாக மோதும் ஒரு நிகழ்வைத் தற்போது கண்டறிந்துள்ளனர். இத்தகைய பெரிய ஒரு மோதலை, அண்டங்கள் ஒன்றாக இணைவதை இதுவரை கண்டதேயில்லை என்பதால் விண்வெளி அறிவியலில் இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அதன் தோற்றம் பிரபஞ்சத்தின் தற்போதைய வயதைவிட பத்து மடங்கு குறைவாக இருப்பதைப்போல் உள்ளது. அதாவது அண்டமாக்கலின் ஆரம்பகட்டத்தில் இருந்த பிரபஞ்சத்தைப் போல.

அந்த இணைப்பு வளர வளர, அண்டங்கள் அனைத்தும் முழுவதுமாக மோதிவிட்டால் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய அண்டங்களில் ஒன்றாக அது மாறிவிடும். ”ஒரு மிகப்பெரிய அண்டமாக்கலைக் கண்டறிந்தது உண்மையிலேயே பிரமிக்கத்தக்க ஒரு விஷயம்தான். ஆனால், இது வானியல் வரலாற்றின் ஆரம்ப கட்டத்தில் நிகழ்ந்தது என்பதால், அதன் இன்றைய தோற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய வல்லமைமிக்க சவால் ஒன்று நம்முன் இருக்கிறது” என்கிறார் கனடாவின் டல்ஹௌசி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் அறிஞர் ஸ்காட் சாப்மான். பதினான்கு அண்டங்களுமே விண்மீன் வெடிப்புகளால் உருவானவைதான். அவை தொடர்ச்சியாக பல நட்சத்திரங்களை வெளியேற்றிக்கொண்டே இருக்கின்றன. வருடத்துக்கு ஆயிரம் நட்சத்திரங்கள் வரை வெளியிடும் அந்தப் பகுதி மொத்தமும் இதுவரை நாம் கண்டதிலேயே மிகவும் உயிர்ப்பு மிக்கதாகச் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. அங்கு வாயுக்கள் மிகவேகமாக ஈர்க்கப்படுவதால் அதைப் படிப்பதும் கடினமாக உள்ளது.

”எந்த நேரத்திலும் இதுபோன்ற செயல்பாடுகள் பிரபஞ்சத்தில் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், அவற்றில் இது ஒரு சிறு பகுதி மட்டுமே. ஆனால், இவற்றின் பிரகாசமான ஒளித்திறன் மற்றும் அதன் மையம் நோக்கிய நகர்வுகளிலும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் ஒழிந்து கிடக்கின்றன” என்கிறார் இதைக் கண்டுபிடித்த குழுக்களில் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எடின்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இவான் ஓடியோ என்பவர்.

Galactic collision

Photo Courtesy: S. Dagnello; NSF/NRAO/AUI

இத்தனைக்கும் இது அண்டங்களின் ஆரம்பக்கட்ட தோற்றமே. ஆக்கத்தின் தொடக்க காலத்திலேயே அவற்றால் இத்தனை வேகமாக எப்படிச் செயல்பட முடிகிறது என்ற கேள்வி அதைக் கண்டறிந்த அனைத்து விஞ்ஞானிகளுக்குமே உள்ளது. அவை வெகுதூரத்தில் இருக்கின்றன. அவற்றின் ஆரம்ப கட்டத்தையே பார்க்கிறோம். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நாம் பார்ப்பது அவற்றின் கடந்த காலத்தை. ஆனால், காலப்போக்கில் அவற்றின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் ஒன்றிணைந்து மிகப்பெரிய அண்டமாக உருவெடுத்து இருக்கலாம்.

இந்தக் கண்டுபிடிப்பு அண்டக் கூட்டங்கள் மற்றும் அவற்றின் மூலம் உருவாகும் பிரமாண்ட அண்டங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். கணினியில் உருவகப்படுத்துவதன் மூலம் அவற்றின் மோதல்களுக்குப் பிறகான நிகழ்வுகளை நாம் ஓரளவு புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

%d bloggers like this: