Advertisements

பி.ஜே.பி-க்கு எதிராக..! – காங்கிரஸும் இருக்குமா?

வெயிலும் கொளுத்துகிறது… டெல்லி அனல் இங்கே பரவுவதால், அரசியலும் தகிக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார்.
‘‘விளக்கமாகச் சொல்லும்’’ என்றோம்.
‘‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணியை அமைப்பதில் வேகமாக இருந்தார். இதில் அவரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும்

முக்கியமானவர்கள். இப்போது, அவர்களின் மனத்தை மாற்றி காங்கிரஸ் தலைமையிலான இரண்டாவது அணியிலேயே இணைந்து செயல் படுவோம் என்ற எண்ணத்துக்கு அவர்களைக் கொண்டுவந்துள்ளார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். கருணாநிதியைச் சந்திக்க சந்திரசேகர ராவ் கோபாலபுரம் வந்ததில் ஆரம்பித்தது இந்த மாற்றம்.’’
‘‘சந்திரசேகர ராவுக்கு வரவேற்பு பலமாக இருந்ததே!’’
‘‘ஆமாம். ஏப்ரல் 29-ம் தேதி மதியம் சென்னை வந்த அவருடன் தெலங்கானாவைச் சேர்ந்த இரு அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ, இரு மேயர்கள் வந்திருந்தனர். கோபாலபுரத்தில் அவரை மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் வரவேற்றனர். கருணாநிதியைச் சந்தித்து ராவ் வணக்கம் வைத்தார். கருணாநிதியும் சிரித்தபடி வரவேற்றார். பிறகு, அவரின் உடல்நிலை குறித்து, மு.க.ஸ்டாலினிடம் சந்திரசேகர ராவ் கேட்டறிந்தார். மூன்றே நிமிடங்களில் இந்தச் சந்திப்பு முடிய, எல்லோரும் கோபாலபுரத்திலிருந்து கிளம்பி, சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு ஸ்டாலின் குடும்பமே சந்திரசேகர ராவை வரவேற்றது. சந்திரசேகர ராவுக்குப் பிடித்தமான உணவுகள் என்னென்ன என முன்கூட்டியே கேட்டு, சென்னை விமான நிலையம் அருகில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றிலிருந்து ஆந்திரா ஸ்பெஷல் உணவுகள் வரவழைக்கப்பட்டன. அவற்றுடன் ஸ்டாலின் வீட்டில் தயாரான உணவுகளும் அவருக்குப் பரிமாறப்பட்டன. விருந்து முடிந்த பிறகு, இரண்டு மணி நேரம் மீட்டிங் நடந்தது.’’
‘‘மீட்டிங்கில் என்ன பேசப்பட்டதாம்?’’
‘‘மூன்றாவது அணியின் அவசியத்தை சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். அதைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், ‘காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்தால், பி.ஜே.பி-க்கு அது சாதகமாகப் போய்விடும். மாநில அளவில் வலுவான கட்சிகளாக இருப்பவை, அந்தந்த மாநிலத்தில் அந்த அணிக்குத் தலைமை தாங்கட்டும். அதில் காங்கிரஸ் கட்சியையும் மாநிலங்களின் நிலவரத்தைப் பொறுத்து சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ளது. அதனால், இப்போதே மூன்றாவது அணியைப் பற்றிப் பெரிதாகப் பேச வேண்டாம்’ என்று சொன்னாராம். அதை ஏற்ற ராவ், ‘காங்கிரஸை முற்றிலும் புறக்கணிக்கப் போவதில்லை’ என்றாராம். இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், ஸ்டாலினை போனில் அழைத்துள்ளார் மம்தா பானர்ஜி. ராவிடம் தான் தெரிவித்த கருத்துகள் குறித்து மம்தாவிடம் ஸ்டாலின் பகிர்ந்துகொண்டாராம். அதைக் கேட்ட மம்தாவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதையடுத்து, அவரும் கருணாநிதியைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.’’

‘‘அப்படியானால் மம்தாவும் விரைவில் கோபாலபுரம் வருகிறாரா?’’
‘‘கடந்த மாதமே அவர் வருவதாக இருந்தது. அப்போது, காவிரி மீட்புப் பயணத்தில் மு.க.ஸ்டாலின் பிஸியாக இருந்ததால், அது தள்ளிப்போனது. அநேகமாக, மே இரண்டாவது வாரத்தில் கோபாலபுரத்துக்கு மம்தா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.’’ 
‘‘சந்திரசேகர ராவுடன் வேறு ஏதாவது ஸ்டாலின் தரப்பில் பேசப்பட்டதா?’’
‘‘ஆம். மே 10-ம் தேதி, தெலங்கானாவில் 80 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தாராம் ராவ். எனவே, ஸ்டாலின் போகிறார். விரைவில் சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை நடத்துகிறார் ஸ்டாலின். அதில், சந்திரசேகர ராவும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். அவரும் கண்டிப்பாகக் கலந்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.’’
‘‘திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் போர்டு உறுப்பினராக தமிழகத்திலிருந்து யாரும் நியமிக்கப்படவில்லை என்பது சர்ச்சையாகியுள்ளதே?’’
‘‘வழக்கமாக இதில் 19 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். இரண்டு வருட பதவிக் காலம். தற்போது, 18 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர். ஓர் இடத்தை காலியாக விட்டிருக்கிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. தமிழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவரை அரசு சிபாரிசு செய்தால், அந்த இடத்துக்கு நியமிக்க முடிவெடுத்துள்ளாராம். யாரை சிபாரிசு செய்யலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். பிரபல பால் நிறுவன உரிமையாளர் பிரம்மானந்தம், சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் இயங்கும் தமிழ்நாடு அட்வைஸரி கமிட்டியின் துணைத்தலைவராக உள்ள ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் ரேஸில் இருக்கிறார்கள்.’’ 

‘‘மத்திய அதிவிரைவுப் படையினர் டெல்டா மாவட்டங்களுக்கு விசிட் வந்தது வெறும் பயிற்சிக்காகத்தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் சொல்லியிருக்கிறாரே?’’
‘‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார் முதல்வர். தமிழகத்தில் கோவையில் தான் மத்திய அதிவிரைவுப் படையினரின் கேம்ப் உள்ளது. தென் மாநிலங்களில் மாநில போலீஸா ரால் கட்டுப்படுத்த முடியாத கலவரங்களை அடக்க, இவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால், இவர்களின் மூவ்மென்ட் அந்தந்த மாநில அரசுகளின் கண் அசைவைப் பொறுத்தே இருக்கும். மாநில உள்துறைக்குத் தெரிந்துதான், கோவையிலிருந்து டெல்டா ஏரியாவுக்கு அதிவிரைவுப்படை போனது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என டெல்டா மாவட்டங்களில் நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழக அரசின் போலீஸ் இந்த விவகாரத்தில் கோபம் காட்டினால், அது எடப்பாடி அரசுக்கு எதிராகத் திரும்பும். இதை யோசித்துத்தான், மத்திய அதிவிரைவுப் படையினரைக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.’’
‘‘சசிகலா குடும்பத்தில் குழப்பம் உண்டாகிவிட்டதால், எடப்பாடி தரப்பு குஷியாக இருக்கிறதே?”
‘‘ஆமாம். 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்திருக்கும் நிலையில், தினகரன் பக்கம் இருக்கும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களைத் திவாகரனை வைத்து இழுக்க முயற்சி நடக்கிறது. அதைத் தடுக்க, தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மூவர் உள்பட 21 பேரையும் கூட்டிச்சென்று சிறையில் சசிகலாவைச் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. வரும் வாரத்தில் இந்தச் சந்திப்பு இருக்கலாம்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: