தசை வலிக்கு தனி சிகிச்சை

நம்மைச் செயல்படவிடாமல், முழுவதுமாக ஓர் இடத்தில் முடங்க செய்வது வலி. இந்த வலிக்கான முக்கிய காரணம் என்ன என்பது, நிறைய பேருக்கு இன்னும் தெரியாமல் உள்ளது. எனவே, உடலில் எங்கேயாவது வலி ஏற்பட்டால் தைலம் தேய்ப்பதையோ அல்லது உடனே எலும்பு மருத்துவரிடம் செல்வதையோ வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

என்ன காரணத்தால் வலி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதே வலியிலிருந்து நிரந்தர நிவாரணம் தரும் என வலியுறுத்துகிறார் மூட்டுதசை இணைப்பு திசுநோய்கள் நிபுணரான தமிழ்ச்செல்வம்.
‘‘ஒவ்வொரு நாளும் விதவிதமான நோய்கள் பெருகி வரும் சூழலில், முடக்குவாதவியல் என்ற Rheumatology பற்றி பரவலாக பலரும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அநேகமாக நம்மில் பலருக்கு 5 வயது முதல் 75, 80 வயது வரை கழுத்து, மார்பு, முதுகு, மூட்டு ஆகிய உறுப்புகளில் ஏற்படுகிற எல்லா வலிகளுக்கும் முக்கிய காரணமாக, மூட்டு தசை இணைப்பு திசு சம்பந்தப்பட்ட நோய்தான் முக்கிய காரணமாக உள்ளது.
முடக்குவாத நோய்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லாத காரணத்தால் மூட்டு பகுதியில் வலி என்றால் உடனே எலும்பு முறிவு மருத்துவரிடம் செல்கின்றனர். கை, கால்களில் வலி மற்றும் எரிச்சல், கை விரல்கள் சுருங்குதல், முதுகில் இருந்து தொடை பகுதிக்கு வலி பரவுதல் போன்ற பாதிப்புகளுக்கு நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற ஆரம்பிக்கின்றனர்.
எந்த வலி எதனால் ஏற்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியாது. உடலில் எந்த உறுப்பு வலிக்கிறதோ, அதைப்பற்றி மருத்துவரிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால், உண்மையில் நடப்பது என்னவென்றால் முதுகின் கீழ் பகுதியான இடுப்பில் வலது மற்றும் இடது பக்கம் என வலி மாறிக் கொண்டே இருக்கும்.
பெரும்பாலும் கீழ் முதுகுவலியால்(Low Back Pain) ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களும் மற்றும் கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளில் ஈடுபடுகிற இளம் வயதினரும்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வலி காரணமாக இவர்களால் தொடர்ந்து ஓர் இடத்தில் உட்கார முடியாது. எனவே, அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை கழிவறை அல்லது பக்கத்தில் உள்ள இடங்களுக்கு சென்று வருவார்கள். அதன் பின்னர், உட்கார்வார்கள். மீண்டும் எழுந்து செல்வார்கள். இவ்வாறு செய்யும்போது வலி குறைந்தது மாதிரி உணர்வார்கள்.
ஓய்வு எடுக்கும்போது வலி அதிகமானால், அதற்கு முடக்குவாதவியல் பிரச்னை காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதாவது நீங்கள் ஓய்வெடுத்த பிறகு, கழுத்திலோ, முதுகின் கீழ், நடுப்பகுதி என ஏதாவது ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அது மூட்டு தசை இணைப்பு திசு சம்பந்தப்பட்ட வலியாக இருக்கலாம்.
நம்முடைய உடலில் சிறிய மூட்டு, பெரிய மூட்டு, பந்து கிண்ண மூட்டு என பலவகையான மூட்டுகள் காணப்படுகின்றன. கை விரல்களில் 15, 20 மூட்டுகள் உள்ளன. மூட்டில் வலி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எனவே, மூட்டு வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எது என்பதை அறிய முடியாது. இந்த மூட்டைச் சுற்றி Synovium என்ற மெல்லிய சவ்வு அமைந்துள்ளது. இந்த சவ்வு சிவந்து போவதால், ஒருவருக்கு மூட்டில் வலி ஏற்படுகிறது.
காலையில் தூங்கி எழுந்த உடன் கை, கால்கள் இறுக்கமாக காணப்படும். நடக்க சிரமமாக இருக்கும். கதவைத் திறக்கவோ, ப்ரஷ் பண்ணவோ முடியாது. வேலை செய்யச்செய்ய 30 நிமிடங்கள் கழித்து இயல்பு நிலை ஏற்படும். மாலை நேரத்தில் இறுக்கம் முழுவதும் குறைந்துவிடும். இரவில் மீண்டும் இறுக்கம் அதிகமாகும். குளிர்காலத்தில் வழக்கத்தைவிட, கை, கால்களில் இறுக்கம் அதிகமாகும்.
உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படுகிற மாறுபாடுகள்தான் ஆர்த்தரைட்டிஸ் என்று சொல்லப்படுகிற இந்த மூட்டு அழற்சி. இது நோயல்ல. இது நமது
உடலில் ஏற்படுகிற பல நோய்களுக்கான அறிகுறி. இவற்றை வைத்துக்கொண்டு, நமக்கு என்ன நோய் வந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்கலாம். மூட்டு அழற்சி என்ற பாதிப்பு ஒருவருக்குப் பரம்பரை பரம்பரையாக வரலாம். உடலில் தோன்றும் தொற்று மூலமாக ஏற்படலாம்.
முக்கியமாக, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், மலத்துடன் சளி, ரத்தம் வருதல், மலத்தில் காணப்படுகிற கிருமிகள் காரணமாக இப்பாதிப்பு வரும். முடக்குவாத நோய்களில் 150-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இதில், சரவாங்கி நோய் என்ற முடக்குவாத நோய் உட்பட பெரும்பாலான நோய்கள் இளம்பெண்களைத் தாக்குகிறது. குறிப்பாக, 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களை அதிகளவில் பாதிக்கிறது.
கீழ்மூட்டு வாதம், சரவாங்கி நோய் போன்ற முடக்குவாதம் தொடர்பான நோய்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், தாயிடம் இருந்து குழந்தைக்கு மரபணு காரணமாக பரம்பரையாக ஏற்படுதல், மாதவிலக்கு நின்றுபோதல். முட்டியைப் பாதுகாக்கும் சவ்வை கிருமி என நினைத்து, வெள்ளை அணுக்கள் தாக்குதல் போன்ற காரணங்களால் பெண்களை அதிகளவில் பாதிக்கிறது.
இவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு திண்மை குறைவு, சர்க்கரை நோய் ஆகியவற்றால் வரலாம். மூட்டில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் கீல்
வாதம்(Gout) ஏற்படுகிறது. இளம்வயது பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பல் ஈறுகளில் ரத்தம் கசியும். வெயிலில் சென்றால், தோலில் தடிப்பு உண்டாகி, விரைவில் களைப்படைவார்கள். நீரில் கை வைத்தால் சருமம் வெளுக்கும். முழங்காலில் வலி ஏற்பட்டாலே, உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
ஆண்களுக்கு 20, 25 வயதிலேயே முதுகுத் தண்டுவட வாதநோய்த் தாக்கும். இதனால், ஆபத்து ஒன்றும் ஏற்படாது. ஆனால், செயல்பட விடாமல் முடக்கிவிடும். மதுப்பழக்கம் உடையவர்களுக்கு இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், இதில் Purine என்ற பொருள் அதிகமாக உள்ளது. இளம் வயது ஆண்கள் முதுகு தண்டுவட நோய், தசைவலி ஏற்பட்டால் உடனடியாக எலும்பு முறிவு மருத்துவரிடம் செல்கின்றனர்.
அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. இந்நோயைக் குணப்படுத்துவதற்கென்று அரசு மருத்துவமனைகளில் விலையுயர்ந்த தரமான மருந்து, மாத்திரைகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. நோயாளிகளுக்கு 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விலையிலான ஊசிகள் எவ்வித கட்டணம்
இல்லாமல் தரப்படுகிறது.
தசைவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எழவும், நடக்கவும் சிரமப்படுவார்கள். திரும்பிப் படுக்கவும் இவர்களால் முடியாது. தசையைத் தொட்டாலே இவர்கள் வலியால் அவதிப்படுவார்கள். சிகிச்சைக்காக வருபவர்களின் உடலில் எந்த தசை வலிக்கிறது என முதலில் பரிசோதிப்போம். முக்கியமாக, கை தசை, கால் தசை பாதிக்கப்பட்டு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்போம். பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சிகிச்சையை உடனே ஆரம்பிப்போம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து, ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வோம்.
இதற்காகவே தசைவலி நீக்கு சிகிச்சை என தனிப் பிரிவே அரசு மருத்துவமனையில் இயங்குகிறது. இந்த துறையின் கீழ் பணிபுரியும் மருத்துவர்களிடம்
சென்றால் நிவாரணம் கிடைக்கும். தசைவாத நோய்க்காக, மூட்டு இணைப்புகள் மற்றும் நரம்புகள் வழியாக ஊசி போடுவோம். மூட்டு தசைவாத நோய் இதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புக்களையும் தாக்கும் வாய்ப்பு உண்டு. எனவே, மாத்திரை சாப்பிடும்போது, பிற உறுப்புகள் ஏதேனும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதா என கண்டுபிடிக்க வேண்டும்.
முடக்குவாத நோய்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை மிகவும் முக்கியம்.இந்த நோய்க்கான மருந்து, மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாக தரப்படுகின்றன. பொதுவாக, முடக்குவாத நோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இந்நோய்க்கான அறிகுறிகள் எவை என்பது இன்னும் நோயாளிகளுக்கும், அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் தெரியவில்லை.
முழங்கால் வலி எவ்வளவு நாள் உள்ளது? அடிக்கடி வருகிறதா? முக்கியமாக, 45 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களைத் தாக்குகிறதா? புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள்,ஆஸ்துமாவுக்காக மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் போன்றவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்நோய் அழற்சியாகவும் இருக்கலாம். எலும்பு திண்மை குறைவு காரணமாகவும் இந்த நோய் வரலாம். எனவே, இளம் வயதினர், முதுமைப்பருவத்தினர் என அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

%d bloggers like this: