கமல் கட்சிக்கு யார் நிர்வாகிகள்?

ழுகார் உள்ளே நுழைந்ததும் சில துண்டுச்சீட்டுகளை டேபிளில் போட்டார். ‘‘ஒவ்வொரு சீட்டிலும் ஒரு விஷயம் எழுதியிருக்கும். எடுத்துப் பிரித்து, உள்ளே இருப்பதைப் படித்தால் நான் தகவல் சொல்கிறேன்’’ என்று தயாரானார்.

முதல் சீட்டை எடுத்து, ‘‘ஆடிட்டர் குருமூர்த்தி?’’ என்றோம்.
‘‘சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குருமூர்த்தி பேசினார். அங்கு நிருபர்களைச் சந்தித்த அவர், ‘ரஜினிக்கு நான் ஆலோசகர் இல்லை. ஊடகங்கள் அப்படிச் சொல்கின்றன. அது உண்மையாக இருந்தால், எனக்கு மகிழ்ச்சிதான்’ என்றார். அங்கு அவர் பேசியதற்கும், ரஜினி தன் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசியதற்கும் நிறைய ஒற்றுமைகள். ‘தமிழகத்தில் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் நிலவுகிறது. ரஜினி அதை நிரப்புவார். தமிழகத்தில் இப்போது இருக்கும் எந்த எம்.எல்.ஏ-வும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. தங்களை ஜெயிக்கவைக்கிற ஒரு தலைவரை அவர்கள் கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே இந்த ஆட்சி வீழ்ந்துவிடுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்’ என்றார் குருமூர்த்தி. அதற்கு அடுத்த நாள், தன் மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்த ரஜினி, ‘இப்போதைக்கு தமிழக சட்ட மன்றத்துக்குத் தேர்தல் வராது’ என்றார். இருவரின் பேச்சுகளிலும் இருக்கும் ஒற்றுமைகள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘ஆளும்தரப்பிலிருந்து நிறையப் பேர் விலகி ரஜினியிடம் செல்வார்கள் என்பதைத்தான் குருமூர்த்தி சொல்கிறாரா?’ என அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நிறையப் பேர் விசாரிக்கிறார்கள்.’’
‘‘ரஜினி?’’
‘‘என்னதான் குருமூர்த்தி ‘பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையும், மக்கள் மத்தியில் ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கும் இணைந்தால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்’ என்று சொன்னாலும், ரஜினி தெளிவாகச் செயல்படுகிறார். பி.ஜே.பி தன்னை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதை அவர் விரும்பவில்லை. ஆனால், பி.ஜே.பி-யைத் தேவைப்படும் அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ள ரஜினி தயங்குவதும் இல்லை. பிரதமர் மோடிக்கு எதிராக இதுவரை கடுமையாகப் பேசாத ரஜினி, ‘காலா’ இசை வெளியிட்டு விழாவில், ‘கருணாநிதியின் குரல் மீண்டும் தமிழகத்தில் கேட்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். அது மிக மிக முக்கியமான சமிக்ஞை.’’

‘‘கமல்ஹாசன்?’’
‘‘இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குருமூர்த்தி பேச வந்தபோது, கமல்ஹாசன் பேசிமுடித்திருந்தார். இருவரும் கைகுலுக்கிக்கொண்டனர். கமல் ஹாசன் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சாமர்செட் என்ற ஹோட்டலில் முக்கியமான சந்திப்புகளை நிகழ்த்துகிறார். அப்படி அவர் குருமூர்த்தியைச் சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல். கமலின் மக்கள் நீதி மய்யத்தைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக பொது அறிவிப்பாணை வெளியிட்டுள்ளனர். அதில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன், துணைத் தலைவர் கு.ஞானசம்பந்தன், செயலாளர் அருணாசலம், பொருளாளர் சுரேஷ் என்று குறிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளனர். இது, கட்சியின் உயர்நிலைக் குழுவில் உள்ள மற்ற நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேச்சாளர் நெல்லை கண்ணனின் மகனும் திரைப்பட இயக்குநருமான சுகா என்பவர்தான் சுரேஷ். அருணாச்சலம் என்பவர் குற்றாலத்தில் லாட்ஜ் நடத்துகிறார். இந்த நியமனங்களில் அதிருப்தி அடைந்த வழக்கறிஞர் சந்திரசேகர், ‘கமலின் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுத்து வேலைசெய்ய முடியவில்லை’ என்று காரணம் சொல்லிவிட்டு வெளியேறியுள்ளார். மக்கள் நீதி மய்யத்துக்கு சினிமா தொடர்பு இல்லாத சில அதிகாரிகள், தொழிலதிபர்களை இழுத்து வந்தவர் அவர்தான். ‘உயர்நிலைக்குழு உறுப்பினர்களிடம் கமல் எந்த ஆலோசனையும் நடத்துவது கிடையாது’ என்று பலரும் சொல்கிறார்கள். மே 25-ம் தேதி தொடங்கி கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற உள்ளது. அதிலாவது தங்கள் ஆலோசனைகள் எடுபடுமா என்று சில உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் எதிர்பார்க்கிறார்கள். சமீபகாலமாக கமல் செல்லும் நிகழ்ச்சிகளில் ஐசரி கணேஷ் தலைகாட்டுவதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.’’ 
‘‘சிலை?’’
‘‘அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வைக்கப் பட்ட ஜெயலலிதா சிலையின் தோற்றம் ஜெயலலிதாவைப் போல் இல்லை என்று சர்ச்சை எழுந்தது அல்லவா? அதேபோல இன்னொரு சிலை சர்ச்சை இது! ஈரோடு மாவட்டத்தில், பவானி ஆற்றில் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடுப்பணையைக் கட்டி, பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்த காளிங்கராயனுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2013-ம் ஆண்டு இதற்காக ரூ. 1 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். மணிமண்டபப் பணிகள் தற்போது முடிவடைந்து திறப்பு விழாவுக்குத் தயாராக இருக்கிறது. மே 13-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதைத் திறந்து வைக்கிறார். ஆனால், காளிங்கராயனின் சிலை கம்பீரமாக இல்லை எனக் கொதிக்கிறார்கள் மக்கள். இந்தச் சிலையை முதல்வர் திறக்கக்கூடாது என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுதவிர, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு போதுமான தண்ணீர் திறக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, எடப்பாடிக்கு விவசாயிகள் கறுப்புக்கொடி காட்டவுள்ளனர்.’’
‘‘நிர்மலாதேவி?’’
‘‘அருப்புக்கோட்டை காவியன் நகரிலுள்ள பேராசிரியை நிர்மலாதேவி வீடு உடைக்கப்பட்டு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுவதால், பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மே 9-ம் தேதி காலை நிர்மலாதேவி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததைப் பார்த்த அந்தப் பகுதியினர், உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார்கள். நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட நேரத்தில் இந்த வீட்டை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனையிட்டு, கம்ப்யூட்டர், செல்போன், டைரி உள்பட சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில்தான், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுத் திருட்டு நடந்துள்ளது. இது நிஜமாகவே திருடர்கள் செய்த வேலையா, அல்லது முக்கிய ஆவணங்களைத் திருட விஷமிகள் செய்த திருட்டா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. அதே நாளில்தான் ரிமாண்ட் முடிந்து மதுரை சிறையிலிருந்து விருதுநகர் நீதிமன்றத்துக்கு நிர்மலாதேவி அழைத்து வரப்பட்டார். அவரிடம், வீட்டில் நடந்த திருட்டு பற்றி காவல்துறையினர் கூறினர். அதைக் கேட்டு, நிர்மலாதேவி அலட்டிக்கொள்ளவே இல்லையாம். அதுபோல் தனக்கு ஜாமீன் கேட்டு எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.’’

%d bloggers like this: