சசிகலாவை விட்டு… தனியே செல்கிறாரா தினகரன்?

தினகரன் – திவாகரன் மோதல் முற்றியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இருதரப்பினரும் ஈடுபட்டு வருகிறார்கள். மன்னார்குடியில் அ.தி.மு.க அம்மா அணியின் அலுவலகத்தைத் திறந்த திவாகரன், அடுத்து சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் தனக்குச் சொந்தமான வீட்டில் வந்து தங்கினார். டெல்டா பகுதி அமைச்சர்களான ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோர் திவாகரனை ரகசியமாகச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. 

இதுபற்றி திவாகரன் ஆதரவாளர்களிடம் பேசினோம். ‘‘திவாகரனை மூன்று அமைச்சர்கள் சந்தித்தனர். ‘தினகரன் பக்கம் உள்ள ஆதரவாளர்களை அவரிடமிருந்து பிரித்து உங்கள் பக்கம் கொண்டுவர வேண்டும். அதைத்தான் முதல்வர் எடப்பாடி விரும்புகிறார்’ என மூவரும் கூறினர். அப்போது, ‘சசிகலாவை மீண்டும் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும். டெல்டா என் கன்ட்ரோலில் இருக்கவேண்டும்’ என்று அமைச்சர்களிடம் திவாகரன் கூறினார்’’ என்றனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு உற்சாகமாகியுள்ள திவாகரனும், அவரின் மகன் ஜெயானந்தும், தினகரன் அணியைச் சேர்ந்தவர்களிடம் போன் மூலம் தனித்தனியாகப் பேசி கரைத்துவருகிறார்கள். ‘‘எங்கள் பக்கம் வந்து விடுங்கள். எதற்கும் பயப்பட வேண்டாம். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கட்சிக்காகச் செலவு செய்து உங்கள் பொருளாதாரத்தை நீங்கள் இழக்க வேண்டியிருக்காது. உரிய மரியாதை கொடுக்கப்படும்’’ எனப் பல வாக்குறுதிகளை வாரிவழங்கியுள்ளனர். அவர்களில் சிலர் துணிச்சலாக ஜெயானந்திடம் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். ‘உங்கள் அப்பா திடீரென பரபரப்பாக அரசியல் நகர்வுகளில் ஈடுபடுவார். பிறகு அப்படியே மாதக்கணக்கில் அமைதியாகி விடுவார். தொடர்ச்சியாக அரசியலில் இயங்க மாட்டார். இப்போதும் அப்படி நடந்தால், மீண்டும் நாங்கள் எங்கு செல்வது?’ என்று கேட்டுள்ளனர். ‘இந்த முறை அப்படி எதுவும் நடக்காது. எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என ஜெயானந்த் அவர்களிடம் உறுதியளித்துள்ளார். 
திவாகரனின் இந்த வேகமான பாய்ச்சல் தினகரனை அசைத்துவிட்டது. மே 8-ம் தேதி தினகரன் பெங்களூரு சென்று சிறையில் சசிகலாவைச் சந்தித்தார். ‘திவாகரன் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவருகிறார். ‘பிரிந்து கிடப்பவர்களை ஒன்றுசேர்த்து தனிக்கட்சியாகச் செயல்படுவேன், நேரம் வரும்போது தாய்க் கழகத்தில் இதை இணைத்துவிடுவேன்’ என நம் ஆதரவாளர்களிடம் பேசிவருகிறார். உங்களை (சசிகலா) அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஏற்பதற்கு எடப்பாடியும் பன்னீரும் தயாராக இருப்பதாகவும் கூறிவருகிறார். ஆனால், அவர்கள் எல்லோரும் என்னைத்தான் தாக்குகிறார்கள். காரணம், குறுகிய காலத்தில் பெரிய அளவில் கட்சியை வளர்த்துள்ளேன். அதனால், என்னைக் கண்டு அவர்கள் பயம். அதனால்தான், எனக்கு எதிராகப் பேசுகிறார்கள். நம் குடும்பத்துக்காகவும் கட்சிக்காகவும் உழைக்கும் நான், எல்லோருக்கும் எதிரியாக இருக்கிறேன். ஒருவேளை உங்களை அ.தி.மு.க-வில் ஏற்றுக்கொண்டால், அவர்கள் பக்கம் சென்றுவிடுவீர்களா? அவர்களுடன் செல்வதாக இருந்தால், என்னை விட்டு விடுங்கள். என் வழியை நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என சற்றுக் கோபமாகவே சொல்லியிருக்கிறார்.
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட சசிகலா, ‘‘எல்லாப் பிரச்னைகளும் சரியாகும் நேரத்தில் நாம் இருக்கிறோம். உன்னைக் கைவிட்டு விட மாட்டேன். பொறுமையாக உன் வேலைகளைப் பார்’’ என்று சமாதானம் சொல்லி தினகரனை அனுப்பி வைத்துள்ளார். அன்றைய தினம் பெங்களூருவிலேயே தங்கிய தினகரன், மறுநாள் மேலூர் சென்றுவிட்டார்.
சசிகலாவை தினகரன் சிறையில் சந்தித்தபிறகு, தங்களின் அடுத்த மூவ் குறித்து தன் ஆதரவாளர் களுடன் ஈக்காட்டுத்தாங்கல் வீட்டில் மே 9-ம் தேதி திவாகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜெயானந்த்தும் உடன் இருந்துள்ளார். அப்போது, ஆளும்தரப்பிலிருந்து தனக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் குறித்தும், ஆட்சியாளர்களிடம் தனக்குக் கிடைக்கும் மரியாதை குறித்தும் பெருமையுடன் சொல்லி அனைவரையும் குஷிப்படுத்தியிருக்கிறார் திவாகரன்.

தினகரன் தரப்பில் பேசியபோது, ‘‘ஆளும்தரப்பி லிருந்து எங்களுக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கப்படுகிறது. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டுதான், கட்சிப் பணிகளை தினகரன் செய்துவருகிறார். ஆனால், அவரைக் குடும்பத்தினர் சிலரே அவமானப்படுத்துகிறார்கள். எனவே, ‘நம்மால் ஏன் எல்லோருக்கும் பிரச்னை… நாம் ஒதுங்கி விடுவோம். நமக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. கட்சிக்குப் பெரிய எழுச்சியும் இருக்கிறது. நம்மை நம்பி வந்தவர் களைக் கைவிட்டுவிடக்கூடாது. அதனால், சசிகலாவே இல்லாமல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நடத்தலாம்’ என்று தன் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசித்தார். தினகரனின் இந்த எண்ணத்துக்கு சசிகலா இப்போதைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்” என்றனர்.
அ.தி.மு.க வட்டாரத்தில் பேசியபோது, ‘‘எடப்பாடியும் பன்னீரும் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் நன்றாகத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலையும் எங்களிடம்தான் உள்ளது. கட்சி அலுவலகமும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பிறகு ஏன் நாங்கள் திவாகரனுடனும் சசிகலாவுடனும் சமாதானமாகப் போக வேண்டும்? அம்மாவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்சிக்குள் அனுமதிப்பதற்கு வாய்ப்பில்லை’’ என்றனர்.

கணவர் நடராசன் மறைந்த சமயத்தில் தஞ்சாவூரில் தங்கியிருந்த சசிகலாவை, மத்திய அரசுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் சந்தித்துள்ளார். அப்போது, ‘மத்தியில் உள்ள முக்கியப் புள்ளிகளிடம் பேசி உங்களை சிறையிலிருந்து வெளியே கொண்டுவருகிறேன். கட்சியில் நடக்கும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சியை உங்களிடம் ஒப்படைக்கச் செய்கிறேன்’ என்று சசிகலாவுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் செய்து முடிக்க, சில நிபந்தனைகளை சசிகலாவுக்கு அவர் முன்வைத்துள்ளார். அதற்கு சசிகலா தரப்பில் ஓகே சொல்லப்பட்டதாம். ஆளும்தரப்பில் சிலர், தினகரன் – திவாகரன் மோதலை, அந்த சந்திப்புடன் முடிச்சுப் போடுகிறார்கள்.

%d bloggers like this: