Advertisements

திவாகரன் என்றுமே கைப்புள்ளதான்!" – தினகரன் ஆதரவாளர்கள்

திவாகரன் – தினகரன் மோதலைத் தொடர்ந்து `அம்மா அணி’ என்கிற பெயரில் தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்த திவாகரன், ”அ.தி.மு.க-வில் பிரிந்து கிடப்பவர்களை எல்லாம் இணைத்து அம்மா அணியில் சேர்ப்பேன். பிறகு, நேரம் வரும்போது அம்மா அணியை அ.தி.மு.க-வோடு இணைப்பேன்” எனச் சொன்னார். அதன்படி வரவிருக்கும் 23-ம் தேதி அம்மா அணியை அ.தி.மு.க-வுடன் இணைக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையே கடுமையான மோதல் எழுந்ததைத் தொடர்ந்து இருவரும் ஒருவர்மீது ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டனர். பின்னர் இரண்டு வாரங்களுக்கு முன்பு மன்னார்குடியில், ”இனி நாங்கள் அம்மா அணி என்கிற பெயரில் தனி அணியாகச் செயல்படுவோம்” எனக் கூறிய திவாகரன் தங்கள் அணிக்கான அலுவலகத்தையும் திறந்தார்.

இதற்காக வைக்கப்பட்ட பெயர் பலகைகளில், திவாகரன், சசிகலா, ஜெயலலிதா படங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன. மேலும், ”சென்னையில் தலைமை அலுவலகம் திறக்கப்படும். அம்மா அணிக்கென்று தனியாகச் செய்தித்தாள் நிறுவனம் ஆரம்பிக்கப்படும். அணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நான் செயல்படுவேன்” என்றெல்லாம் திவாகரன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சசிகலா, `தன் பெயரையோ படத்தையோ திவாகரன் பயன்படுத்தக் கூடாது’ என்றும் ‘என்னை உடன் பிறந்த சகோதரி என்று சொல்லக் கூடாது’ என்றும் அவர் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மூலம் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

இந்த விவகாரத்துக்குப் பிறகு மன்னார்குடியில் உள்ள ‘அம்மா அணி’ அலுவலகப் போர்டில் சசிகலா படத்தை நீக்கிவிட்டு பெரிய அளவில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், திவாகரன் ஆகியோர் இருப்பது போன்ற புதிய விளம்பரப் பலகை வைக்கப்பட்டது. மேலும், ”நான் இனிமேல் சசிகலாவை சகோதரி என்று அழைக்க மாட்டேன்” எனக் கூறிய திவாகரன், ”இன்னும் 10 தினங்களுக்குள் நம் ஆதரவாளர்களுக்கு நல்ல செய்தி வரும்” என்றார்.

திவாகரன் குறிப்பிட்ட அந்த நல்ல செய்தியானது வருகிற 23-ம் தேதி நடக்கப் போவதாகச் சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

அவர்களிடம் பேசினோம்… ”தினகரனுடன் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தபோது, அ.தி.மு.க-வுக்காக உழைத்து தற்போது பல பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பவர்களை எல்லாம் இணைத்து அம்மா அணியில் சேர்ப்பேன். பிறகு நேரம் வரும்போது அம்மா அணியை தாய்க் கழகமான அ.தி.மு.க-வில் இணைப்பேன் என்றார் திவாகரன்.

அதன்படி தினகரன் பக்கம் இருப்பவர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு அமைப்புகளில் உள்ளவர்களிடமும் திவாகரன் பேசி வருகிறார். அவர்களும் அம்மா அணியில் இணைவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜாதகத்தின்படியும் அண்ணன் திவாகரனுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதனால், தான் ஏற்கெனவே கூறியபடி வரவிருக்கும் 23-ம் தேதி ‘அம்மா அணி’யை அ.தி.மு.க-வோடு இணைக்க இருக்கிறார்” என்றனர். 

உள் விபரம் அறிந்தவர்களோ, ”அ.தி.மு.க-வுடன் இணைப்பது என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான். ஆனால், 23-ம் தேதி சேர்வதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை. செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. அதையெல்லாம் முடித்துவிட்டு பெரிய அளவில் கூட்டம் ஒன்றை நடத்தி எங்கள் பலத்தைக் காட்டிவிட்டு அதன் பிறகுதான் அ.தி.மு.க-வில் இணைவோம்” என்கின்றனர்.

தினகரன் ஆதரவாளர்களோ, ”எங்களிடம் இருக்கும் நிர்வாகிகளிடம் பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி திவாகரன் பக்கம் அழைத்தனர். ஆனால், இது வரை யாருமே அங்கு செல்லவில்லை. எங்களைப் பொறுத்தவரை திவாகரன் ஒரு கைப்புள்ளதான். வடிவேலுவைப்போல் காமெடி செய்து வருகிறார். அவர் சொல்வதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. அவர் நினைப்பது எதுவும் நடக்கப்போவதுமில்லை” என்கின்றனர் கூலாக.

Advertisements
%d bloggers like this: